Thursday, 25 June 2026

நாம் மாற்றங்களுக்குத் தகுதியானவர்கள்தானா?

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
------------------------------------
 முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. 
ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.
.
ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
.
வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
.
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. 
.
பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் 

“விபி.சிங்கைக் கொல்வோம் …” 
“கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம் …”

என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வேளையில்…… 
அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. 
.
தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… 
ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… 
ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். 

ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். 
.
ஒரே ஒரு காரணம்தான்.
.
அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)
.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……
.
மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
.
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.
.
இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :

மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. 
.
அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.
.
“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.
.
“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். 
ஆனால்…… 
பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”
.
(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
.
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.
.
ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.
.
தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
.
தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
.
தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.
.
அவ்வளவு ஏன்…… 
பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.
.
நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.
.
ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. 
.
எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. 
.
பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. 
புற்று நோயோடு போராடியபடியும்…… 
வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… 
டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
.
தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… 
நிலமற்ற தொழிலாளர்கள்…… 
“நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… 
என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.
.
ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. 
.
அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். 
.
எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. 
.
கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?
.
இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… 
பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… 
இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… 
அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.
.
ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
.
“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். 

ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். 
.
ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். 
.
இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். 
ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”
.
உண்மைதான்.
.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’
.
சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.
.
எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. 

பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

----------    ----------
எழுத்தாளர் பாமரன்.
----------   ----------

Sunday, 21 June 2026

நூறு சாமி

நூறு சாமி 
மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குனர் சசியின் கைவண்ணத்தில் பெண்களின் மறுமணம் பற்றிய சமூகத்தின் பார்வையை நம் மீது வைத்து நாம் குற்றவாளிகள் என உணர வைக்கிறது .
இன்று இந்த படத்தை பார்க்க செல்வியும் நானும் சென்றிருந்தோம். ஏனோ ஒரு எதிர்பார்ப்புடன் இந்த படத்தை பார்க்கத் தொடங்கினேன் 

ஸ்வாசிக்கா நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார். அவரது மகன்களும் கூட அப்படித்தான். ஒரு பெண் அதிலும் கணவனை இழந்த பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார் என்பதை 100 சதவீதம் யாராலும் காட்டி விட முடியாது அதில் ஒரு பத்து சதவீதம் இந்த படத்தில் காட்ட முடிந்துள்ளது .

தன்னைத்தானே ஒருகைம்பெண் சகுன தடை நம்ப வைத்த நிலை. இந்த சமூகம் எத்தனை வன்முறையாக பெண்களின் மூளையில் இதை பதிய வைத்துள்ளது .

தனது அம்மா பொட்டு வைத்திருப்பதை தாங்கிக்க முடியாத மகன் கண்ணாடியை எடுத்து பார் என்று காட்டும் பொழுது, நாம் பார்த்து நமது கேவலமான மனதை ஒருமுறை அழித்துக் கொள்ள துடிப்பதை மனசாட்சி உள்ளவர்களால் மட்டுமே உணர முடியும். 

ஒரு பெண் மறுமணம் செய்வது என்பது இந்த காலத்திலும் கூட எத்துனை தடைகளை கடந்து வர வேண்டி உள்ளது. முதலில் அவள் அவளை கடக்க வேண்டும். ஒரு அம்மாவாக நான் அந்த வீட்டில் இருக்க முடியுமா? மனைவியாக ஏற்றுக் கொள்ளும் கணவன், ஒரு அம்மாவாக தன்னை ஏற்றுக்கொள்வானா என பதறித் துடிக்கும் காட்சியில் ஒட்டுமொத்த மக்களின் மனதையும் அள்ளிக் கொள்கிறார், கரைய வைக்கிறார், நெகிழ வைக்கிறார் ஸ்வாசிக்கா. 

பாலாஜி சக்திவேல் மிக இயல்பாக வன்மம் நிறைந்த மனதை முகத்தில் காட்டி ,ஒரு பெண்ணை வைத்து தான் சாதியை வளர்க்க முடியும் என்ற வசனம்.
 பெண்பெயருக்குப்பின்  ஜாதி இல்லை ஆனால் பெண்ணை வைத்து தான் ஜாதியை வளர்க்க முடியும் என்று சாட்டையடி வசனங்கள் உறுத்துகின்றன.
 நீ நல்லாவா வச்சிருக்க உன் பொண்டாட்டியை என கேட்கும் பொழுதும் எங்க என்ன கட்டினதிலிருந்து எப்படி அவ சந்தோஷமா இருக்க முடியும்? என அவன் சொல்லும் பொழுதும் அப்படி என்றால் சந்தோஷமாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒருவனை அவள் தேடி அடைந்து கொள்ள முடியும்ல என பாலாஜி சக்திவேல் என்ற கதாபாத்திரத்தின் வழியாக சமூகத்தின் சிந்தனைகளை உடைத்து தகர்த்தெறியக்கூடிய வசனங்கள் சிறப்பு.
ஒவ்வொரு காட்சியும் ,காட்சிக்குள் நம்மை வசப்படுத்த கூடிய தன்மையோடு இருப்பதை உணர முடிகிறது. அண்ணனாக இருக்கக்கூடிய கருணாஸ் இயல்பிலேயே ஆணாதிக்க சிந்தனை உடையவர் .அவர் தன் தங்கையை இப்படித்தான் நடத்துவார் என்பது காட்சிகள் மூலமாகவே உணர்த்தியுள்ளார் .

தன்னுடைய மகன்கள் தனக்காக எடுக்கக்கூடிய சிரமங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு, ஒரு பக்கம் தனது கணவனாக வரக்கூடியவனை எண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் தனது மகன்களை இழந்து விடுவோமோ என்ற தவிப்பும் ,இரண்டும் ஒரு சேர கலந்த தவிப்பை உணர்த்தி உணர வைக்கிறார் ஸ்வாசிக்கா.

விஜய் ஆண்டனி பாத்திரம் மிகச் சிறப்பு.இப்படியும் ஆண்கள் இருக்கலாம் என்று காட்சிப்படுத்திய விதம் அருமை.ஆண்களுக்கு மிக எளிதாக நடக்கும் ஒரு விடயம் பெண்களுக்கு என்று வரும் போது இந்த சமூகம் தனது கோர் முகத்தால் அவளைச் சிதைப்பதை காட்டிய விதம் சிறப்பு.

 ஒரு பெண்ணின் உணர்வுகளை கடத்தக்கூடிய படம் கிட்டத்தட்ட 75 ஆண்டு காலம் கழித்து தமிழ்த் திரையுலகம் நல்ல கருவை, சமூகம் சார்ந்த சிந்தனையை நோக்கி திரும்பி உள்ளது என்பதை இயக்குனர் சசி நிருபித்துள்ளார்.
 புதிய பாதையில் நடக்கக்கூடிய தமிழ் திரை உலகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மனத்தடையை பெண்கள் உடைத்து வெளியே எத்தனை வேகமாக வந்தாலும் கூட அதே அளவு தன்னைத்தானே சுருக்கி கொள்ளக்கூடிய சமூக பின்புலம் தான், அவளை தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விடாமல் செய்வதும். சமூகத்தின் சாதி எனும் ஆணிவேர் விஷ வேர், அவளை அவளுக்கான உரிமையை, அவளுக்காக அவள் வாழக்கூடாது என்ற எண்ணத்தை  பெண்கள் ஆண்கள் என அத்தனை பேரும் மனதிலும் பதிய வைத்திருப்பதை இந்த படம் நமக்குச் சுட்டிக்காட்டி உள்ளது.
 இதில் நடித்துள்ள அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
இப்படிப்பட்ட படங்களை அனைவரும் திரையரங்கில் பார்த்து வரவேற்க வேண்டும் ..

Tuesday, 2 June 2026

manichiral மணிச்சிறல்

கோ.லீலாவின் *#மணிச்சிரல்* ஹைக்கூ நூல் மீது, இலங்கையை சேர்ந்த ஹைக்கூ கவிஞர் முகம்மது இர்ஷாத்  அவர்களின் கருத்துரை...
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

தங்களின் நூல் படித்தேன். சிறந்த ஆழமிக்க ஹைக்கூகள் 
🐦
நீர் வரவர
குளத்தில் மறைகிறது 
வண்டியோடிய தடம் 
🐦
ஓடாத கடிகாரம்
சுற்றி வருகிறது
மீன் கூடையை பூனை 
🐦
எச்சமிடுங்கள் பறவைகளே //
காடழிகிறது //
வேண்டும் காடுபேறு //
🐦
போன்ற எண்ணிறைந்த கவிதைகள் மனம் தொட்டன.

வாழ்த்துகள்

தாங்கள் சூழலியல் சிந்தனை மிக்க கவிஞர் என்பதை உணர முடிகிறது. 
*#இஸ்லாமும்_சூழலியலும்* எனும் நூல் தங்களின் சிறந்த படைப்பு.

ஈழத்துத் தமிழ் ஹைக்கூ கவிதைகளில் சூழலியல் எனும் தலைப்பில் முதுமாணி பட்ட ஆய்வை முன்னெடுக்க உள்ளேன். இந்த ஆய்வில் அவ்வப்போது எழும் ஐயங்கள் தீர்த்து நெறிப்படுத்தத் தங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன். 

மிக்க நன்றி 🙏

#புதுக்கோட்டைத்_தமிழ்ச்_சங்கம்* *#நந்தவனம்_மாத_இதழ்* இணைந்து நடத்திய *#5வது_தமிழ்_ஹைக்கூ_உலக_மாநாடு* வழியே எனது ஹைக்கூ மற்றும் ஹைக்கூ ஆய்வுரை நூல்கள், அயல்நாட்டு தமிழ் ஹைக்கூ கவிஞர்களை சென்றடைந்துள்ளன.

குறிப்பாக, துபாய், மலேசியா, இலங்கை பகுதி கவிஞர்கள் தொடர்பு கொண்டு உரையாடுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

எப்போதும் போல், புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை... எப்போ மாறுவேனோ.

நன்றியும்,பேரன்பும்💐💐💐 :
முகம்மது இர்ஷாத்
 Thangam Moorthy அண்ணே முருகேஷ் மு அண்ணே, Nandavanam Chandrasekaran  அண்ணன்மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், நந்தவனம் மாத இதழ், 5 வதுதமிழ் ஹைக்கூ உலக மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள்.

Sunday, 24 May 2026

புதுகையிலிருந்து ஒரு ஹைக்கூ

கவிஞர் புதுகை ஆதிரா மகிழ்வோடு பகிர்கிறார்

#பேராசிரியர்_சா_விஸ்வநாதன்
#அவர்களின்_முதல்_வாழ்த்து❤️
#பேரன்பும் நன்றியும் சார்🙏🏻
வணக்கம்

ஹைக்கூ கவிதையை
'ஓவியத்திற்கு ஒப்பான கவிதை' என்றும் கூறுவர். வாசிக்கிற வாசகனின் மனத்திரையில் புதிய காட்சிகளை ஓவியங்களென வரைந்து செல்லும் சிறப்புக்குரியது ஹைக்கூ. வாசகனின் மூடிய கண்களுக்குள்ளும் காட்சிகளை நகர்த்திச் செல்லும் வல்லமை ஹைக்கூவிற்கு உண்டு.

ஹைக்கூவைப் புரிந்துகொள்ள கூரான பார்வையும், தேர்ந்த மொழியறிவும் இருக்கவேண்டும். மேம்போக்கான வாசிப்பில் வாசகனுக்குள் எந்த மாற்றங்களையும் கைக்கூ நிகழ்த்தாது.

புரிதல் அரிதானவர்களுக்கு ஒரு புதிரைப் போல இருக்கும் ஹைக்கூ. ஆனால் புரிந்து கொண்டவர்களுக்கோ அது ஒரு புதையலாகிவிடும். ஹைக்கூவிலிருந்து விலகி நின்றால் அது வெறும் வார்த்தைகளின் மாயம்தான். நெருங்கி வருபவர்களுக்கோ அது ஒரு இயற்கை நேசம்; மானுட நேயம். ...

எதையும் ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யும் கவிஞர் ஆதீராவின் இந்தப்
' பாதங்களுக்குள் நழுவும் மணல்' நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன ஹைக்கூ வெனும் குறுமணல்கள். கொஞ்சமாய் அள்ளிக் கொள்ளுங்கள்; உங்கள் காதுகளில் பூமியின் இதயம் துடிப்பதும் கேட்கும்; கடலின் ஓங்கார முழக்கமும் நிச்சயம் கேட்கும்.

-கவிஞர் மு.முருகேஷ் நூலின் அணிந்துரையில்

                              .....
புதுக்கோட்டைக் கவிஞர், புதுகை ஆதீரா (நாகலட்சுமி ராஜகோபாலன் ) அவர்களின் "பாதங்களுக்குள் நழுவும் மணல்", புதுக்கோட்டையில் நடைபெற்ற 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டில் வெளியிடப்பட்டது . இது அவரின் இரண்டாவது ஹைக்கூ நூல். முதல் நூல் 2023 ல் வெளிவந்த"காலம் தப்பிய மழை ". இந்த கவிதை நூலுக்கு கவிஞர் மு.முருகேஷ், கவிஞர்.பழநிபாரதி இருவரும் சிறந்த அணிந்துரை வழங்கியுள்ளனர். இந்த அணிந்துரைகள் ஹைக்கூவின் வடிவத்தையும் , ஆதீராவின் கவிதைகளின் சிறப்பையும் பேசுகின்றன. இந்த கவிதைத் தொகுப்பில் 146 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. அதில் 10 கவிதைகள் உங்கள் பார்வைக்கு ...

