Monday 4 March 2024

சிற்றலை மீதமர் தும்பி கவிதை நூல்

ரேவதி ராம் எழுதிய " சிற்றலை மீதமர் தும்பி" கவிதை நூல் விமர்சனம்.
தும்பி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எந்த வயதிலும் தும்பியைப் பார்த்தால் ஆசையாகத் தொட ஓட வைக்கும் இக்கவிதைகளைப் போல.
மனம் வறண்ட பாலைநிலத்தில் மழைத்துளியென ஒரு சொல் போதும் வனமாகிவிடுவேன் என்ற கவிதை சொல்லாலே வாழ்கிறது இவ்வுலகு என்பதை உணர்த்தும் கவிதை.
" காய்ந்து கருவேறிய
மரமாய் நிற்கும்
என்மனம்.
ஒவ்வொரு பட்டையாய் உதிர
உன் மொழி கேட்டு.
பச்சை வாடை கிளம்பி
முத்திரை ஒன்று உள்ளுக்குள்
துளிர்க்கத் தொடங்கியுள்ளது."
இருந்ததையும் இன்மையையும் ஒன்றாய் பார்க்கும் ஜென் தத்துவக் கவிதைகள் பல உண்டு.வீழும் சருகின் நினைவலைகள் தரை இறங்காமலே நினைவுகளுடன் ஏ வாழ வைக்கும் கவிதையாக.
கருத்துச் சுதந்திரம் அற்ற இந்த நாட்டில் கடவுளைப் பற்றி எழுதினால் கைது நிச்சயம் என்பதைக் கூறும் அரசியல் கவிதையாக
" ஆமாம்
எழுத வேண்டும்
கவிதைதான்
கடவுளைக் குறித்துத் தான்
பேனாவைப் பிடிக்கையில்
சிறு சந்தேகம்
கைதாகப் போவது
நானா?
சொல்லா?"
சொல்லைத் தாங்காது கைது என்ன? சொல்லிற்காக உயிரைக் கொடுத்த கௌரி சங்கர் போல பலரைக் கண்முன்னே வரவழைத்த கவிதை .
காதலைக் கூறும் பல கவிதைகள் மிக அருமை.
பல கவிதைகளைக் குறியீட்டுக் கவிதைகளாக உணர முடிகிறது.
" நீரில் தத்தளித்த
சிற்றெறும்பிற்காக
ஒற்றை இலையை
உதிர்க்கிறது
பெருமரம்".
இது பேரன்பால் கரம் கொடுத்து துயரங்களைத் துடைக்க முயலும் கவிதையாகிறது.
எது சாமி? எனக் கேள்வி கேட்கும் கவிதைக்கு பதிலைத் தான் உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது.
வாசிக்கப்படாத கவிதையாக வாழும் கவிஞரின் வாழ்க்கை இசையாக உலகை வெல்லட்டும்.
இசையாக,தும்பியாக,இலையாக,சருகாக,
மரமாக,நதியாக ,என இயற்கையில் கரையும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இலக்கிய மகள் பெறும் புகழை நான் பெற்றதாகவே கருதி எனது மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday 3 March 2024

