Monday 19 October 2015

வீதி கலைஇலக்கியக்களம்-கூட்டம் 20[18.10.15]

வீதி கலை இலக்கியக்களம் .கூட்டம் 20
-------------------------------------------------------------
18.10.15 அன்று வீதியின் 20 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையேற்றார்.










மதுரையில் இருந்து வந்து சிறப்பு விருந்தினராக கவிஞர் மா.காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்...அவர் தனது உரையில் வீதி கூட்டம் என்பது நாலு பேர் கலந்து கொண்டு சாதாரணமாக நடக்கும் கூட்டமாக நினைத்தேன் ஆனால் இங்கு முறையாக கவிஞர்களை, கட்டுரையாளர்களை,சிறுகதையாசிரியர்களை அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைக்கூறி தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் களமாக அமைந்துள்ளதை பார்த்து வியக்கிறேன் என்றார்.கவிதை குறித்து பேசுகையில் தனக்கு பிடித்த கவிதைகளைப்பற்றிய ஒப்பீடு செய்து கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது..

திருச்சி பாரத மிகுமிந்தொழிலக முத்தமிழ்மன்ற நிர்வாகிகள் மற்றும் அதன் பொதுச்செயலாளர் திருமிகு மணிவண்ணன் ஆகியோர் முத்தமிழ்மன்றத்தின் சார்பாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



கவிதை வாசித்த கவிஞர் சுகன்யா ஞானசூரி இலங்கை மக்களின் வேதனையைக்குறித்தும்,தமிழ்மொழியின் மேல் கொண்ட அக்கறை கொண்ட கவிதைகளைத்தந்து கூட்டத்தினை  சிறப்பான இடத்திற்கு நகர்த்தினார்..அவரின் கவிதைகள் குறித்து விவாதிக்கப்பட்டது..


சிறுகதை-

 “மீண்டும் அகிலன்”என்ற அடர்த்தியான செறிவான கதையை கவிஞர் மாலதி அவர்கள் வாசிக்க அக்கதையின் உண்மை அனைவர் மனதிலும் தைத்தது..அவரின் முதல்கதை அனைவராலும் நேர்மறையாக விமர்சிக்கப்பட்டது...

கட்டுரை

”இரவின் பாடல் “என்ற இரவு குறித்த கட்டுரையைக் கவிதை நடையில் நடைச்சித்திரமாய் ..காட்சிப்படுத்தி அனைவர் மனதையும்  கவர்ந்த சுரேஷ் மான்யாவை அனைவரும் பாராட்டினர்...இன்னும் அவரது திறமைகள் குடத்திலிட்ட விளக்காக இருப்பதைக்கூறி..குன்றிலிட்ட விளக்காக அவரின் திறமைகள் ஒளிவீச வாழ்த்தினர்...

நூல் விமர்சனம்-

கி.ரா.வின் “பெண் கதைகள்”குறித்து கவிஞர் ஸ்டாலின் சரவணன் விமர்சனம் செய்தார்.அந்நூலில்  மூன்று கதைகள் குறித்து கூறுகையில்  ”பேதை “என்ற பேச்சி என்ற பென்ணின் கதை அனைவர் மனதிலும் ஊடுறுவி மனதை கீறிச்சென்றதை உணரமுடிந்தது...மீளாது தவிக்க வைத்தாள் பேச்சி..இரண்டாவது கதையில் கொண்டையா மல்லம்மாவின் கூடலுக்கான தவிப்புகளை அதற்கே உரிய மனநிலையில் கதை ஆசிரியரை விட ஸ்டாலின் கூறி அசத்தினார்...இவருக்குன்னு கிடைச்சிடுது ....காதலைக்கூறாமல் கூறத்தவிக்கும் கதைகள்...

சென்ற வீதிக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட கவிஞர் .முத்துச்சாமி அவர்களுக்கு தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் அளித்து மாதாமாதம் ரூ5000 உதவித்தொகை அளித்திருப்பதைக்கூறி வீதிக்கூட்டம் சிறப்பான பாதையில் செல்வதை அடையாளங்காட்டினார்..சென்ற மாதக்கூட்ட அமைப்பாளர் கவிஞர் செல்வா...

வலைப்பதிவர் விழாவில் கலந்து கொண்ட யுகே கார்த்திக் ,முகுந்த்.புனிதா.நீலா,அமிர்தாதமிழ்,அப்துல் ஜலீல் மற்றும் நாகநாதன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது...