கூட்டிலிருந்து விடுபட்ட பறவை
வானில் பறந்தபடியே தேடும்
கூடு கட்ட மரங்களை
பக். 13.

மரக்காலில் நெல்மணிகள்
அளக்க அளக்க வளர்கிறது உழவனின் புன்னகை
பக். 14

தென்னையோலை
வேறொரு மரத்தில்
குருவிக்கூடு
பக். 21

தொடர்வண்டிப் பயணம்
கூடவே வருகின்றன
தண்டவாளங்கள்
பக்.25

சுதந்திர தினம்
மூவர்ணக்கொடி மேலேறியதும்
உதிர்ந்தன பூக்கள்.
பக். 35

வெட்டிய மரங்கள்
வாழ்க்கைக்கு ஒளியேற்றின
புத்தகங்கள்.
பக். 36

போதையின் பாதையில்
தடுமாறி விழுகிறார்கள்
பிஞ்சுக் குழந்தைகள் 
பக். 46

சுதந்திர இந்தியா
ஆங்கிலேயர் தூண்டிச்சென்றனர்
அரியணை ஆசையை
பக். 52

பங்காளிச் சண்டை
வேலி தாண்டித்  தலைநீட்டும்
செம்பருத்திப் பூ
பக். 68

மகன்களின் பிரிவினை
வேலி தாண்டிப் பூத்திருக்கும்
அம்மா வைத்த செம்பருத்தி.
பக். 72.

#அகநி வெளியீடு
📞94443 60421
2026
ரூ.120.

Monday, 18 May 2026

ரெமீலா தாப்பர்

அசோகர் அளவுக்கு இலங்கையில் அதிக தாக்கம் செலுத்திய வேறு எந்த இந்திய மன்னரும் கிடையாது. பவுத்தம் என்ற மதம் இலங்கையில் பரவ மூலக்காரணமே அசோகர் தான் என்று எங்கள் வரலாறு நூற்களே சொல்லும் போது வேறு ஏதாவது விவாதத்திற்குற் போக முடியுமா? 

ஆகவே அசோகரின் வரலாறை விரிவாக தெரிந்துக்கொள்ள தமிழ்நாட்டு எழுத்தாளர் Marudhan Gangadharan எழுதிய அசோகர் நூலை 2024 ஆம் ஆண்டு வாங்கினேன். ஒரு வகையில் அந்த நூல் பண்டைய இந்தியாவின் வரலாறையும் உள்ளடக்கியதாக இருந்தது. அந்த நூலில் அடிக்கடி ஒரு பெயர் வந்துக்கொண்டே இருந்தது அந்த பெயர் "ரோமிலா தாப்பர்" ஆணா பெண்ணா என்று கூட தெரியாது. ஆனால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போது தேட தொடங்கினேன் யார் இந்த ரொமிலா தாப்பர்? ஆச்சரியம் என்னவென்றால் அவர் எழுதிய "சோமநாதர்" நூல் என்னிடம் இருந்தது! 

வரலாறு என்பது அரசர்களின் பெயர்களையும், போர் நடந்த ஆண்டுகளையும், அவர்கள் கட்டிய அரண்மனைகளையும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல அது சாதாரண மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களை உள்ளடக்கியது என்று இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்.

பழங்கால இந்திய வரலாற்றை (Ancient Indian History) காலனித்துவ பார்வையிலிருந்தும், அதீத தேசியவாதப் பார்வையிலிருந்தும் விடுவித்து, அறிவியல் மற்றும் தர்க்கரீதியாக அணுகிய இவரது பயணம் மிக மிகச் சுவாரஸ்யமானது.

1930-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி லக்னோவில் பிறந்த ரொமிலா தாப்பரின் குடும்பம் ஒரு ராணுவப் பின்னணியைக் கொண்டது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், லண்டனில் உள்ள புகழ்பெற்ற SOAS (School of Oriental and African Studies) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அங்கே அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புகழ்பெற்ற 'The Wonder That Was India' என்ற நூலை எழுதிய மாபெரும் வரலாற்றறிஞர் ஏ.எல். பாஷம். லண்டனில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய ரொமிலா, குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இணைந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கினார்.

ரொமிலா தாப்பருக்கு முன்பு வரை, இந்திய வரலாறு என்பது பெரும்பாலும் 'மன்னர்களின் வீரதீரச் செயல்களாகவே' எழுதப்பட்டு வந்தது. ஆனால் ரொமிலா தாப்பர், தொல்பொருள் ஆய்வுகள் (Archaeology), நாணயவியல் (Numismatics), மொழியியல் மற்றும் சமூகவியல் தரவுகளைப் பயன்படுத்தி வரலாற்றை எழுதத் தொடங்கினார்.

உதாரணமாக, மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்ததற்கு வெறும் அரசர்களின் பலவீனமோ அல்லது மதம் மட்டுமே காரணமல்ல. அது ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிர்வாகக் கோளாறுகளால் ஏற்பட்டது என்பதைத் தரவுகளுடன் நிறுவினார். அவரது புகழ்பெற்ற நூலான "Asoka and the Decline of the Mauryas" அசோகரை வெறும் ஒரு மதப் பிரச்சாரகராக மட்டும் பார்க்காமல், 'தம்மா' என்ற கொள்கையின் மூலம் ஒரு மாபெரும் பேரரசை ஒன்றிணைக்க நினைத்த ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரியாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அவரது ஆய்வுகளில் மிக முக்கியமானது குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற சோமநாதர் ஆலயம் குறித்த அவரது புத்தகம் (Somanatha: The Many Voices of a History). முகமது கஜினியின் படையெடுப்பால் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்டதை வைத்து, ஒட்டுமொத்த இந்து-முஸ்லிம் வரலாற்றையும் ஒரு 'பகைமை வரலாறாகவே' எழுதும் போக்கினை அவர் விமர்சித்தார்.

அந்தப் படையெடுப்பு நடந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுகள், சமணர்களின் குறிப்புகள், அரபுப் பயணிகளின் பதிவுகள் எனப் பல கோணங்களில் அந்த நிகழ்வை ஆராய்ந்தார். அரசர்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்கவே படையெடுத்தார்கள் என்பதையும், அதைத் தாண்டி அங்கு இரு சமூக மக்களுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கமும், வியாபாரத் தொடர்புகளும் இருந்ததை அந்த நூலில் அவர் தைரியமாகப் பதிவு செய்தார்.

ரொமிலா தாப்பரின் நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணம் உண்டு. இந்திய அரசு அவருக்கு 1992-ஆம் ஆண்டும், பின்னர் 2005-ஆம் ஆண்டும் (மன்மோகன் சிங் ஆட்சியில்) இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை அறிவித்தது.

ஆனால் அந்த இரண்டு முறையும் அவர் அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். "நான் ஒரு கல்வியாளர். எனக்கு விருதுகள் வழங்குவதாக இருந்தால், அது கல்வி நிறுவனங்களோ அல்லது அறிவுசார் அமைப்புகளோ வழங்கினால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். அரசாங்கம் வழங்கும் அரசு விருதுகளை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்" என்று கூறி இந்திய அரசையே திகைக்க வைத்தார். எனினும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலுக்கான நோபல் பரிசு என்று கருதப்படும் 'க்ளூக் பரிசு' (Kluge Prize - 2008) உட்பட சர்வதேச அளவில் பல மாபெரும் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

ரொமிலா தாப்பரின் முற்போக்கான, மதச்சார்பற்ற வரலாற்றுப் பார்வைக்காக அவர் வலதுசாரி அமைப்புகளாலும், இந்துத்துவா ஆதரவாளர்களாலும் இன்றுவரை மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அவரை ஒரு "மார்க்சிய வரலாற்றாசிரியர்" என்று முத்திரை குத்தி, சமூக வலைத்தளங்களில் பல அவதூறுகள் பரப்பப்பட்டன. 2019-ஆம் ஆண்டு JNU நிர்வாகம் அவரது தகுதியை மீண்டும் நிரூபிக்கச் சொல்லி அவரது CV-யை கேட்டது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இன்று 90 வயதைக் கடந்த நிலையிலும், ரொமிலா தாப்பர் சோர்வடையாமல் தொடர்ந்து வரலாற்றை எழுதிக் கொண்டும், சமகால அரசியல் குறித்து தைரியமாகக் குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்.

"வரலாறு என்பது நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி; அதைக் கட்டுக்கதைகளைக் கொண்டு நிரப்பக் கூடாது" என்று உரக்கச் சொல்லும் ரொமிலா தாப்பர், இந்திய அறிவுலகத்தின் ஒரு மாபெரும் சிங்கம் என்றால் அது மிகையாகாது!

- Abdullah Ibnu Naseer 

#RomilaThapar #AncientIndia #IndianHistory #Ashoka #Historiography #HistoryAndPolitics #Abdullahibnunaseerwriteups

Sunday, 3 May 2026

ai wonder செயற்கை நுண்ணறிவு அற்புதம்

முகநூல் பகிர்வு
குப்புசாமி அவர்களின் பதிவு

எனக்குப் பியானோ வாசிக்கத் தெரியாது. ஆனால் வாசிக்க ஆசை. என்ன செய்யலாம்? சில ஆண்டுகளாவது பயிலவேண்டும். இன்ஸ்டண்ட் காஃபி போல உடனே வாசிக்க வழி உள்ளதா?

மந்திரத்தில் மாங்காய் போலத் தெரிகிறதா? அறிவியல் தான். இதற்கும் ஏஐ துணைசெய்கிறது. 

'ஹ்யூமன் ஆபரேட்டர்' என்றொரு புராஜெக்ட். மனித இயக்கி என்று மொழியாக்கம் செய்யலாம். வேண்டாம். இது 'மனிதர்களை இயக்கும்' ஏஐ. சரியாக வாசித்தீர்களா? மனிதர்கள் இயக்கும் ஏஐ அல்ல. மனிதர்களை இயக்கும். 

விளக்கமாகப் பார்ப்போம். 

MIT (Massachusetts Institute of Technology) கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் தலையாய கல்வி நிறுவனங்களில் ஒன்று. இவர்கள் ஒரு ஹேக்கத்தான் நடத்தியுள்ளனர். அதன் பெயர் MIT Hard Mode 2026. 

இதில் பங்குபெற்ற ஒரு குழு வடிவமைத்தது தான் 'ஹ்யூமன் ஆபரேட்டர்'. இந்த ஏஐயால் நம்முடைய கைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நாம் பயின்றிராத பல்வேறு செயல்களைச் செய்ய முடியும். 

இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்கிறேன். உங்களுக்குப் படம் வரையத் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண் முன்னே இருக்கும் ஒன்றை நீங்கள் வரைய விரும்புகிறீர்கள். 

முதலில் இந்த ஏஐயை அணிந்துகொள்ளவேண்டும். பின்னர் நான் இதை வரைய விரும்புகிறேன் என்று கூறவேண்டும். அவ்வளவு தான். 

அதன் பின் ஏஐயின் மாயம் தொடங்கும். உங்களுடைய கை தானாகவே இயங்கத் தொடங்கும். விரல்கள் நளினமாக நகரும். நீங்கள் வரைய நினைத்ததை வரைந்து முடிக்கும். 

இது போலத் தான் நான் தொடக்கத்தில் சொன்ன பியானோ கதையும். நீங்கள் விரும்பும் மெலடியை பியானோவில் வாசிக்கலாம். அதற்கான கீகளைத் தேடி உங்கள் விரல்கள் செல்லும். உங்கள் கட்டளையில்லாமலேயே. 

இதனை டெமோ செய்து காட்டியுள்ளனர். அதற்கான வீடியோவும் உள்ளது. ஆர்வலர்கள் கண்டடையவும். 

மந்திரத்தில் மாங்காய் எப்படிக் காய்க்கிறது?

இத்தொழில்நுட்பத்தின் மையத்தில் உள்ளது கிளாட். இவர் தான் மூளை. பார்ப்பதற்குக் கேமிரா. கேட்பதற்கு மைக்ரோஃபோன்கள். 

அதெல்லாம் சரி. கைகள் எவ்வாறு நகர்கின்றன? இதற்கு 'எலெக்ட்ரிகல் மஸில் ஸ்டிமுலேஷன்' என்றொரு நுட்பம். இதன் மூலம் குறிப்பிட்ட தசைகளுக்குக் கட்டளையிட முடியும் என்கிறார்கள். 