"கனவின் இசைக்குறிப்பு "நூல் விமர்சனம்

கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்  எழுதிய"கனவின் இசைக்குறிப்பு " கவிதை நூல்.
நூலின் பதிப்புரையும் ,அணிந்துரையும் பேரன்பின் பிரதிபலிப்பு.
இணையரின் கனவை நனவாக்க கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan எடுத்துக் கொண்ட முயற்சிகளையே ஒரு நூலாக எழுதலாம். கரம்பிடித்து இணையரை கவிதை வானில் சிறகடிக்க விட்டு பார்த்து மகிழும் அன்புத் தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
"சிறகுகள் துளிர்க்கும் கனவு" என்ற கவிதையில் துவங்கி
" முடிவும் தொடக்கமும்" என்ற கவிதையில் முடியும் இந்த நூல் முழுவதும் வாசிக்கும் போது ,பின்னணியில் இளையராஜாவின் இசையை உணர்ந்தால் கவிஞரின் வானத்தில் நீங்களும் பறவையாக ஆகமுடியும்.
குழந்தையின் அன்பில் கரைந்த தாய் வளர்ந்த மகளிலும் குழந்தமையை எண்ணித் ததும்பும் தாய்மைக்கவிதை,
இலை , நிலா,பூநாகம் தடாகம்,
அரசியல், காதல், காணும் காட்சிகள்,
தோழியின் நிலை, வண்ணத்துப்பூச்சி, தேநீர்,உறைந்து மீளும் அங்காடி, மனம் வருடும் ஹரிஹரனின் இசை,நட்பு,பதின்மம்,வேங்கை வயல், குளம், செவிலியர், செருப்பு என பற்பல பாடுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு குறியீட்டு கவிதைகள்,படிமக்கவிதைகளை எழுதி உள்ளார்.
சில கவிதைகள் முத்தம் தரும், சில கவிதைகள் வாதை தரும், சில கவிதைகள் வன்மை காட்டும்...எல்லாக் கவிதைகளிலும் மனித நேயம் வாழும்.பெரிதும் நேசிக்கும் படும் தந்தை பெரியாரின் கவிதை.

எனக்கு பிடித்த சில கவிதைகள்
"நரம்புகளில் ஊர்கிறது எறும்பு
சிலிர்த்துக் கொள்கிறது
இலை'
இக்கவிதையைப் படிக்கும் போது நமது நரம்புகள் சிலிர்ப்பதை உணர முடியும்.

"சவாரி குதிரைகளை  வரைவது தண்டனை எனக்கூறும் தோழிக்காக இரங்கும் கவிதையொன்று.
தேநீர் இவரது கவிதைகளில் பல இடங்களில் இடம் பிடிக்கிறது நமது மனங்களிலும்.
அவரது
" அகல் அளவு இதயத்தில்
தேக்கரண்டி சொல் நிறைத்து
நின்றெரியும் சிறு சுடர் _ நீ"
சுடர் பிரகாசமாக எரிந்து பல கவிதைகளுக்கு ஒளி கூட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சாத்தானின் பிள்ளைகளைப் போல கவலையற்று வாழவே நேர்மையான உள்ளங்கள் விரும்பும்..
பரிதவிப்பின் படபடப்பைக் கூறும் கவிதையாக
" செவிமடுக்கத் துணிந்த நொடிக்கு
சிலந்தி வலையில் படபடக்கும்
தும்பியின் சாயல் "சிறப்பானதொரு கவிதை.
நிறைய கவிதைகளால் நமது மனதை நெய்து வலைசெய்து பிடித்து வைத்துக் கொள்கிறார்.
புதுக்கோட்டை இலக்கிய உலகின் இவரது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக..... இந்நூல் " கனவின் இசைக்குறிப்பாக" இசைக்கிறது. 
பேரன்புக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டுச் சிறப்பித்த நூலில் இருந்து,
தீக்கமழும் செங்குருதி,நெகிழி உதடுகள் என பல புதிய பதங்களை முத்தெடுக்கலாம்.
சமூகத்தின் மீதான தீரா அன்பை கவிதைகளாக வடித்து,
கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வானில் தடம் பதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

முட்டிக் குறிச்சி நாவல் விமர்சனம்

எழுத்தாளர் சோலச்சி எழுதிய"முட்டிக்குறிச்சி "நாவல்

 முட்டி குறிச்சி நாவல் மனதில் படிமமான நாவலாக, நான் வாசித்த நாவல்களில் சிறப்பான நாவலாகக் கருதுகிறேன் .

முட்டிக் குறிச்சி என்பது ஒரு பெயர் காரணம். அதிர்ச்சி அளிக்கக் கூடிய,ஒரு சமூக சீர்கேட்டின் அடையாளச் சின்னம்.