விழாவில் அறிவிப்புகளாக எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் நூல் வெளியீடு 24.10.15 அன்று புதுகை நில அளவையர் சங்கத்தில் நடக்க உள்ளதையும்,வாசிப்பு இயக்கம் குறித்த பயிற்சி 24,25 ஆகிய நாட்களில் நடக்க உள்ளதையும் அறிவித்தார்கள் சுராவும் கவிஞர் நீலாவும்.

இம்மாத விழா ஒருங்கிணைப்பாளர்களான அப்துல் ஜலீல்,அமிர்தா இருவரும் மிகுந்த சிரத்தையுடன் விழாவை நடத்தியது அருமை...எல்லோருமே மறந்து விட்ட அஞ்சலட்டையில் விழாவிற்கு அழைப்பு அனுப்பி நினைவுகளை கடிதக்காலங்களுக்கு அனுப்பியமைக்கு இருவருக்கும் நன்றி...

Sunday 27 September 2015

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19
நாள்:27.9.15
இடம் :புதுகை

இன்று வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 19 வழக்கம் போல் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.

கூட்டம் துவங்கும் முன் தங்களது அனுபவங்களைக்கூறும் நிகழ்வில்

ஸ்ரீமலையப்பன் தங்களது விதைக்கலாம் அமைப்பைப்பற்றியும்,வலைப்பதிவர் கையேடு தயாரிப்புக்குறித்தும் ,,

சுகன்யா ஞானசூரி வீதிக்கூட்டம் பற்றியும்,

கீதா வலைப்பதிவர் விழாப்பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கொடி பாரமா?
பாடலை எழுதிய 97 வயது மூத்த பாடலாசிரியர் நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டிக்கிராமத்திலிருந்து வர விழா துவங்கியது..

தலைமை:பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்

வரவேற்புரை
செல்வா அவர்கள் வரவேற்புரையே தற்கால நிகழ்வுகள் நிறைந்த கவிதையாகக்கூறி வரவேற்றார்...

”வீதிக்கு வந்து விட்டோம்
வேறு வழியே இல்லை
எரிந்தே கிடந்தாலும்
இழுத்துச் செல்ல வேண்டும் தேரை”

வீதியின் குரல்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன”என்றார்.

கவிதை -மாலதி

அப்துல் கலாம் பற்றியும் மாணவர்கள் குறித்தும்சிறப்பான கவிதைகளை வாசித்தார்
“சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்
நமைச் சீண்டிப்பார்க்கும் சிற்றுளிகள்”

என்ற வரிகள் அனைவராலும் பேசப்பட்டன...

கட்டுரை -

மீண்டும் விதைக்கலாம் தமிழ்-அப்து ஜலீல்

கனிம வளங்கள் வற்றுவதைப்போல தாய் மொழியான தமிழும் வற்றிக்கொண்டு வருகிறது.மீண்டும் விதைக்க நான் தானே முயலவேண்டும் ,,..என தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் தமிழர்களின் தாய் மொழி குறித்த அக்கறையின்மை,தன் பாரம்பரியத்திற்கு மீண்டும் நாம் வரவேண்டும் என்ற அக்கறையான கட்டுரையை அருமையாக வாசித்தார்.

நூல் விமர்சனம்.கீதா

கதவுகள் திறக்கும் வானம்- கவிதை நூல்

இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு -புதியமாதவி...காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் .
விலை ரூ 110

11 மொழியில் 19 கவிஞர்கள் எழுதியுள்ள 45 கவிதைகளை உள்ளடக்கியது.

மும்பையில் வாழும் கவிஞரான புதிய மாதவி தனது முன்னுரையில்

” பெண் மொழிக்கு தேசங்கள்,மொழிகள்,இனங்கள் இல்லை”எனக்கூறி இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இந்நூல் என்கிறார்.

எந்த மொழியாக இருந்தாலும் பெண்ணின் உணர்வுகள் தங்களது மனக்குமறலை,தனக்கென ஒரு வீடில்லாத ,காலமில்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன..பெண் நிலை எந்த நாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளதை உணர முடிகின்றது.சமூக அக்கறையுள்ள இருகவிதைகள் மனதை ஆக்ரமித்துக்கொண்டது...சமூகச்சிந்தனை உள்ள பெண்ணுக்கு நேரும் வன்முறைகளை ஒரு கவிதை விளக்குகின்றது.ஒரு கவிதை சிரியா நாட்டில் குழந்தைகள் கூடச்சிறைச்சாலையில் இருப்பதையும் அந்நாட்டு மக்களின் நிலையையும் எடுத்துக்காட்டுகிறது என்றார்..