இது தான் மொத்த அசெம்ப்ளி. என்ன தேவை என்பதை கேமிரா மூலம் அறிகிறது. அல்லது மைக்ரோஃபோன் மூலம். பின்னர் கிளாடானாரைத் தொடர்புகொள்கிறது. அவர் இதற்காக எந்தெந்தத் தசைகளுக்கு என்னென்ன கட்டளைகள் என்பதை முடிவு செய்கிறார். அதை நம் விரல்கள் செய்துமுடிக்கின்றன. 

நம்ப முடியவில்லை தானே. வீடியோ பார்க்கும்வரை நானும் நம்பவில்லை. ஆனால் இது ஏதோ வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் அல்ல. MIT போன்ற கல்விநிறுவனம் சாட்சி சொல்கிறது. ஆமாம் இவ்வாறு தான் நிகழ்கிறது என்கிறார்கள். 

இதை நிகழ்த்திக்காட்டிய குழுவில் ஆறு நபர்கள். தாங்கள் புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. இருக்கும் தொழில்நுட்பங்களை ஒரு புதிய விதத்தில் இணைத்துள்ளோம். அதன் பயன் தான் இந்த ஹ்யூமன் ஆபரேட்டர். 

இப்போதைக்கு இது ஒரு புராடெக்டாக வரவில்லை.  கூடியவிரைவில் வரலாம். இன்றைய சூழலில் இதன் மூலம் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு எல்லைகள் உள்ளன. விரைவில் இவ்வெல்லை பெரிதாகலாம். எல்லாமே முடியும் என்றொரு நாள் விரைவில் வரலாம்.  

மனிதர்கள் கம்ப்யூட்டர்களோடு உரையாடும் முறைகள் காலந்தோறும் மாறிவந்துள்ளன. காமாண்ட் ப்ராம்ப்ட் காலத்திலிருந்து இன்றைய கிளாட் காலம். இன்னும் மாறும். அதன் மூலம் இதுகாறும் நாம் சிந்தித்திராத புதிய வகைக் கருவிகள் வரும்.

நண்பர்களே, இன்று வாத்தியார் சுஜாதாவின் பிறந்த நாள். இந்த ஹ்யூமன் ஆபரேட்டரை, அவர் காலத்தில் எழுதியிருந்தால் சயின்ஸ் ஃபிக்ஷன். ஆனால் இன்று இது தொழில்நுட்பம். நிஜம். 

ஏஐ தழைத்தோங்கி நிற்கும் இக்காலத்தில் சுஜாதா இருந்திருக்கவேண்டும். எப்படியெல்லாம் அதோடு விளையாடியிருப்பார் என்று எண்ணிப்பார்ப்பதே பரவசமாக உள்ளது. 

இந்தக் கட்டுரையை அவர் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதையும் கிளாடானாரிடம் கேட்கலாம். அவருடைய வெர்ஷன் என்று ஒன்றைக்கொடுக்கும். அவரிடம் அதைக் காட்டியிருந்தால் வாசித்துவிட்டு, 'நாட் பேட். குட் ட்ரை' என்று சொல்லிக் கூலாகக் கடந்திருப்பார்.

தமிழில் அறிவியல் கட்டுரைகளை, கதைகளை சுவைபட எழுதிய சுஜாதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வி மிஸ் யூ சார்.

soru


இன்று கிடைத்த இன்னும் ஒரு விருது...

கவிஞர், சிறுகதையாளர், இயற்கை ஆர்வலர், புகைப்பட ,கலைஞர், Sivakumar Ganesan அவர்களின் மதிப்புரை

*#சோறு_உணவு_அரசியல்
கட்டுரைகள்
கோ.லீலா
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

சமீபத்தில் முகநூலில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, நாட்டுக் கோழிக் குழம்பு நான் வைத்தது. சாதம் வீட்டம்மா வைத்தது என்று எழுதியிருந்தேன். அவை நாயகன் அய்யா,சாதமா?சோறா?என்று கேட்ட பிறகுதான் புரிந்தது.சாதம்தான் சார்.பழக்கத்தில் சோறாகி விட்டது என்று சொன்னேன். 

தொடர்ந்த நாட்களில்தான் சோறு உணவு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.

புத்தகத்தை,கோ.லீலா,குடும்பத்தின் அன்னபூரணியான தனது அம்மா சீதை கோவிந்தராஜலு அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.பொருத்தமான சமர்ப்பணம்.

சோறு என்ற சொல்லின் தொன்மை குறித்த கட்டுரை பிரமிப்பூட்டுகிறது.சாதம் உயர்திணையாகவும், சோறு தாழ்திணையாகவும் மாறிய அவலத்தைப் பேசுகிற இந்தக் கட்டுரையில் உள்ள தண்டச் சோறு என்பதைப் போல் தண்ட சாதம் என்கிற வசவு ஏன் இல்லை?என்ற கேள்விக்கான பதிலை யோசியுங்கள்.

இந்தியாவில் 2,00,000க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன என்ற தகவலும்,கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள 173 பாரம்பரிய அரிசிகளும், அவற்றின் பெயர்களும்,அவற்றின் மருத்துவக் குணங்களும், நாம் தொலைத்த அரும் பொக்கிஷங்களை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட வைக்கின்றன.

அரசர்களின் அரிசியான கருப்புக் கவுனி அரிசியின் நற் பயன்கள்,நாம் அலட்சியப்படுத்தும் மட்டை அரிசியின் சிறப்பு பற்றிய கட்டுரை சிறப்பு.

குழைவான நெல்லரிசிச் சோறுதான் அடிசில். இனிப்பான அக்காரவடிசலை அறிவேன்.நெய்யுடை அடிசில்,கொழும் துவை அடிசில்,ஊன் துவை அடிசில் என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு அடிசில்களை அறிந்து கொள்ள உதவுகிறது உணவு வகைகள் கட்டுரை. உண்டிக்கும், உணவுக்குமான வேறுபாடு ஆச்சர்யமானது.

அருந்துதல்,உண்ணல்,உறிஞ்சல் முதலான 26 வகையான உண்ணல் முறைகள்,உணவை வெறுமனே விழுங்கும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.உணவே மருந்தாக இருந்த பழந்தமிழரின் உணவு அறிவியல் வியப்பூட்டுகிறது.

உணவும் பெண்ணும்,இலக்கியத்தில் பெண்களின் உணவு கட்டுரைகள்,உணவுக்கும் பெண்ணுக்குமான இறுகிய பிணைப்பைப் பேசுகின்றன.

சைவ உணவு உயர்ந்தது,அசைவ உணவு கீழானது என்கிற மோசமான பொதுப்புத்தியின் மீது நுட்பமான தாக்குதலை நிகழ்த்துகிறது சைவமும் அசைவமும் கட்டுரை.தலித்துகளின் உணவில் மாட்டிறைச்சியும், பன்றியிறைச்சியும் முக்கிய அங்கம் வகிப்பதற்கு,உயர் வகுப்பினர் வேண்டாமென ஒதுக்கிய மலிவான உணவு என்பதுதான் காரணம் என்கிற தீபா பல்கின்ஸ் தக்கின் கருத்து சிந்திக்க வைக்கிறது.வட மாநில தலித்துகளிடையே ரக்தி என்னும் ரத்தப் பொறியல் ஏன் முக்கிய உணவாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலும் இதையே உறுதி செய்கிறது.

1830ல் க்விட்லட் என்ற ஜோதிடர் கிரகங்களை வைத்து மனித எடையை கணிக்க முடியுமா என்று அறிய B.M.I (Body Mass Index)ஐ உருவாக்கினார்.இன்று அதை டிவத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதர்களை எப்படியெல்லாம் அடிமையாக்கி வைத்திருக்கின்றனர் என்பதையும்,நம் அன்றாட உணவை கார்ப்ரேட்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதையும் தெளிவாகப் பேசுகிறது கார்ப்பரேட் கைப்பிடியில் உணவு கட்டுரை.

பகல்,இரவு கால மாற்றத்தை உணரும் சக்தி சிர்கேடியன் கடிகாரம்,வைட்டமின் டி சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது இப்படி ஆச்சர்யமான தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

தவளையின் மரணணு செலுத்தப்பட்ட தக்காளி,மீனோட மரபணு செலுத்தப்பட்ட ஸ்ட்ராபெரி என்று மரபணு மாற்றம் என்ற பெயரில் அடிக்கப்படுகிற அபாயமான கூத்துகளைப் பேசுகிறது மரபணு மாற்றம் கட்டுரை.

பிற நாடுகளின் மீது விதைகளை வைத்து தொடக்கப்படுகிற போர்களையும்,பூச்சிக் கொல்லி மருந்துகள் எவ்வாறு மனிதர்களின் ஆரோக்யத்தைச் சீர் குலைக்கின்றன என்பதையும் விரிவாகப் பேசும், பசுமைப் புரட்சியின் தீமைகள்,விதையென்னும் பேராயுதம் ஆகிய இரண்டும் முக்கியமான கட்டுரைகள்.

Globalization பற்றி அறிவீர்கள்.Glocalization பற்றி அறிவீர்களா?உணவு அரசியலின் எதிர்காலம் என்கிற முக்கியமான கட்டுரை,அதைத் தெளிவாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில்,மிக முக்கியமாக நான் கருதுவது,வெறுமனே பிரச்சனைகளையும்,அதன் தீமைகளையும் பற்றி மட்டும் பேசாமல்,அதற்கான தீர்வுகளையும் விரிவாகப் பேசுவதுதான்.

கட்டுரைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள், கவிஞர்கள் பிருந்தாசாரதி,பழனி பாரதி போன்றோரின் கவிதைகள்,கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் காட்சிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.

உணவுன்னா அதிரசம் தெரியும்,அதென்ன அரசியல்?போன்ற மெலிதான நகைச்சுவை ஊடாடும் நடையும்,உரையாடல் பாணியும் வாசிப்பவருக்கு எளிதில் நெருக்கமாகின்றன.

கோ.லீலா அவர்களின் கடும் உழைப்பும்,தீராத் தேடலும்,அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியன.

அட்டைப் படம் அழகு.நேர்த்தியான வடிவமைப்பு.

சாதமாகவும்,ரைஸாகவும் அறியப்படும் சோறு மற்றும் நாம் உண்ணும் அல்லது உண்ண வைக்கப்படும் உணவின் பின்னுள்ள அரசியலை மிகத் தெளிவாக, எளிமையாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவர்களுக்கு,அடுத்த வேளை உணவு உண்கையில்,புத்தகத்தின் ஏதாவதொரு வரி நிச்சயம் நினைவில் வரும்.

Saturday, 25 April 2026

இப்போது முடியுமா?

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து, பஞ்சமன் & சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?

2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?

4) முன்பு பஞ்சமன் & சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?

6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?

7) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?

8) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?

9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?

11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?

13) முன்பு ஆர்எஸ்எஸ் தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு என்று அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே! இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?

14) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?

15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

17) முன்று எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே! இன்று அதுபோல் வரி போட முடியுமா?

18) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?

19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?

20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?

21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

24) இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?

25) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?

26) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?

27) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?

28) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?

29) அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?

30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?

31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?

32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?

34) 5 வயசு பார்ப்பன பொடியன் 60 வயசு முதியவரை டேய் குப்பா , டேய் முனியான்னு கூப்பிட்டீங்களே ! இப்ப அப்படி கூப்பிட முடியுமா ?

35 இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார். பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது நீங்கள்தான் என்பது திண்ணம்! பெரியார் பெரும்படை அதனை முறியடிக்கும் எச்சரிக்கை!

Tuesday, 10 March 2026

நன்றி உணர்வு - சோம நாகலிங்கம்

நன்றி உணர்வு 

நன்றி உணர்வு என்றால் என்ன? 

ஒரு கதையுடன் ஆரம்பிக்கலாம். கூண்டில் அடைபட்ட ஒரு புலியை பார்த்து இறக்கப்பட்டு ஒரு மனிதன் அதை கூண்டை விட்டு வெளியே வர உதவுகின்றான். அந்த புளியோ வெளிய வந்தவுடன் அந்த மனிதனை சாப்பிட ஆசைப்படுகின்றது. மனிதன் புலியிடம் கேட்கிறான் நான் செஞ்ச உதவிய நீ எப்படி மறக்கலாம். இவர் செய்த உதவிகளை எப்ப ஞாபகம் வச்சுக்கணும் இல்லையா என்று கேட்கின்றான். அதற்கு அந்த புலி அப்படி ஒன்றும் இல்லை என்கின்றது. 

இவர்கள் பிரச்சனையை அந்த வழியை வந்த ஒரு நாயிடம் கூறுகின்றார்கள்.  அந்த நாயோ, புலி தான் சரி. நான் காலம் காலமாக எனது மாஸ்டருக்கு உதவியாக இருந்தேன். ஆனால் எனக்கு வயதானவுடன் அவன் இந்த காட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். ஆகையால் முன்னர் செய்த உதவிகளுக்கு என்றும் மதிப்பில்லை என்கின்றது அது. 

மனிதன் புலியிடம் இன்னொருவரிடம் கேட்போம் என்று கெஞ்சுகின்றான். அங்கு வந்த குதிரையிடம் அவர்கள் பிரச்சினையை சொன்ன பொழுது நாய் சொன்னதையே குதிரையும் சொன்னது. 