 இந்த நாவல் படிக்கும் பொழுது நம்மையும் இயற்கையின் சூழலில் அமரவைத்து ரசிக்க வைக்கின்றது.

தீத்தன் பாலாயியின் மகன் அழகப்பனும் மருமகள் பொன்னழகியும் வயல்நாட்டிலிருந்து இடையாத்தூருக்கு அடர்ந்த காட்டின் வழியாக செல்வதாக நாவல் துவங்குகிறது.
அப்படிச் செல்லும் போது இருவருக்குமிடையேயான பேரன்பு,காதல், தாம்பத்யம்,பொன்னழகியின் மருத்துவ அறிவு,நமக்கு முந்தைய மூன்றாவது தலைமுறை காலத்தில் நிகழும் கதை.

 வழியெங்கும் பறவைகளை, மரங்களை, மூலிகைகளை அவர்கள் மூலம் ஆசிரியர் நமக்கு கடத்துகிறார்.

சங்க இலக்கியம் கூறும் ஒல்லையூர் பற்றி, தொரட்டிப்பழ வாசனை பற்றி படிக்கும் போது நமக்கும் எச்சில் ஊறவைக்கும் எழுத்து.
காளைக்கோழி மலை என்ற தேன் மலையின் தேனிற்காக படை திரட்டி வந்த தனஞ்செயவேலனை வெற்றி கொண்ட கார்வேந்தன் படைகள் என வரலாற்று செய்திகளையும் ஆங்காங்கே கூறிச் செல்லும் பாங்கு சிறப்பு.

ஒடுக்கப் பட்ட மனிதர்களிடையே காணப்படும் மனித நேயம்,அவர்களை தீண்டத்தகாதவர்களாக புறந்தள்ளிய கொடுமை.அவர்களது வாழ்வியலை நமக்கு அணுக்கமாக கூறும் நாவல்.
பசுவின் பிரசவ வேதனை கண்டு தன் தாய் வலி உணரும் அழகப்பன்.

தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பிச்சாயி... ஆதித் தமிழர் மருத்துவத்தில் சிறந்த அறிவுடையோராக வாழ்ந்திருந்த தை உணர வைக்கிறார்.

பிழைப்பு தேடி மேகாட்டு பக்கமிருந்து வந்தவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை அடிமைப்படுத்திய வஞ்சகம் ஆரிய திராவிட பகையைக் கூறும்.மேலக்குடியிருப்பு மக்களுக்கும் கீழக்குடியிருப்பு மக்களுக்கும் இடையே நடக்கும் வாழ்தலுக்கான போராட்டத்தை உணர்த்துகிறது.

ஊரிலுள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஊருக்கு வெளியே முட்டிக் குறிச்சி என்ற சுகாதாரமற்ற குடிசையில் தங்க வேண்டும். அப்போது ஆண்கள் சமைத்து அதை( சிறிய மண்சட்டியில்) முட்டியில் வைத்து சிறுமிகளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த சோற்றுக்கு முட்டிச்சோறு என்று பெயர். பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை பற்றி பொன்னழகி அங்குள்ள பெண்களிடம் உரையாடுகிறாள்.இந்த கொடுமையை ஒழித்தால் தான் பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று எண்ணிய பொன்னழகி முட்டிக்கு பிரச்சினை எப்படி மாற்றினாள் என்பதை நாவலைப் படிப்பதன் மூலம் உணரலாம்.

 பெண்களை இழிவுப்படுத்துகின்ற கொடுமைக்கு பொன்னழகி எப்படி முடிவுக்கட்டினாள் அவளால் முட்டிக்குறிச்சி எப்படி மாறுகிறது என்பதை உணர்த்தும் நாவலாக "முட்டிக்குறிச்சி " உள்ளது.

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 ஆண்டு பெற்றுள்ளது..
எழுத்தாளர் சோலச்சியின் முதல் நாவல் முத்தான நாவலாக அமைந்துள்ளது.மனம் நிறைந்த வாழ்த்துகள்.
விலை ₹320
எழுத்து பிரசுரம் சென்னை