சிறுகதை-அண்டனூர் சுரா.

இலங்கை வாழும் ஒரு குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவை நோக்கி கள்ளத்தோணியில் பயணம் செய்வதைக்காட்சிகளாக்கினார்.இலங்கை மொழிநடையில் எழுதி,அவரே பாத்திரமாக மாறி வாசித்த விதம் அனைவர் மனதிலும் கதையின் வலியை உண்டாக்கியது.

சிறப்பு அழைப்பாளர் அறிமுகம் -மீரா .செல்வா

பாடலாசிரியர்,நாடக ஆசிரியர்,வசனகர்த்தா என பன்முகப்பரிமாண பி.கே.முத்துச்சாமி அவர்களை அறிமுகம் செய்தார்.







நேர்காணல்.

பாடலாசிரியர் முத்துச்சாமி அவர்கள் நேர்காணலில் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள்,தமிழக முதலமைச்சர்களுடன் திரைத்துறையில் ஈடுப்பட்ட விதம்,தனது கதையை பிறர் திருடி ஏமாற்றிய கோபம்,காலத்தால் அழியாத பாடல்களை தனது நடுங்கும் குரலால் பாடிக்காட்டினார்...

9 நாடகங்கள்,30,000 வெண்பாக்கள் இயற்றிய வெண்பா வேந்தர் என பட்டம் பெற்றவர்..முன்னால் முதலமைச்சர் காமராசர் இவரைத்தேடி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.

”மண்ணுக்கு மரம் பாரமா?”

”மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியில..”

”சின்னச்சின்ன நட நடந்து
செம்பவள வாய்திறந்து”

போன்ற புகழ் பெற்ற பாடலைப்பாடியுள்ளார்.


வறுமை சூழ்ந்து வாழ்கின்ற மாபெரும் பாடலாசிரியர் பி.கே .முத்துச்சாமி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நலிந்த அக்கலைஞருக்கு வீதிக்கூட்டம் சார்பாக ரூ 5000/-வழங்கப்பட்டது..
.தமிழகம் மறந்த மாபெரும் கலைஞரை வீதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது.\

இம்முயற்சியை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீரா.செல்வா & செல்வா ஆகியோருக்கு வீதி அமைப்பு மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியது...

அவரைப்பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளைஞருக்கு கௌரவம் செய்யப்பட்டது.


வீதியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சியைச்சேர்ந்த வி.சி.வில்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நன்றியுரை :மீரா.செல்வா

எதிலும் புதுமையாகச் செய்து பாரட்டுக்கள் பெறும் செல்வா & செல்வா கூட்டணி இன்றும் வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Sunday 23 August 2015

பிரேம்சந்த்

வீதியின் இலக்கிய ஆளுமைகளுக்கு இந்த எளியவாசகனின் பணிவான வணக்கங்கள்.
வேடிக்கையாக ஒரு கதை உண்டு. ஒரே ஒரு சிறுகதையை எழுதிய எழுத்தாளார் ஒருவரிடம் அவரது பக்கத்து வீட்டுக்காரர் கிண்டல் கொப்பளிக்கும் ஒரு கேள்வியைக் கேட்டார்.

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -18 [23.08.15]

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -18 
 
நாள் 23.08.15






   இன்று வீதி கலைஇலக்கிய கூட்டம் கவிஞர் மு.கீதா தலைமையில் மிகச்சிறப்பாக நிறைவாக நடந்தது.

காலை 9.30 மணி அளவிலிருந்தே அனைவரும் வரத்துவங்கினர்....
முதல் நிகழ்வாக

படித்ததில் பிடித்தது
                 
                      கவிஞர் முத்துப்பாண்டியன் ,கவிஞர் சோலச்சியும்,கவிஞர் சோலை மாயவன்[பொள்ளாச்சி] மூவரும், தாம் படித்த நூலைப்பற்றி  கூறினர்.

வரவேற்பு

கவிஞரும் கூட்ட அமைப்பாளருமான வைகறை சிறப்பு அழைப்பாளர்களான பொள்ளாச்சியிலிருந்து வந்து கலந்து கொண்ட கவிஞர் அம்சப்ரியா , கவிஞர் பூபாலன் மற்றும் கவிஞர் சோலை மாயவன் ஆகியோரை அறிமுகம் செய்து வரவேற்று,கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் சிறப்பாக வரவேற்றார்.