இப்பொழுது மனிதன் கெஞ்சுகின்றான் மூன்றாவது ஒருவரிடம் கேட்போம் என்கின்றான். சம்மதித்து அந்த வழியில் வந்த நரியிடம் கேட்கின்றது. நரி எனக்கு ஒன்றும் புரியவில்லை நீங்கள் முதலில் இருந்து என்ன நடந்தது என்று நடித்துக் காண்பியுங்கள் அப்பொழுது நான் சொல்கின்றேன் என்றது. உடனே புலியும் கூண்டுக்குள் சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது நரி வேகமாக பாய்ந்து கதவை மூடிவிட்டது. அது மனிதனிடம் உன்னை நான் காப்பாற்றி விட்டேன் நீ பதிலுக்கு எனக்கு என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கின்றது. நரிக்கெல்லாம் நான் என்ன திரும்ப செய்யணும் என்று சொன்ன மனிதன் அந்த நரியை விரட்டி விடுகின்றான். 

இந்த கதையை கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகின்றது? 
1. நமக்குச் செய்யும் உதவிகளை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும் 
2. நமது உறவுகளுக்கு தவறான நோக்கம் அடிப்படையாக இருந்து விடக்கூடாது 
3. நமது தேவைகள் நிறைவேறிவிட்டால் நமக்குச் செய்யப்பட்ட உதவிகளை மறப்பது நமது வழக்கம். 
இதில் எந்த பதில் உங்களுக்கு பொருத்தமாக தோன்றுகின்றது. உங்கள் வாழ்க்கையில் யாராவது உங்களை இப்படி ஏமாற்றி இருந்தால் அது சுவைபட இருக்குமானால் இங்கு நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். 

இப்பொழுது நாம் நன்றி உணர்வை பற்றிப் பார்ப்போம்

ஒரு விஷயத்தையோ ஒரு மனிதரையோ பாராட்ட வேண்டும் என்று தோன்றினால் அல்லது நாம் அதற்காக அல்லது அவருக்காக நன்றியுடன் இருந்தால் அதுதான் நன்றி உணர்வு 

இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
1.நமக்கு கிடைத்தவற்றிற்கு, நம்மிடம் இருப்பவைகளுக்கு நன்றியுடன் இருப்பது
2.வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை அடையாளம் காணுதல் மற்றும் பாராட்டுதல்
3.பிறரிடம் இருந்து வெளிப்படும் கருணை மற்றும் பரிவினை அடையாளம் காணுதல்
4.நன்றியையும் பாராட்டையும் வெளிப்படையாகத் தெரிவித்தல்

இந்த நொடியில் அதுவும் விடிகாலை 6:00 மணிக்கு நீங்கள் யாருக்கு அல்லது எதற்கு நன்றிக் கடன் பட்டதாகத் தோன்றுகின்றது?
1.உங்கள் குடும்பம் 
2.உங்களின் நல்ல உடல் நலம் 
3.உங்களுக்கு உதவும் சக ஊழியர் 
4.காலையில் காதலுடன் காபி கொடுத்த மனைவி 
5.கைவசம் உங்களுக்கு இருக்கும் வேலை மற்றும் தொழில்

மேலே குறிப்பிட்ட ஐந்து விஷயங்களில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ன காரணம் என்று குறிப்பிடுங்கள்.

நன்றி உணர்வின் சக்தி 
1.உங்களை மகிழ்ச்சியாக வைக்கின்றது 
2.உங்களது ஸ்ட்ரெஸ் குறைகின்றது
3.உங்கள் உறவுகள் மேம்படுகின்றன
4.உங்களின் நேர்மறை சிந்தனையை கட்டமைக்கின்றது
5.உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது
6.வளமான வாழ்க்கையை உருவாக்கித் தருகின்றது

இதைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு யாரைப் பாராட்டத் தோன்றுகிறது? இதில் உண்மை என்னவென்றால் நீங்கள் எந்த அளவிற்கு வாழ்க்கையை பாராட்டுகின்றீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கையும் நீங்கள் பாராட்டுவதற்கான விஷயங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

நன்றி உணர்வின் பரிமாணங்கள் 

1.பிறருக்கு நன்றியுடன் இருப்பது 
நம்மை பெற்றெடுத்த பெற்றோர், நமக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் குருநாதர்கள், அப்போ பொழுது உதவி செய்த சக ஊழியர்கள், நமக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நமக்கு கொடுக்கும் (பணம் கொடுத்தால் தான்) வென்டார்கள் என்ன நமது நன்றிக்குரியவர்கள் பலர். இவர்களால் நமது வாழ்வு மேம்பட்டு இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. 
2.நமக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கு நன்றி
நமக்கு கிடைத்த கல்வி, நாம் போராடி பெற்ற வேலை, வாழ்க்கை முழுவதும் நாம் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், நமது வெற்றிகளின் படிக்கட்டுகளாக இருக்கும் நாம் கண்ட தோல்விகள் என நமது நன்றி கூறிய விஷயங்கள் பல பல. 
3.அன்றாட வாழ்க்கையில் நன்றிக்குரிய அம்சங்கள்
நமது உடல் ஆரோக்கியம், நமக்கு கிடைக்கும் சரிவிகித உணவு, நம்மை ஆற்றுப்படுத்தும் அல்லது அமைதிப்படுத்தும் இயற்கை, நமது நன்றிக்குரிய நேரம் என்று அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்கள் நமது நன்றிக்குரியவைகளாக மாறுகின்றன.

பலர் தமது நன்றியை வெளிப்படுத்த வெற்றிக்காக காத்திருப்பர். ஆனால் வெற்றிகரமான மனிதர்கள் முதல் காரியமாக தமது நன்றியை உணர்வர்.

உங்கள் வாழ்க்கைக்கு பங்களித்த ஒரு பத்து பேரை நினைவு கூரவும். அதுமட்டுமல்ல கடைசியாக அவர்களுக்கு எப்பொழுது நீங்கள் நன்றி தெரிவித்தீர்கள். 

4.75 கிலோ எடையுடன் கிட்டத்தட்ட 56 டோல் வலியுடன் அதாவது 20 எலும்புகளை ஒரே நேரத்தில் உடைத்தால் என்ன வலி வலிக்குமோ அந்த அளவு வலியுடன் என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கு நான் மிகுந்த நன்றி கடன் பட்டிருக்கின்றேன். ஆனால் அதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்தேன் என்றால் இல்லை என்பது தான் எனது பதில். என் தாய் முதலில் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னபொழுது எனஆணாதிக்க மனோபாவம் என்னை நம்ப விடவில்லை. பெண்கள் என்றால் சற்று கூட்டிக் குறைத்துத் தான் பேசுவார்கள் என்ற என்னுடைய தவறான கண்ணோட்டம் எனது நன்றி உணர்வைப் பாதித்துவிட்டது. எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் இந்த வலி பற்றிய செய்தியை நான் படித்தது என் தாயார் இறந்ததற்கு பின்னால் தான். அதுமட்டுமல்ல எனக்காக அதே அளவு எடையுடைய இரண்டாவது மகனை பெற்றுக் கொடுத்த எனது மனைவி இறந்த பின்னர் தான் இந்த செய்தியை பற்றி படித்தேன். 

இன்றளவும் அந்த இருவருக்கும் எனது நன்றி உணர்வை நான் தெரிவிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இருக்கின்றது.

அவர்களைப் பற்றிய நன்றி உணர்வு இப்பொழுது மிகுந்து இருந்தாலும் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க முடியவில்லை என்ற வருத்தம் தான் தொக்கி நிற்கின்றது. 

நன்றி உணர்வு அறிவியல் பூர்வமாக என்ன சொல்கின்றது. நன்றி உணர்வு மிகுந்தால் நேர்மறை உணர்வுகள் உங்களை ஆக்கிரமிக்கும். அது உங்கள் மூளையிலிருந்து டோபோமைன் என்ற வேதிப்பொருளை சுரக்க வைக்கும். அதனால் உங்கள் வலி அகன்று மகிழ்ச்சியாக உணர்வீர்கள். 

உண்மையான நன்றி உணர்வு நமக்கு எது கிடைக்கவில்லை என்பதில் கவனத்தை செலுத்துவதை விட எது இப்பொழுது கைவசம் இருக்கின்றது என்பதை பற்றிய கவனம் செலுத்த வைக்கின்றது. 
இப்படி ஒரு மனோபாவம் அமைந்துவிட்டால் தங்களது மனைவிகளை ஒருபோதும் பாராட்டாத கணவன்மார்கள் தங்களது இணையர்கள் பாராட்டும் அளவிற்கு, அல்லது மகிழும் அளவிற்கு தினமும் பாராட்டி மகிழ்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இது மட்டுமல்ல அது எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. நமக்கு தேவையான உணவுப்பொருட்களை இன்னும் பல விஷயங்களை நமக்கு கொடுக்கும் கடைக்காரர்களுக்கு பொருட்களை வாங்கி முடித்தவுடன் இன்றைய பொழுது நன்றாக இருக்கட்டும் என்று கூறுவது என்னுடைய வழக்கம். நூற்றுக்கு 90 பேர் அதைக் கேட்டு மகிழ்வார்கள். சிலர் என்ன நன்றாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்வார்கள்.
 ஆனால் நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு சமயம் ஒரு பழக்கடைக்காரருடன் பழத்திற்கு இரண்டு ரூபாய் விலை குறைப்பதில் சிறிது சண்டை. அவர் கறாராக விலை குறைக்க முடியாது எனக் கூறிவிட்டார். 
பணம் வாங்கி முடிந்தவுடன் என் பெயர்த்தி நான் சொல்கின்றேன் என்று அவரிடம் இன்றைய பொழுது நன்றாக இருக்கட்டும் என்று கூறினாள். கோபத்தில் இருந்த அவர் அதை சரியாக கவனிக்கவில்லை ஆனால் சிறிய குழந்தை ஏதோ சொல்கின்றதே என்பதைப் பார்த்து விட்டார். அதனால் அவளிடம் என்ன பாப்பா சொன்னாய் என்று கேட்டார். இவ்வளவு மிகவும் பொறுமையாக இல்லை தாத்தா இன்றைய பொழுது உங்களுக்கு நன்றாக இருக்கட்டும் என்று சொன்னேன் என்றாள். இரண்டு ரூபாய் விலை குறைப்பதற்கு போராடிய அந்தப் பெரிய மனிதர் அந்தக் குழந்தையிடம் பத்து ரூபாய் பழத்தை எடுத்துக் கொடுத்து விட்டார். அதுதான் அந்தக் குழந்தைக்கான அவரது நன்றி உணர்வு.

குற்றச்சாட்டும் நன்றி உணர்வும் 

ஏகப்பட்ட வேலை இருக்கு எனக்கு 

நான் வளர்வதற்கு இவ்வளவு வாய்ப்புகள் இருப்பதால் நான் நன்றி உணர்வுடன் இருக்கின்றேன் 

எனது முதலாளி மிகவும் கடுமையானவர் 

எனது வளர்ச்சிக்காக என் முதலாளி என்னை உந்தித் தள்ளுகின்றார்.

என் வாழ்க்கைப் பாதை ரோஜாப் பூக்கள் அடங்கியது அல்ல, முள் பாதை. ஆனால் இந்தச் சவால்கள் என்னைப் புடம் போடுகின்றன.

இருப்பதைக் வைத்து கொண்டாடுங்கள் 

பல வேத நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன. ஆனாலும் வாலி பாராட்டிய கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் எனது நினைவிற்கு வருகின்றது. 
மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா என்ற பாடலில் வரும் முக்கியமான உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு என்ற வரிகள், இருப்பதைக் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

உங்கள் அறையின் ஒரு மூலையில் அமர்ந்து, விளக்குகளை அணைத்துவிட்டு, அலைபேசியைத் தூர வைத்து விட்டுக் கண்களை மூடி நீங்கள் பிறந்ததிலிருந்து இன்று வரை நடந்த நல்ல விஷயங்கள், கடந்து வந்த நன்றிக்குரிய மனிதர்கள் என்று மனக்கண் முன் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி மனதார நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் பெற்றோர்களாக இருக்கலாம், ஆசிரியப் பெருமக்களாக இருக்கலாம், உங்கள் வழிகாட்டிகளாக இருக்கலாம், சக ஊழியர்களாக இருக்கலாம், அன்றாடம் நீங்கள் சந்திக்கும் மனிதர்களாகவும் இருக்கலாம். நன்றி உணர்வு பெருக்கிட கண்களை மூடி அவர்களை மன கண்ணில் பார்த்து மெல்ல அந்தந்த நிகழ்வுகளை அசை போடுங்கள்.
என்ன இவைகள் எல்லாம் நினைவூட்டிய எனக்கு நன்றி சொல்லத் தோன்றுகின்றதா? 

 

நமது நன்றி உணர்வை எது தடை செய்கின்றது 
1.ஒப்பிட்டு நோக்குதல். இன்றைய சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. அவை இயற்கையாகவே நமது பாராட்டு மனோபாவத்தை குறைக்கின்றன என்றால் மிகையாகாது 
2.எதிர்பார்ப்புகள்
இல்லாததை நினைத்து அதை நோக்கிய கவனம் நம்மை பாதாள கூலிக்கு இழுத்துச் சென்று விடும்.
3.பாரபட்ச மனோபாவம்
மனித மூளை விசித்திரமானது. தனக்கு கிடைத்த ஆசீர்வாதங்களை கொண்டாடாமல் பிரச்சனைகளை மட்டுமே நினைவு கூர்கின்றது.

நன்றிக் கடிதம் எழுதுதல் 
எந்த அளவிற்கு உங்களுக்கு பிறர் உதவியாக இருக்கின்றார்கள் என்பதைக் குறித்து அவர்களுக்கு உங்கள் நன்றியை வெளிப்படையாகத் தெரிவிக்கவும். எந்த விதத்தில் அவர்கள் உதவியாக இருந்தார்கள், என்ன விஷயங்களை எல்லாம் நீங்கள் கற்றுக் கொள்ள வழி காட்டினார்கள், எப்பொழுதும் எப்படி உதவியாக இருந்தார்கள்  என்பதற்கான உங்கள் நன்றி உணர்வுகளை ஒரு கடிதம் மூலம் எழுதி குறிப்பிட்ட நபருக்கு அனுப்பினால் நீங்களும் மகிழ்வீர்கள். அவரும் மகிழ்வார். (அவருக்கும் டோபோர்மேன் சுரக்கும் அல்லவா) 

புதிய பழக்கத்தைக் கைக்கொள்ளுங்கள் 
இரவு படுக்கப் போகும் பொழுது உங்கள் நன்றி கூறிய மூன்று விஷயங்களை உங்கள் டைரியில் எழுதுங்கள். 
நீங்கள் பாராட்ட விரும்பும் ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிடுங்கள். 
இன்று என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள் என்பதையும் எழுதுங்கள். இதற்கு என்ன இரண்டு நிமிடங்கள் ஆகுமா?
 
ஆக நண்பர்களே உங்களிடம் இருப்பவற்றை, அதாவது உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களைக் கொண்டாடுங்கள். பிறருடன் உங்களை ஒப்பிட்டு நோக்காதீர்கள். கிடைத்த நேரம் எல்லாம் பிறரைப் பாராட்டுங்கள். பிறருக்கு உதவி செய்யுங்கள். உங்களது நன்றி உணர்வு மேலும் பலன்களை உங்களுக்குப் பெற்றுத் தரட்டும் என வாழ்த்துகின்றேன். 
சோம.நாகலிங்கம் இ.வ.ப(பணி ஓய்வு) 
நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர்,
நிகில் அறக்கட்டளை

Thursday, 5 March 2026

தாய் கிழவி

தாய் கிழவி 
ஒரு கலையரசி ராதிகாவின் ஆகச்சிறந்த திரைப்படம் தாய்க்கிழவி.  பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தனது ஆங்காரமான அட்டகாசமான நடிப்பால் பதிலடி கொடுக்கும் பவுனுத்தாய் , அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக பவுனுத்தாயாகவே ராதிகா வாழ்ந்திருப்பது அற்புதம் .

ஒரு பாத்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்து பெண்களாலும் நடிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக ராதிகாவின் நடிப்பு கோலோச்சுகிறது. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் ? யார் கையையும் எதிர்பார்க்காமல் அவள் பொருளாதாரத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்று உரைக்கும் படம். ஒரு பெண் தனித்து வாழும் பொழுது தனது குழந்தைத்தனங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு தனக்கான ஒரு முகமூடி அணிந்து அவள் ஒரு கம்பீரமான அடங்காப்பிடாரியாக அனைவருக்கும் முன் காட்சியளிக்கும் போதும், ஒரு குழந்தை தனத்துடன் சிறுவர்களுக்கான கண்ணாடி அணிந்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டு, திரைப்படம் பார்த்து ஜிகிர்தண்டா குடித்து தனக்கான விருப்பங்களை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு பெண்ணாக வாழ்ந்து காட்டி உள்ளார்.  தனது சுதந்திரம், ஆசைகள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு குடும்பத்தினருக்காக வாழ்கின்ற பெண்ணே  சிறந்த பெண் என்று கற்பிக்கப்பட்ட சமூகத்தில் ,என் காசு என் இஷ்டப்படி தான் நான் வாழ்வேன் என்று சொல்வதற்கு  ஒரு துணிச்சல் பெண்ணுக்குத் தேவைப்படுகிறது .இந்தக் காலத்தில் வேலைக்கு போகும் ஒரு பெண் நான் சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் கூட குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழலில் தாய்க்கிழவி, தாய் வழிச் சமூகத்தின் அடையாளமாக திகழ்கிறார். படத்தின் வசனம் ஒவ்வொன்றும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியதாக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது .திரைக்கதை பின்னணி இசை, ஸ்கிரிப்ட் , ஒளிப்பதிவு அனைத்தும் சிறப்பு.
ஒவ்வொருவரும் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருப்பது படத்தில் வெற்றிக்கு அடி கோள்கிறது. தெறிக்கும் வசனங்கள்.
 படம் முடிந்து வெளியே வரும் பொழுது ராதிகாவின் அட்டகாசமான நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கூறிக்கொண்டு வெளியேறுவதை காண முடிந்தது. ஒரு பெண் கம்பீரமாக தலை நிமிர்ந்து வாழ முடியும் என்பதற்கு உதாரணம்தான் பவுனுத்தாய். தனது மகள் இரண்டாம் திருமணத்தின் பொழுது தாலி கட்டும் பொழுது நிமிர்ந்து தாலியை வாங்கு என்று கூறுவதன் மூலம் பெண்ணுக்கு எதிரான அநியாயங்களுக்கு பெண்கள் தலை நிமிர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் பவுனுத்தாய் . "பத்து தலைமுறையாக படிக்க முடியாம இப்பதான் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு விட்டால் படிச்சிடு"
"60 வயசுல எனக்கு கிடைச்ச சுதந்திரம் 30 வயசுல என் மகளுக்கு கிடைச்ச சுதந்திரம் என் பேத்திக்கு 15 வயசுல கிடைச்ச சுதந்திரம் அவ மகள் பிறக்கும் போதே சுதந்திரமா பொறப்பா"

யாருப்பா திரைக்கதை வசனம் கையை கொடுங்கப்பா ...

சிவகார்த்திகேயன் கூட்டணிக்கு ஒரு ராயல் சல்யூட்.

எல்லோருக்குள்ளும் ஒரு பவுனுத் தாய் வாழ்கிறாள் அதனால் இந்த உலகம் வாழ்கிறது அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

Monday, 19 January 2026

வீதி ஜனவரி 2026

இதயங்கள் சங்கமிக்கும்
புதுக்கோட்டை  'வீதி': 
கவிதூவிய கண்ணீரும், 
கரைபுரண்ட அன்பும்..!
*************************

​புதுக்கோட்டையின் மண் வாசனைக்கும், அதன் இலக்கியச் செழுமைக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் எப்போதும்
உண்டு. அந்த அடையாளத்தின் முகவரியாகத் திகழ்வது 'வீதி' இலக்கிய அமைப்பு.

 எளிமையைப் போர்த்திக்கொண்டு, இனிமையான இலக்கியப் பகிர்வுகளால் எழுத்தாளுமைகளை ஒன்றிணைக்கும் இந்த மகத்தான அமைப்பின் 140-வது மாதாந்திரச் சந்திப்பு, இன்று (19-01-2026) திங்கட்கிழமை, புதுக்கோட்டையின் மாலைப் பொழுதை இலக்கியச் சாரலில் நனைத்தது.

​விஜய் பேலஸ் பின்புறம் உள்ள ஆலிப் கல்யாண பிரியாணி உணவகக் கடை மாடியில், குளிரூட்டப்பட்ட அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் இதயங்கள் மட்டும் தமிழால் தகித்துக்கொண்டிருந்தன.

​நிகழ்வின் வாசலைத் திறந்து வைத்து கவிஞர் மலையப்பன் வரவேற்புரை ஆற்ற, கவிஞர் மு.கீதா தேவதா தமிழ் கீதா  தலைமையேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார்.

 கவிஞர் தங்கம் மூர்த்தி  Thangam Moorthy தனது தொடக்க உரையின் மூலம் தனக்கே உரிய பாணியில் இலக்கிய  தீபத்தை தனது அனுபவ வெளிச்சங்களால்  அழகாய் ஏற்றி  வைத்தார்.

 மேடையில் கவிஞர்கள் கா.மாலதி, Malathikalimuthu  முனைவர் மகா சுந்தர், Mahaa Sundar  கீதாஞ்சலி  ஆகியோர் தங்களின் சொற்களால் கவிதை மழை பொழிய, கவிஞர் மைதிலி Mythily S  மாண்ட்டோ கதைகளின் வாசிப்பு அனுபவத்தை ஒரு காட்சிக் காவியமாகவே கண்முன் நிறுத்தினார்.

 கவிஞர் கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan , ‘பராசக்தி’ திரைப்படத்தின் மொழிப் போராட்ட  உணர்வை இன்றைய படைப்புச் சூழலோடு பொருத்தி விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்தினார்.

​ஆனால், இன்றைய மாலைப் பொழுது வீதியின் வழக்கமான கூட்டங்களைக் கடந்து, உணர்ச்சிகளின் சங்கமமாக மாறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அவர் – அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து ஓடி வந்திருக்கும் அன்பின் நதி, கவிஞர் கிரேஸ் பிரதிபா.

​கொடைக்கானலில் பிறந்து, பெங்களூரில் இல்லறம் கண்டு, இன்று அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்தாலும், கிரேஸின் இதயம் எப்போதும் தமிழ் இலக்கியத்தில்தான் துடித்துக்கொண்டிருக்கிறது.

 புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நிதி உதவி செய்ததோடு, தற்போது சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரிய பணியையும்  செய்து வருகிறார்.

பல்லாண்டுகளுக்கு முன்பாக ​மதுரையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் துளிர்த்த அந்தச் சிறு நட்பு, இன்று 'வீதி' அமைப்பின் ஒரு அங்கமாக, ஒரு உடன்பிறந்த சகோதரியாக, உற்ற தோழியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 "புதுக்கோட்டைதான் எனக்குப் புத்துயிர் தருகிறது" என்று அவர் மேடையில் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த காற்று கூட கனத்துப் போனது.

​"இந்த வீதி நண்பர்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? எங்கு இருந்தாலும் உங்கள் அன்பை  நான் மறக்கமாட்டேன்..." ​என்று அவர் தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கண்கள் கசிந்து விம்மிய அந்தத் தருணம், அங்கிருந்த ஒவ்வொருவரையும் கலங்க வைத்தது. நெஞ்சம் நெகிழ வைத்தது.
ஒரு வார்த்தைகூட ஆங்கிலக்  கலப்பில்லாமல் அன்பின் அழகிய தமிழ் மொழியை பகிர்ந்து கொண்டு, சிரம் தாழ்த்தி அவர் நன்றி செலுத்திய மேடைப் பண்பாடு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.

எழுத்தால் இணைந்த உறவுகள், இரத்த உறவுகளையும் தாண்டி எவ்வளவு ஆழமானவை என்பதற்கு கிரேஸின் அந்தப் புனிதமான கண்ணீர்த்துளிகளே சாட்சி.

​நிகழ்வின் நிறைவாகப் பேசிய கவிஞர் நா முத்துநிலவன்   கிரேஸ் பிரதிபாவின் சங்கத் தமிழ் போன்ற தூய்மையான அன்பைப் பாராட்டிப் பேசினார். சங்க இலக்கியப் பாடல்களைச் சான்றுகாட்டி, அடர்த்தியான அன்பின், தூய தோழமையின் அந்த உன்னதப் பிணைப்பை அவர் விவரித்தபோது, இலக்கியம் எப்படி மனிதர்களை ஈரமான இதயங்களால் பிணைக்கிறது என்பது மீண்டும் நிரூபணமானது.

​நிகழ்வில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சொக்கலிங்கம், புலவர் கும.திருப்பதி திருப்பதி குமரப்பன் , அசோகன் (எல்.ஐ.சி),எழுத்தாளர் ​அண்டனூர் சுரா Andanoor Sura ,கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,
​கவிஞர்  ஒட்டடை பாலச்சந்திரன் 
​கவிஞர் சோலச்சி Solachy Pudukkottai , கவிஞர் ரேவதி ராம்
​கவிஞர் பாஸ்கர் கோபால் 
​வழக்குரைஞர் சங்கீதா Sangeetha R விதைக்கலாம் அமைப்பின் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக 'விதைக்கலாம்' பாலாஜி நன்றியுரை கூற, ஒரு இனிய அன்பின் ஈரம் கலந்த இலக்கிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

​'வீதி'-யில் விழுந்து, நம் இதயங்களில் நுழைந்து, உறவில் கலந்த உயிராய் மாறிவிட்ட கவிஞர் கிரேஸ் பிரதிபா அவர்களே...உங்கள் அன்பு என்றும் எங்களைச் சூழும்..! இந்தப் புதுகையின்  தோழமை உங்களோடு என்றும் துணை நிற்கும்..!
​
வீதி'யில் பூத்த இந்த நட்பு, கடல் கடந்தும் புதுக்கோட்டை மண்ணின் ஈரத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. 