சிறப்பு நிகழ்வு-கவிதைப்போட்டி

தலைப்பு-”தணலில் வளரும் சாதி’

 பத்து மணிக்கு அரங்கில் இருந்தவர்களுக்கு தலைவர் மு.கீதா அவர்கள் தலைப்பைக் கூறி, பதினோரு மணிக்குள் எழுதி தந்திடக் கூறினார்.

கவிதை

தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு கவிதைகளை கவிஞர் பவல்ராஜ் வாசித்தார்.அதிலொன்று
          ” கட்டாயத்தலைக்கவசத்தை
            ஆதரிக்கின்றேன்
             கடன் தொல்லை”

  என சிறப்பான ஏழு கவிதைகளை வாசித்து நிகழ்வை கலகலப்பாக்கினார்...

சிறுகதை

                   படைப்பாளி பாத்திரங்களோடு ஒன்றி எழுதினால் மட்டுமே அனைவர் மனதிலும் அக்கதை இடம்பிடிக்கும். அப்படிப்பட்ட கதையான
“ பிச்சைப்புகினும்”  என்ற மதுவால் கல்வி மறுக்கப்பட்டு அப்பாவால் பிச்சை எடுக்க செல்லும் சிறுமியின் கதையை  கவிஞர் சோலச்சி உணர்வோடு படித்த விதம் மிக அருமை.

கட்டுரை

”சிலம்பில் மன்னராட்சி “என்ற தலைப்பில் புலவர் ஜெயா அவர்கள் சிலப்பதிகாரத்தில் மன்னராட்சியினை சிறப்புடன் விளக்கினார்.

பாராட்டிக் கௌரவித்தல்




*”முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே”என்ற நூலிற்காக சென்னை பாரதி இலக்கியப்பேரவையால் விருது பெற்ற கவிஞர் நா.முத்து நிலவன்.

*கணையாழி இதழில் சிறுகதைக்கான போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிஞர் தூயன்.

*இம்மாதத்தில் ”முதல் பரிசு”
 என்ற சிறுகதை நூலை வெளியிட்ட கவிஞர் சோலச்சி.

*இரு கவிதை நூல்களை[பனைமரக்காடு,நாட்குறிப்பற்றவனின் ரகசியக்குறிப்புகள்] வெளியிட்ட ஈழபாரதி.

ஆகிய நால்வருக்கும் பொன்னாடைப்போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

கவிஞர் பொன்.க அவர்கள் விருது பெற்ற கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தல்





* ”சிற்பி விருது” 2014 ஆம் ஆண்டிற்காக பெற்றுள்ள கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும்,
சிறப்புரையாற்றிய கவிஞர் பூபாலன் அவர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

*கவிஞர் முத்துநிலவன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து,புத்தகம் வழங்கி பாராட்டினார்.

*கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்  விருந்தினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து  பாராட்டினார்.

சிறப்புரை-கவிஞர் பூபாலன்.

 கவிதையின் தோற்றம் வளர்ச்சி பற்றி விரிவானதொரு ஆய்வு நோக்கில் சிறப்புரையாற்றினார்பூபாலன்.எளிமையான  உரை நிகழ்த்தி அனைவர் மனதையும் கவர்ந்த விதம் அருமை.

இலக்கிய ஆளுமை அறிமுகம்-கவிஞர் கஸ்தூரிரங்கன்

 எழுத்தாளர் பிரேம்சந்த் பற்றி அவரது கதையைக்கூறி அவரது தன்மையை அழகாக எடுத்துக்கூறினார்....எளியோருக்கான எழுத்தாளராக ,உண்மை சார்ந்து எழுதியதால் அவர் பட்ட சிரமங்கள்,இறுதிவரை வறுமையால் பாதிக்கப்பட்டு வாழ்ந்தது.என மிகச்சிறப்பானதொரு இலக்கிய ஆளுமையை அறிமுகம் செய்த விதம் அருமை.

தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி,பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் ,தமிழ் மொழியின் வளத்தை உலகோர்க்கு அறிமுகம் செய்ய மொழி பெயர்ப்புக்குழு உருவாக்க வேண்டும் என்றார்...அனைவராலும் அக்கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரது வேண்டுகோளை புதுக்கோட்டை தமிழாசிரியத்தலைவர் கும.திருப்பதி அவர்கள் நிச்சயம் செய்வோம் என உறுதி அளித்தார்.

நூல்விமர்சனம்-கவிஞர் செல்வக்குமார்.

கவிஞர் மகேஸ்வரி எழுதிய “விடியல் வெளிச்சம்”என்ற நூலைப்பற்றி தனக்கே உரியப்பாணியில், கவிதைநடையில் விமர்சனம் செய்த விதம் மிகச்சிறப்பு.