வாழ்க வீதி..!
 வளர்க தமிழ் நட்பு..!

-பழ.அசோக்குமார்

Saturday, 17 January 2026

பெரியார் குறித்து பெருஞ்சித்திரனார்

அவர் பேசிய பேச்சுகளை 
ஏதென்சு நகரைச் சுற்றிவந்த 
சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது.  

உலகப் பெரும் பேச்சாளர் 
என்று பெயரெடுத்த மெகசுதனிசும்
 பேசியிருக்க முடியாது.  

அவர் சுற்றிய தொலைவைக்
 கிரேக்க மன்னன் அலெக்சாண்டரும்
 சுற்றியிருக்க முடியாது.  

அவர் பிரெஞ்சு மாமறவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர். 

 உருசிய இலெனினைவிடப்
 பொதுமக்களை நேருக்கு நேராகக்
 கண்டு பேசியவர்.

 குருசேத்திரப் பாரதப் போரைவிட
 ஆரியத்தின் மேல் அவர் தொடுத்த போர்
 மிகப் பெரியது. 
 கடுமையானது. 

 வேறு எவரும் தொடுக்க அஞ்சியது. 
 நினைத்துத் தொடை நடுங்கியது"

பெரியார் குறித்து
 பாவலரேறு பெருஞ்சித்திரனார் -
 1971இல் எழுதியது.

Sirpi Rajan முகநூல் பதிவு

Monday, 19 May 2025

நந்தினி அன்னாள்

அகரம் அறக்கட்டளை சூர்யாவிற்கு மனம் நிறைந்த நன்றி 
அம்மா எனக்கு திருமணம் அவசியம் நீங்கள் வரனும் மாணவி நந்தினி அன்னாள் 
கள்ளங்கடமில்லா  அன்பை பாசத்தை அவள் மட்டும் அல்ல அவளது குடும்பமே  அள்ளித்தரும்.
ஆறாம் வகுப்பில் அவள் சேர்ந்த போது அத்தனை குட்டியாக அமைதியான குழந்தையாக வந்து சேர்ந்தாள்.அவளது அப்பா ஒரு மாற்றுத்திறனாளி பள்ளியில் சேர்த்து பத்திரமா பார்த்துக்குங்க என்று கண்கலங்கினார்.
நன்கு படிக்கும் அவள் இரண்டு நாட்கள் வரவில்லை . மூன்றாம் நாள் பள்ளிக்கு வந்த போது அவளது கையில் காயம் இருந்தது" என்னடா இது? எப்படி ஆச்சு.சுடுதண்ணீரைக் கையில் கொட்டிக் கொண்டேன் மா. "அவளது அம்மா மீது கோபம் வந்தது "ஏன்டா நீ மேடை  உயரம் கூட இருக்க மாட்டே,நீ ஏன்  தூக்கும்"அம்மா என்ன பண்றாங்க ? என்றேன்
" அம்மாவால் முடியாதம்மா "
ஏன்டா 
அம்மாவுக்கு போலி யோஅட்டாக்னால அவங்களால எந்திரிச்சு நிக்க முடியாது, தவழ்ந்து தான் வருவாங்க .
"நான் தான் சமையல் எல்லாம் ஹெல்ப் பண்ணுவேன். அதனால அம்மா வந்து தூக்க முடியாதுமா நான் தூக்கும்போது தடுமாறி விழுந்திருச்சு" என்றாள்.
மனசு வேதனையாக இருந்தது ஏனெனில் அவனது அப்பா ஒரு மாற்றத்திறனாளி. அம்மாவும் ஒரு மாற்றத்தினாளி என்பதை கேட்ட போது நல்ல வேளை குழந்தைகள் இருவரும் நல்லா பிறந்துட்டாங்க என்று நிம்மதி ஒரு நிமிடம் வந்தது.
 இந்த குழந்தை எப்படியாவது நல்லபடியாக படித்து முடித்து வேலைக்கு வந்து விட வேண்டும் ,அந்த குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இன்று செயலாக அவள் செய்யும் பொழுது மனம் நிறைவாக இருக்கிறது.
இன்று அவள் வேலைக்குச் சென்று அவளது ஊதியத்தில்  ஒரு வீடு கட்டி அதில்  அம்மாவையும் அப்பாவையும் வைத்து பார்த்துக் கொள்வது பெருமையைக் தந்தது.
மேலும் அவளது தங்கை ஹெலன்  விளையாட்டில் மிக ஆர்வமாக இருப்பாள் . அவளும் அகரம் அறக்கட்டளை மூலம் படித்து இன்று அவளும் பணிக்கு செல்கிறாள் .
இரண்டு பெண் குழந்தைகள் தங்கள் குடும்பத்தை தாங்க கூடிய காட்சியை கண்முன் காண்கின்றேன்.
 நேற்று அவள் திருமண அழைப்பிதழ் வைக்க நேரில் தான் வருவேன் என்று அடம் பிடித்து வீட்டுக்கு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
 அம்மா ,எங்க அப்பா ரொம்ப நல்ல அப்பா.   என்னைய வந்து பொம்பள பிள்ளை அங்க போகக்கூடாது எங்கே போகககூடாது என்று சொன்னதே இல்லம்மா. மூணாவது படிக்கும் போதே இருக்கும்போதே கையில முறுக்கு பாக்கெட்  கொடுத்துட்டு வா அப்படின்னு சொன்ன அப்பா.
 பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் இப்படி சின்னப் புள்ளய அனுப்புறிங்கன்னு கேட்டப்ப கூட ,அதெல்லாம் அவ போயிட்டு வருவாங்க தைரியமா சொன்னாங்க ,
முறுக்கு விக்க ஆரம்பிச்ச பிறகுதான் எங்க வீட்ல கொஞ்சமாவது சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லாம இருந்துச்சுமா.
 அப்பாவும் அம்மாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டதே ஒரு பெரிய விஷயம் மா. ஏன்னா எங்க அம்மாவுக்கு 30 வயசு ஆயிடுச்சு அம்மாச்சி மட்டும்தான் துணைக்கு .அம்மாச்சிக்கு பிறகு பார்த்துக்கொள்வதற்கு ஆள் இல்லயேன்னு  அம்மாச்சி கவலைப்பட்ட பிறகுதான் திருமணத்திற்காக விளம்பரம் கொடுத்திருக்காங்க .
அதை அப்பா படித்து விட்டு கஷ்டப்படுறாங்க போலன்னு நினைத்து 100 ரூபாய் பணம் அனுப்பி இருக்காங்க.  அதை வாங்கிய அம்மா "பணமா நாம கேட்டோம் ?நம்ம திருமணம் பண்ணிக்க தானே  விளம்பரம் கொடுத்தோமென  வருத்தப்பட்டு பணத்தை திருப்பி அனுப்பி இருக்காங்க .
திருப்பி அனுப்புன பிறகு தான் அப்பா வந்து அம்மாவ பாத்து திருமணம் செஞ்சிருக்காங்க. அப்பா வந்து கிருத்தவரா இருக்கறதுனால அம்மா இந்துவா இருக்கறதுனால அவங்க அப்பா வீட்ல யாருமே ஒத்துக்கல .அதனால அப்பா மட்டும் தனியா வந்து அம்மாவை கல்யாணம் பண்ணி இருக்காங்க.  அன்னைக்கு சொந்தக்காரர்கள் யாரும் இல்லம்மா ..இன்னைக்கு எல்லாரும் வந்துருப்பாங்களேடா . ஆமாமா இன்னைக்கு எல்லாரும் வந்திருக்காங்க நடுவுலயே வந்துட்டாங்க கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணாங்கம்மா .எங்களை சுத்தி ரொம்ப நல்லவங்களா இருக்காங்க மா.
அதனால நாங்க வந்து இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம் . நான் கல்லூரியில் சேர்ந்து படிக்க அகரம்  தான் காரணம் மா.படிப்பு மட்டும் தான் மா நமக்கு துணை.படிச்சா போதும்னு புரியுது மா.
அகரம் வந்து எனக்கு வாழ்க்கையை வந்து எப்படி புரட்டி போட்டுச்சுங்கறது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா. அகரம் மட்டும் இல்லன்னா நானெல்லாம் வந்திருக்கவே முடியாதுமா இது மாதிரி. நான் கூட பரவாயில்லை அம்மா இருக்கிறதுக்கு இடம் இருக்கு அப்பா அம்மா இருக்காங்க .ஆனா என்ன விட ரொம்ப கஷ்டப்படுற புள்ளைங்க அகரத்தினால படிச்சு இன்னைக்கு மேல வந்திருக்காங்க .சொந்தமாக வீடு வாங்கி இருக்காங்க .குடும்பத்தை பார்த்துக்கிறாங்க  அகரம் அறக்கட்டளை அவ்ளோ செஞ்சுகிட்டு இருக்காங்க அதனால நான் வந்து இப்ப வர்ற புள்ளைங்களுக்கெல்லாம் நான் கைட் பண்ணிட்டு இருக்கேன் மா என்று சொன்னப்ப அப்படியே கண்ணீர் தழும்பதழும்ப நான் அவளை அப்படியே கட்டிக்கொண்டேன்.
 ஏன்னா  நான் பெற்றெடுக்காதமகள் மாறி அவ முன்னாடி நின்னு  என்னோட எண்ணங்களை  அவள் செயலாற்றுகின்றதை நினைக்கும்போது மனசு ரொம்ப பெருமையாவும் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது .
. இப்படி ஒவ்வொரு குழந்தையும் ஒரு அரசு பள்ளியில் படிச்சிட்டு தன்னுடைய குடும்பத்த பார்த்துக்க கூடிய அளவுக்கு வர்றதுன்னா அது தமிழ்நாடு அரசு  பள்ளி ஆசிரியர்கள் அது மட்டும் இல்லாம ,பள்ளி முடித்த பிறகு  தடுமாறி நிக்கிற குழந்தைகளை காப்பாற்றக்கூடிய அகரம் போன்ற அறக்கட்டளைகள்  உலகத்தில் நல்லவங்களும் இருக்காங்கன்னு  அப்பப்ப காமிச்சுகிட்டே இருக்காங்க "உண்டாலம்ம  உலகம்" அப்படின்னு முன்னோர்கள் சொன்னது உண்மை.
 இன்னைக்கு அவ சொந்தமா ஒரு வீடு கட்டி ,நல்ல வேலையில் தன்னுடைய குடும்பத்தையும் பார்த்துகிட்டு தனக்கான திருமணத்திற்கான எல்லா செலவையும் அவளே சம்பாரித்து அவளது பெற்றோருக்கு உறுதுணையாக இருக்கிறாள்.
மாப்பிள்ளை எப்படி வேண்டும் எனக் கேட்ட அப்பாவிடம், எனக்கு ரொம்ப பணக்காரங்களா வேணாம்பா  யாரா இருந்தாலும் என்னைய புரிஞ்சுகிட்டு நம்ம குடும்பத்தை புரிந்து கொள்ள இருந்தா போதும்னு நான் கண்டிப்பா சொல்லிட்டேன் மா .
மாப்பிள்ளை எப்படி மா நல்ல குணமா என்று கேட்ட போது ராணுவத்துல இருக்காங்க எனக்கு அஞ்சு வருஷமா  தெரியும் நான் சொந்த வீடு கட்டிட்டு தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லிட்டேன்.
ஏன்னா வீடு இல்லாம நாங்க வந்து அவ்ளோ கஷ்டப்பட்டோமா அந்த வீடு எவ்வளவு முக்கியம் அப்படிங்கிறது எனக்கு எப்ப  தோணுச்சுன்னா  கொரோனா காலத்துல வீட்ல  வேலை பார்க்கும் போது வீட்டில் டேபிள் வைக்கிற இடம் இல்லாம நான் வந்து ஹாஸ்டல்ல புதுக்கோட்டையிலேயே ஹாஸ்டல்ல தங்கி கிட்டு சனிக்கிழமை சனிக்கிழமை தான் வீட்டுக்கு போவேன் .
.ஒரு வீடு இல்லாம நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் என்பதை அப்பத்தான் உணர்ந்தேன் .வீடு கட்டிட்டு தான் கல்யாணம் என்றத நான் வந்து முன்னாடியே சொல்லிட்டேன் 
இப்போ வீடு கட்டிட்டு இப்ப சொந்த வீட்ல இருக்கோம்மா எங்கள சுத்தி ரொம்ப நல்லவங்க இருக்காங்க அம்மா .
நான் அரசு பள்ளியில் படிச்சிட்டு வேலையில காலேஜ்ல சேரும்போது இங்கிலீஷ் பேச கஷ்டமா இருக்குமென்று கொஞ்சம் தயக்கமா இருந்தது. ஆனா என்கூட இருந்த ரூம் மேட்ஸ் எல்லாம் கிளாஸ் விட்ட உடன்ரூமுக்கு வந்த பிறகு  கதவுல எழுதி எனக்கு கற்றுக் கொடுப்பாங்க.
 என் பிரெண்ட்ஸ் கிளாஸ் மெட் எல்லாருமே வந்து எனக்கு ரொம்ப நல்லவங்களா அமைஞ்சாங்கம்மா .எங்க அம்மா சொல்லுவாங்க யாராயிருந்தாலும் அவங்க வந்து 10 கெடுதல் பண்ணாலும் ஒரு நல்லது பண்ணி இருந்தாங்கன்னா அந்த நல்லதைத் தான் நினைக்க வேண்டும்னு.
 நான் வந்து எப்பவுமே நெனச்சு பாப்பேன் குறைய நினைச்சு பார்க்கிறதில்லம்மா யார்ட்டயுமே நல்லதை நினைச்சுகிட்டு பழகுகிறேன் என்று  அந்த குழந்தை முகமுழுக்க சந்தோஷத்தோட, கண்கள்ல ஒரு ஒளியோட அவ சொன்னப்ப மனசு நெகழ்ந்து  நான் உட்கார்ந்திருந்தேன் .
இதைத்தானே எதிர்பார்த்தோம். இதுக்காகத்தானே நாம் ஆசிரியராக இருக்கோம்னு  ஒரு நெகிழ்வான ஒரு தருணமாக நேற்றைய மாலை அமைந்தது.
 அகரம் சூர்யாவுக்கு எனது மனம் நிறைந்த நன்றியை சொல்லிக்கிறேன் என் குழந்தையை கல்லூரியில் படிக்க உதவி செய்து நல்லா வந்து நீங்க கொண்டு வந்துட்டீங்க .
 நிச்சயமா ஒரு நல்ல வழிகாட்டியாக நிறைய பேருக்கு அவ  ஒரு ஆலமரமா இருந்து வழி காட்டுவாள் என்ற நம்பிக்கை இருக்கு எனக்கு
 வாழ்க்கை இனிதுதானே

Friday, 19 July 2024

ஆசிரியர் பணி

20.7.1988-20.7.2024

36 வருடங்கள் ஆசிரியர் பணி ஏற்று 37 ஆவது ஆண்டு துவங்குகிறது.
பணி ஏற்கும் போது அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து,அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சியும் 1987 இல் முடித்து  1988 இல் அரியலூர் மாவட்டம் சிறுவளூரில் ஆசிரியராகப் பணி கிடைத்தது.அதற்கும் முன் எங்கள் குடும்ப நண்பராக அதே தெருவில் வசித்த முன்னாள் எம்.எல்.ஏ திருமிகு ஆறுமுகம் அவர்களை அப்பா (அவரது மகள் கண்ணகி என் தோழி )என்று தான் அழைப்பேன்.ஐந்தே வீடுகள் இருந்த தட்டாரத்தெருவில் கடைசி இரண்டு வீடுகள் எங்களுடையது.பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தான் இருப்போம்.

ஒருநாள் கண்ணகி அப்பா கைகள் இரண்டையும் மூடிக்கொண்டு ஒரு கையில் மாப்பிள்ளை ஜாதகம் இன்னொரு கையில் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியர் பணி இரண்டில் எது வேண்டும் மா என்று கேட்டார்.உடனே வேலை தான் வேண்டும் நான் போகிறேன் என்றேன்.இவ போய் அங்கே என்னத்த சொல்லிக் கொடுக்க போறான்னு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க.
பின்னர் ஆறு மாதம் கழித்து சிறுவளூரில் ஆசிரியர் பணி ஆணை வந்தது.
வீடு இல்லைனா பள்ளி என்று இருந்த என் வாழ்க்கை பேரூந்து பயணத்திற்கு மாறிய காலமது.

அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் இருந்த புதுப்பாளையத்திற்கு ஜெயங்கொண்டம் பேருந்தில் சென்று இறங்கி பிறகு இரண்டு கிலோமீட்டர் நடந்து சிறுவளூர் செல்ல வேண்டும்.

1988இல் நான் வாங்கிய முதல் ஊதியம் 
 ரூ320. என்னை பேருந்தில் தனியே அனுப்ப மனமில்லாமல் அப்பா காட்டு வழியாக தினமும் 40 கிமீ பயணித்து காலையில் கொண்டு வந்து விட்டு மறுபடியும் மாலையில் அழைக்க வருவார்கள். டிவிஎஸ் 50 வண்டியில் 3 மாதங்கள் வந்தேன்.பிறகு பேருந்து பயணம் பழகி விட்டது.கீழப்பழுவூரில் பேருந்து கிடைக்காத போது சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் நீண்ட டிப்பர் லாரியில் தான் அப்பகுதி மக்கள் செல்வார்கள்.டிரைவர் கேபினுக்கு ஏறத் தெரியாமல் ஸ்டூல் போட்டு ஏறி பிறகு டயரில் கால் வைத்து ஏறக் கற்றுக் கொண்டேன்.

புதுப்பாளையத்தில் இறங்கியதும் மாணவர்களுடன் வேகமாக இரண்டு கிலோமீட்டர் நடந்து 9 மணி வழிபாட்டு கூட்டத்திற்கு வந்து விடுவேன்.ஒரு பெட்டிக்கடை கூட அந்தக் கிராமத்தில் கிடையாது. மாணவர்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் மருந்து பொருட்கள், அந்த கிராம மக்கள் உரிமையோடு வாங்கி வரச் சொல்லும் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கிளம்பும் என்னை இவளா இப்படி என்று அம்மா கன்னத்தில் கை வைத்து பார்ப்பார்கள்.

இப்போதும் மாணவர்களுக்கு தேவையான மாத்திரைகள் கொண்ட சிறிய பர்ஸ் எனது கைப்பையில் இருக்கிறது.
சிறுவளூருக்கு இப்படி போக வேண்டும் என்றால் அடுத்து மாறுதலான பளிங்காநத்தம் பள்ளிக்கு பேருந்தே அதிகமாகக் கிடையாது காட்டாறு ஓடும் அந்த சாலையில் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.அப்பகுதியில் 1990 முதலில் டிவிஎஸ் 50 ஓட்டிய பெண் ஆசிரியர் நான் தான். பிறகு மேலப்பழுவூர் பள்ளியில் 13 ஆண்டுகள்.இப்போதும் அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் உரிமையோடு பேசுகிறார்கள் என்பதே நான் மாணவர் மனதில் இருக்கிறேன் என்ற நிறைவைத் தருகிறது.

காலம் சிமெண்ட் ஆலைப்புகை ஒவ்வாமை காரணமாக 2002 சனவரியில் புதுக்கோட்டை மழையூருக்கு வர வழைத்தது. 
அங்கிருந்து 2005 இல் இப்போது பணிபுரியும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2005 ஜூலை 6 ஆம் தேதி வந்தேன்.காலம் நிறைய அனுபவங்களை இந்தப் பணியில் தந்து பக்குவப்படுத்தி உள்ளது.
 மாணவர்களிடம் இருந்து தினம் தினம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

ஆசிரியராக இருந்த என்னை அம்மாவாக தத்தெடுத்து கொண்ட பவித்ரா எனக்கு சிறப்பு குழந்தைகளை எப்படி நேசிப்பது என்பதை கற்றுக் கொடுத்தாள்.நிறைய அனுபவங்கள் என்னை செதுக்கி உள்ளன.
2017 இல் புதிய பாடத்திட்டக்குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி,2022 இல் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் அயல்நாட்டு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி அனுபவங்கள் மறக்க முடியாத நினைவுகள்.

37 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன் இப்போதும் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவியாக...
மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியராக வாழ்வதே நிறைவாக கருதுகிறேன்.

Friday, 3 May 2024

ஹீரா மண்டி

ஹீராமண்டி தி டைமண்ட் பஜார்


 தொலைக்காட்சித் தொடர் 
இந்தி மொழியில்2024  மே 1 அன்று வெளியானது.


இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி
200 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவாபுகள் தங்களின் சந்தோஷத்திற்காக பெண்களை விலைக்கு வாங்கி பயன் படுத்தி கொள்ளும் இடம் தான் ஹீரா மண்டி .
இக்கதை சுதந்திர போராட்டக் காலத்தில் லாகூரில் நடந்த உண்மையைத் தழுவியது.
 ஹீராமண்டி  அரண்மனையின் ராணிமல்லிகாஜானாக மனீஷா கொய்ராலா  அட்டகாசமாக நடித்துள்ளார்.கம்பீரமான ராணியாக  அவள் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிந்தவளாக இறுதியில் தனது மகளுக்காக அவள் அடையும் மரணவேதனை என கலக்கி உள்ளார்.
அவளது ஆண் குழந்தையை அவளது அக்கா விற்றுவிட்டு நீ வயிற்றில் சுமந்த தை நான் கழுத்தில் சுமக்கிறேன் என்று கூறும் காட்சி விலைமாதுக்களின் வலியை உணரவைக்கிறது.அங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்பதை கூறும் காட்சி கொடுமை.
தனது அம்மாவை சித்தி மல்லிகா கொன்றதற்கு பழி வாங்கத் துடிக்கும் ரெஹானாவாக- சோனாக்ஷி சின்ஹா அற்புதமாக நடித்துள்ளார்.தங்களைப் பயன் படுத்தி கொள்ளும் ஆங்கிலேயர்களின் உதவியோடு சித்தியின் அரண்மனை ஆட்சியைத் தகர்த்து பழிவாங்க முற்படுகிறார்.
மல்லிகா ஜானின் மகள் பிபோஜானாக அதிதி ராவ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புரட்சியாளர்களுக்கு உதவி செய்து இறுதியில் மரணதண்டனை ஏற்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்து உள்ளார்.
மல்லிகாஜானின் இரண்டாவது மகள் ஆலம்ஜானா ஷர்மின்ஷேகல் நடித்துள்ளார்.வேசிகளின் உலகத்தில் ஒரு கவிஞராக வாழ ஆசைப்படும் கனவு நிறைவேறாத ஒன்றாகவே உள்ளதை தனது நடிப்பால் நம்மிடம் கடத்திவிடுகிறார்.

,சஞ்சீதா ஷேய்க் முதற்கொண்டு பலர் நடித்திருக்கும் இந்தத் தொடரில் அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஹீரா மண்டி பெண்களின் உலகம் நவாப்களின் வருகையால் வளமிக்கதாக உள்ளது.
வேசிகள் என்று சமூகத்தால் அழைக்கப்படும் அவர்களின் உலகத்தைக் கண்முன் காட்டுகிறது.
அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்டாலும் இந்த சமூகம் அவர்களை வேசியாகவே எண்ணும் நிலையில் அவர்களின் தூய்மையான காதலும் புறந்தள்ளப்படுகிறது.


பிரிட்டிஷ் அரசு ஆட்சி காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது வரலாற்றில் புறந்தள்ளப்பட்ட பெண்களின் பங்களிப்பிற்கு இந்தத் தொடர் நியாயம் செய்து உள்ளது.

விலைமாதுகளின் வலி நிறைந்த உலகம், நவாபுகள் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டு செய்யும் கொடுமை,சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு இவற்றை மையமாகக் கொண்டு படமாக்கிய விதம் சிறப்பு.

பாடல்கள் அருமை தொடர் முழுவதும் இழையும் சோக இசை பெண்களின் துயர மூச்சாக ஒலிக்கிறது.எடிட்டிங் மிக அருமை எந்த இடத்திலும் தொய்வில்லாத  தன்மை.
தொடர் தானே என்று இல்லாமல் மிகுந்த பொருட்செலவில் அக்காலத்தை கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.

மெழுகுவர்த்தின் ஒலியில் சில காட்சிகள் கண்களைவிட்டு அகல மறுக்கின்றன.