ஏற்புரை

ஏற்புரை வழங்கிய  எழுத்தாளர் மகேஸ்வரிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டப்பட்டது.

சிறப்புரை -கவிஞர் அம்சப்ரியா

                          வீதி என்ற பெயரின் சிறப்பைக்கூறி.மாணவர்களை மதிப்பெண்கள் என்ற வன்முறையால் அவர்களை அடக்கி ஒடுக்கி விடுகிறோம்...வகுப்பறை விட்டு வெளியே உள்ள அவர்களின் உலகம் மிக அழகானது...சொற்கள் ஏற்க படாத போது அது பல்வேறு வழிகளில் வெளிப்படுவதை அழகான எடுத்துக்காட்டுகள் மூலம் கூறிய போது சிறந்த ஆசிரியராக பரிணமித்தார்.

தனது ஊரில் ரேஷனுக்காகப் பல ஆண்டுகள் போராடி இல்லாத நிலை,நூலகத்திற்காக பல்லாண்டுகள் போராடி பெற்றும் இருந்தும் இல்லாத நிலை,கேளாமலே ஊருக்குள் நுழைந்த டாஸ்மார்க்கால் பெறப்படும் வருமானம் தனது ஊருக்கு பயன்படாமல் எங்கே போகின்றது?என்ற வேதனை...இச்சமூக சீர்கேட்டை எல்லாம் பதிவு செய்யக்கூடிய கவிதைகளே மாற்றங்களுக்கு வழி கோலுகின்றன ...என்று சிறப்பானதொரு உரை வழங்கி, வீதி கூட்டத்திற்கு தனது வாழ்த்துகளை வழங்கினார்.,

அவரின் முயற்சியால் உருவாகிக்கொண்டிருக்கும் கவிதை நூலகத்திற்கு நூல்கள் வீதி சார்பாக வழங்கப்பட்டது.

இறுதியாக கவிதைப்போட்டி முடிவு .

கவிஞர் மு.கீதா தனது உரையில் குழந்தைகளே பெரும்பாலான கவிதைகளுக்கு கருவாகின்றனர்.அவர்களின் உலகம் கவலையில்லாதது.பெரியவர்களாகும் போது நாம் நம் குழந்தைமையைத்தொலைத்து கவலைசூழ் உலகில் வாழவேண்டிய நிலை.அக்கவலைகளை போக்கவே இலக்கியம் உதவுகின்றது  .
             
                       மகிழ்வான சொற்களால் நிறைந்த இந்த அரங்கு அனைவரையும் மகிழ்வில் ஆழ்த்தியுள்ளது...வீதி கூட்டம் சிறப்பானதொரு பாதையில் செல்கின்றது என்பதை இவ்வரங்கு நிரூபிக்கின்றது ..இதற்காக உழைத்த அமைப்பாளர்கள் வைகறைக்கும் ஜெயாவிற்கும் வாழ்த்துகள் கூறி பாராட்டினார்.









போட்டியில் எழுதப்பட்ட கவிதைகளைச் சிறப்பு விருந்தினர்கள் தேர்வு செய்தனர்...தேர்வான 12 கவிதைகளை எழுதியவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கொம்பன் பாடலாசிரியர் தனிக்கொடி அவர்கள் கவிதை குறித்து சிறப்பாக பேசினார்.

மாணவி தமிழ் ஓவியா  இனிய பாடலைப்பாடி அசத்தினார்.



கவிஞர் தங்கம் மூர்த்தி ,தனது ஓயாத பணிகளுக்கிடையேயும் பொள்ளாச்சியிலிருந்து புதுகைக்கு வந்தவர்களைப்பாராட்ட வேண்டி,நிகழ்ச்சிக்கு  வந்து பாராட்டி வீதிக்கூட்டத்தை சிறப்பித்தார்.

திருச்சியிலிருந்து வந்து கவிஞர் சுகன்யா ஞானசூரி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதைப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்று இந்நிகழ்விற்கு பெருமை சேர்த்தார்

நன்றியுரை



  கவிஞர் ஜெயா தனது நன்றி உரையில் பயணங்கள் ரசனையானது,பண்பாட்டைக்கடத்தக்கூடியது,நேசங்களை உருவாக்கக்கூடியது . இனிமையான பயணம் செய்து பொள்ளாச்சியிலிருந்து  வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறி,கூட்டத்தை நிறைவாக்கிய அனைவருக்கும் தனது மகிழ்ச்சி நிறைந்த நன்றிதனை சமர்பித்தார்.