அனைவரும் காண வேண்டிய ஒரு தொடர் HEErRAMANDI

Monday, 4 March 2024

சிற்றலை மீதமர் தும்பி கவிதை நூல்

ரேவதி ராம் எழுதிய " சிற்றலை மீதமர் தும்பி" கவிதை நூல் விமர்சனம்.
தும்பி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எந்த வயதிலும் தும்பியைப் பார்த்தால் ஆசையாகத் தொட ஓட வைக்கும் இக்கவிதைகளைப் போல.
மனம் வறண்ட பாலைநிலத்தில் மழைத்துளியென ஒரு சொல் போதும் வனமாகிவிடுவேன் என்ற கவிதை சொல்லாலே வாழ்கிறது இவ்வுலகு என்பதை உணர்த்தும் கவிதை.
" காய்ந்து கருவேறிய
மரமாய் நிற்கும்
என்மனம்.
ஒவ்வொரு பட்டையாய் உதிர
உன் மொழி கேட்டு.
பச்சை வாடை கிளம்பி
முத்திரை ஒன்று உள்ளுக்குள்
துளிர்க்கத் தொடங்கியுள்ளது."
இருந்ததையும் இன்மையையும் ஒன்றாய் பார்க்கும் ஜென் தத்துவக் கவிதைகள் பல உண்டு.வீழும் சருகின் நினைவலைகள் தரை இறங்காமலே நினைவுகளுடன் ஏ வாழ வைக்கும் கவிதையாக.
கருத்துச் சுதந்திரம் அற்ற இந்த நாட்டில் கடவுளைப் பற்றி எழுதினால் கைது நிச்சயம் என்பதைக் கூறும் அரசியல் கவிதையாக
" ஆமாம்
எழுத வேண்டும்
கவிதைதான்
கடவுளைக் குறித்துத் தான்
பேனாவைப் பிடிக்கையில்
சிறு சந்தேகம்
கைதாகப் போவது
நானா?
சொல்லா?"
சொல்லைத் தாங்காது கைது என்ன? சொல்லிற்காக உயிரைக் கொடுத்த கௌரி சங்கர் போல பலரைக் கண்முன்னே வரவழைத்த கவிதை .
காதலைக் கூறும் பல கவிதைகள் மிக அருமை.
பல கவிதைகளைக் குறியீட்டுக் கவிதைகளாக உணர முடிகிறது.
" நீரில் தத்தளித்த
சிற்றெறும்பிற்காக
ஒற்றை இலையை
உதிர்க்கிறது
பெருமரம்".
இது பேரன்பால் கரம் கொடுத்து துயரங்களைத் துடைக்க முயலும் கவிதையாகிறது.
எது சாமி? எனக் கேள்வி கேட்கும் கவிதைக்கு பதிலைத் தான் உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது.
வாசிக்கப்படாத கவிதையாக வாழும் கவிஞரின் வாழ்க்கை இசையாக உலகை வெல்லட்டும்.
இசையாக,தும்பியாக,இலையாக,சருகாக,
மரமாக,நதியாக ,என இயற்கையில் கரையும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இலக்கிய மகள் பெறும் புகழை நான் பெற்றதாகவே கருதி எனது மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, 3 March 2024

"கனவின் இசைக்குறிப்பு "நூல் விமர்சனம்

கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்  எழுதிய"கனவின் இசைக்குறிப்பு " கவிதை நூல்.
நூலின் பதிப்புரையும் ,அணிந்துரையும் பேரன்பின் பிரதிபலிப்பு.
இணையரின் கனவை நனவாக்க கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan எடுத்துக் கொண்ட முயற்சிகளையே ஒரு நூலாக எழுதலாம். கரம்பிடித்து இணையரை கவிதை வானில் சிறகடிக்க விட்டு பார்த்து மகிழும் அன்புத் தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
"சிறகுகள் துளிர்க்கும் கனவு" என்ற கவிதையில் துவங்கி
" முடிவும் தொடக்கமும்" என்ற கவிதையில் முடியும் இந்த நூல் முழுவதும் வாசிக்கும் போது ,பின்னணியில் இளையராஜாவின் இசையை உணர்ந்தால் கவிஞரின் வானத்தில் நீங்களும் பறவையாக ஆகமுடியும்.
குழந்தையின் அன்பில் கரைந்த தாய் வளர்ந்த மகளிலும் குழந்தமையை எண்ணித் ததும்பும் தாய்மைக்கவிதை,
இலை , நிலா,பூநாகம் தடாகம்,
அரசியல், காதல், காணும் காட்சிகள்,
தோழியின் நிலை, வண்ணத்துப்பூச்சி, தேநீர்,உறைந்து மீளும் அங்காடி, மனம் வருடும் ஹரிஹரனின் இசை,நட்பு,பதின்மம்,வேங்கை வயல், குளம், செவிலியர், செருப்பு என பற்பல பாடுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு குறியீட்டு கவிதைகள்,படிமக்கவிதைகளை எழுதி உள்ளார்.
சில கவிதைகள் முத்தம் தரும், சில கவிதைகள் வாதை தரும், சில கவிதைகள் வன்மை காட்டும்...எல்லாக் கவிதைகளிலும் மனித நேயம் வாழும்.பெரிதும் நேசிக்கும் படும் தந்தை பெரியாரின் கவிதை.

எனக்கு பிடித்த சில கவிதைகள்
"நரம்புகளில் ஊர்கிறது எறும்பு
சிலிர்த்துக் கொள்கிறது
இலை'
இக்கவிதையைப் படிக்கும் போது நமது நரம்புகள் சிலிர்ப்பதை உணர முடியும்.

"சவாரி குதிரைகளை  வரைவது தண்டனை எனக்கூறும் தோழிக்காக இரங்கும் கவிதையொன்று.
தேநீர் இவரது கவிதைகளில் பல இடங்களில் இடம் பிடிக்கிறது நமது மனங்களிலும்.
அவரது
" அகல் அளவு இதயத்தில்
தேக்கரண்டி சொல் நிறைத்து
நின்றெரியும் சிறு சுடர் _ நீ"
சுடர் பிரகாசமாக எரிந்து பல கவிதைகளுக்கு ஒளி கூட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சாத்தானின் பிள்ளைகளைப் போல கவலையற்று வாழவே நேர்மையான உள்ளங்கள் விரும்பும்..
பரிதவிப்பின் படபடப்பைக் கூறும் கவிதையாக
" செவிமடுக்கத் துணிந்த நொடிக்கு
சிலந்தி வலையில் படபடக்கும்
தும்பியின் சாயல் "சிறப்பானதொரு கவிதை.
நிறைய கவிதைகளால் நமது மனதை நெய்து வலைசெய்து பிடித்து வைத்துக் கொள்கிறார்.
புதுக்கோட்டை இலக்கிய உலகின் இவரது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக..... இந்நூல் " கனவின் இசைக்குறிப்பாக" இசைக்கிறது. 
பேரன்புக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டுச் சிறப்பித்த நூலில் இருந்து,
தீக்கமழும் செங்குருதி,நெகிழி உதடுகள் என பல புதிய பதங்களை முத்தெடுக்கலாம்.
சமூகத்தின் மீதான தீரா அன்பை கவிதைகளாக வடித்து,
கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வானில் தடம் பதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

முட்டிக் குறிச்சி நாவல் விமர்சனம்

எழுத்தாளர் சோலச்சி எழுதிய"முட்டிக்குறிச்சி "நாவல்

 முட்டி குறிச்சி நாவல் மனதில் படிமமான நாவலாக, நான் வாசித்த நாவல்களில் சிறப்பான நாவலாகக் கருதுகிறேன் .

முட்டிக் குறிச்சி என்பது ஒரு பெயர் காரணம். அதிர்ச்சி அளிக்கக் கூடிய,ஒரு சமூக சீர்கேட்டின் அடையாளச் சின்னம்.

 இந்த நாவல் படிக்கும் பொழுது நம்மையும் இயற்கையின் சூழலில் அமரவைத்து ரசிக்க வைக்கின்றது.

தீத்தன் பாலாயியின் மகன் அழகப்பனும் மருமகள் பொன்னழகியும் வயல்நாட்டிலிருந்து இடையாத்தூருக்கு அடர்ந்த காட்டின் வழியாக செல்வதாக நாவல் துவங்குகிறது.
அப்படிச் செல்லும் போது இருவருக்குமிடையேயான பேரன்பு,காதல், தாம்பத்யம்,பொன்னழகியின் மருத்துவ அறிவு,நமக்கு முந்தைய மூன்றாவது தலைமுறை காலத்தில் நிகழும் கதை.

 வழியெங்கும் பறவைகளை, மரங்களை, மூலிகைகளை அவர்கள் மூலம் ஆசிரியர் நமக்கு கடத்துகிறார்.

சங்க இலக்கியம் கூறும் ஒல்லையூர் பற்றி, தொரட்டிப்பழ வாசனை பற்றி படிக்கும் போது நமக்கும் எச்சில் ஊறவைக்கும் எழுத்து.
காளைக்கோழி மலை என்ற தேன் மலையின் தேனிற்காக படை திரட்டி வந்த தனஞ்செயவேலனை வெற்றி கொண்ட கார்வேந்தன் படைகள் என வரலாற்று செய்திகளையும் ஆங்காங்கே கூறிச் செல்லும் பாங்கு சிறப்பு.

ஒடுக்கப் பட்ட மனிதர்களிடையே காணப்படும் மனித நேயம்,அவர்களை தீண்டத்தகாதவர்களாக புறந்தள்ளிய கொடுமை.அவர்களது வாழ்வியலை நமக்கு அணுக்கமாக கூறும் நாவல்.
பசுவின் பிரசவ வேதனை கண்டு தன் தாய் வலி உணரும் அழகப்பன்.

தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பிச்சாயி... ஆதித் தமிழர் மருத்துவத்தில் சிறந்த அறிவுடையோராக வாழ்ந்திருந்த தை உணர வைக்கிறார்.

பிழைப்பு தேடி மேகாட்டு பக்கமிருந்து வந்தவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை அடிமைப்படுத்திய வஞ்சகம் ஆரிய திராவிட பகையைக் கூறும்.மேலக்குடியிருப்பு மக்களுக்கும் கீழக்குடியிருப்பு மக்களுக்கும் இடையே நடக்கும் வாழ்தலுக்கான போராட்டத்தை உணர்த்துகிறது.

ஊரிலுள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஊருக்கு வெளியே முட்டிக் குறிச்சி என்ற சுகாதாரமற்ற குடிசையில் தங்க வேண்டும். அப்போது ஆண்கள் சமைத்து அதை( சிறிய மண்சட்டியில்) முட்டியில் வைத்து சிறுமிகளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த சோற்றுக்கு முட்டிச்சோறு என்று பெயர். பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை பற்றி பொன்னழகி அங்குள்ள பெண்களிடம் உரையாடுகிறாள்.இந்த கொடுமையை ஒழித்தால் தான் பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று எண்ணிய பொன்னழகி முட்டிக்கு பிரச்சினை எப்படி மாற்றினாள் என்பதை நாவலைப் படிப்பதன் மூலம் உணரலாம்.

 பெண்களை இழிவுப்படுத்துகின்ற கொடுமைக்கு பொன்னழகி எப்படி முடிவுக்கட்டினாள் அவளால் முட்டிக்குறிச்சி எப்படி மாறுகிறது என்பதை உணர்த்தும் நாவலாக "முட்டிக்குறிச்சி " உள்ளது.

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 ஆண்டு பெற்றுள்ளது..
எழுத்தாளர் சோலச்சியின் முதல் நாவல் முத்தான நாவலாக அமைந்துள்ளது.மனம் நிறைந்த வாழ்த்துகள்.
விலை ₹320
எழுத்து பிரசுரம் சென்னை

Tuesday, 4 July 2023

மாமன்னன்

மாமன்னன் 
உண்மையில் நடிப்பில் வடிவேலு மாமன்னன் என்று நிரூபித்த படம்.
பண்பாடு இல்லாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை ,அரசியல் பண்பாடு தெரிந்தவர் வெல்ல முடியும் என்று உரைக்கும் களம்.
வாழ்வியல் உண்மை கதையாக ,கதையே இங்கு நாயகனாக உருவெடுத்துள்ளது.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ,தீண்டாமை தலைவிரித்து ஆடுவதை கண்முன் காண்கிறோம். இதெல்லாம் இப்போது இல்லை என்று சமாளிக்க முடியாது .ஏனெனில் இன்னும் சாட்சியாக வேங்கை வயல் .முடிவு தெரிந்தும் தீர்ப்பு வழங்காத, அல்லது வழங்க விரும்பாத பண்பாடு இல்லாதololo அரசியல்.
தெறிக்கவிடும் வசனம் ,மனதில் பதியும் காட்சிகள், ஆதிக்க குருதி நிறைந்த செம்மண் களம்.
 தந்தைக்கு மகனுக்கும் நடக்கின்ற போராட்டம். ஒரு மகன் தந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தக்கூடிய படம் .
பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு சம்பாதிக்க நினைக்கும் திரை உலகத்தில் இப்படியும் ஒரு படம் .இனி தமிழ்ச் சினிமா எதார்த்தத்தை காட்சிப்படுத்தாமல், நாலு பாட்டு நாலு சண்டை என ஓட்ட முடியாது. மாமன்னனுக்கு கிடைத்த வரவேற்rt.ghhjjgபு, மக்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் உணர்த்தியுள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டியது தானே நியாயம்.
நாயக பாவம் இன்றி, வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பை பெறுகிறார் உதயநிதி .தனது ஆழமான நடிப்பால் மிளர்கிறார். படத்தின் கருவாக என்ன இருக்க வேண்டும் ?
 படம் யாருக்காக எடுக்க வேண்டும்?
 படம் எதைக் கூற வேண்டும் ?என்பதில் இயக்குனர் மாறி செல்வராஜ் மிகத் தெளிவாக இருப்பது, வலுவான திரைக்கதைக்கு அஸ்திவாரம் ஆகிறது. பகத் பாசிலின் நடிப்பு அவரது திறமையின் உச்சம் எனலாம்.
 கண்டும் காணாமல் அலட்சியமாக நாம் கடந்த உண்மைகள் முகத்தில் அறைந்து நமக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்குவதை தவிர்க்க இயலவில்லை. ஏன் கடவுளாக இருந்தாலும் கூட கனக சபை ஏறிட எல்லாராலும் முடியாதல்லவா .வேரோடு இருக்கும் சாதி மத ஆதிக்க உணர்வை தகர்த்தெறியும் சிறு உளியாக மாமன்னன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இப்படம் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும்.

Saturday, 14 April 2018

vee 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..