Thursday, 25 June 2026

நாம் மாற்றங்களுக்குத் தகுதியானவர்கள்தானா?

“நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்…… ஆனால்……”
------------------------------------
 முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. 
ஓட்டு அரசியலின் மீது நம்பிக்கையோ…… மரியாதையோ இல்லை எனக்கு.
.
ஆனால் எனக்கு இல்லை என்பதற்காக அரிதான பூக்கள் பூக்காமலா இருக்கும் அங்கு? அப்படிப்பட்ட ஒன்றுதான் விஸ்வநாத் பிரதாப் சிங்.
.
வி.பி.சிங் 1931 ல் பிறந்தார்.
1980 ல் உ.பி.முதல்வரானார்.
1984 ல் மத்திய நிதியமைச்சரானார்.
பிற்பாடு ராணுவ அமைச்சரானார்.
போபர்ஸ் காந்தியால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
1989 ல் பிரதமரானார்.
1990 ல் ஆட்சியை இழந்தார்.
2008 ல் இறந்தார்.
.
என வெறுமனே புள்ளிவிவரங்களுக்குள் புதைத்துவிடக் கூடிய வாழ்க்கையா அவருடையது?
.
91 ஆம் ஆண்டு புது தில்லி ரயில் நிலையத்தில் இறங்குகிறேன். எதேச்சையாக எதிரில் நிற்கும் ரயில்களைப் பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி. 
.
பெரிய பெரிய கொட்டை எழுத்துக்களில் 

“விபி.சிங்கைக் கொல்வோம் …” 
“கொல்பவர்களுக்குப் பரிசு 1 லட்சம் …”

என வெள்ளை நிறத்தில் வண்டி முழுவதும் எழுதிக் குவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வேளையில்…… 
அதை எழுதியவர்களின் அறியாமையை விடவும்…… அதை ஆறு மாதங்களாகியும் அழிக்காமல் விட்டிருந்த அதிகார வர்க்கத்தின் வக்கிரம்தான் என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. 
.
தமிழகக் கட்சிகளுக்குள் எவ்வளவுதான் குடுமிபிடி சண்டை இருந்தாலும்…… 
ஒரு ஆளுங்கட்சித் தலைவரையோ…… 
ஒரு எதிர்க்கட்சித் தலைவரையோ தரக்குறைவாக விமர்சித்து எழுதியிருந்தால் அதை இரவோடு இரவாக போலிசாரே அழித்துவிடுவார்கள். 

ஆனால் வி.பி.சிங் அவர்கள் ஆட்சியை இழந்து ஆறுமாதமாகியும் அப்படியே அதை அழிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன். 
.
ஒரே ஒரு காரணம்தான்.
.
அது: மண்டல் கமிஷன்.
(வடக்கு எதிலும் நம்மை விட ஸ்லோ பிக்கப்தானே……)
.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்த பதவிகளும், பெருமைகளும் இந்தப் “பாழாய்ப் போன” மண்டலால் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி வந்துவிட்டதே என்கிற எரிச்சல்……
.
மனுதர்மத்தின் பேரால் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு
மண்டல்தர்மத்தின் மூலம் கல்விக்கூடங்களின் கதவு திறக்கப்படுகிறதே என்கிற ஆத்திரம்……
.
இவை எல்லாம்தான் அவர்களை அப்படி எழுத வைத்திருக்கிறது.
.
இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது வி.பி.சிங்கின் அந்த வரிகள் :

மஸ்ஜித் பிரச்சனையை முன்னிருத்தியவர்களை
மண்டலால் கவிழ்த்துவிட்டாரே என்கிற ஆத்திரம் தலைக்கேற அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு வெளியில் வருகிறார் அடல் பிகாரி. 
.
அடுத்து வி.பி.சிங்கை நோக்கி நீளுகின்றன பத்திரிக்கையாளர்களின் மைக்குகள்.
.
“என்ன…… இவ்வளவு மோசமான தோல்வியைத் தழுவியிருக்கிறீர்களே……?” என்கிறார்கள் பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சியினரும்.
.
“ஆம்…… நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். 
ஆனால்…… 
பலகோடி பிற்படுத்தப்பட்டவர்களின் நலனுக்காக வந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளை இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலில் வைத்த பிற்பாடு.”
.
(Yes. I am defeated.
But Mandal is in Agenda.)
.
என்று வெகு நிதானமாக தெரிவித்தபடி இறங்கிச் செல்கிறார் வி.பி.சிங்.
.
ஆம். அதுதான் நிதர்சனமான உண்மை.
.
தங்களது இந்திரா காந்தியின் காலத்தில் கண்டுகொள்ளவே படாத மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
.
தங்களது ராஜீவ் காந்தியின் காலத்தில் குப்பைக் கூடையில் வீசப்பட்ட மண்டல் குழுவின் பரிந்துரைகளை……
.
தங்களது நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டது என்றால் அதற்குக் காரணம் விஸ்வநாத் பிரதாப் சிங்தான்.
.
அவ்வளவு ஏன்…… 
பா.ஜ.க.வின் கட்சித் தலைமையில் கூட பிற்படுத்தப்பட்டவர்களைக் கணக்குக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்றால் அதற்கும் விஸ்வநாத் பிரதாப் சிங்தான் காரணம்.
.
நேரு யுகத்தில் நேரடி அரசியலில் நுழைந்தாலும்
நேரு பரம்பரை செய்யத் தவறியதை
செய்யத் துணியாததை செய்து காட்டியவர்தான் வி.பி.சிங்.
.
ஆனால் வி.பி.சிங்கை வெறுமனே இட ஒதுக்கீட்டுக்கான ஆளாக மட்டும் ஒதுக்கிவிடுவதில் ஒப்புதலில்லை எனக்கு. 
.
எப்படிப் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே சுருக்கிக்காட்டி சுகம் காணுகிறார்களோ சிலர் அப்படி. 
.
பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பு அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படிக் காட்டவில்லை நமக்கு. 
புற்று நோயோடு போராடியபடியும்…… 
வாரத்தில் மூன்று நாட்கள் சிறுநீரகத்துக்கான டயாலிசிஸ் செய்தபடியும்…… 
டெல்லி குடிசைப் பகுதி மக்கள்…… ரிக்க்ஷா இழுப்பவர்கள்…… வாழ்வுரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
.
தனது ஒத்துழைக்காத உடலோடு ஒருபுறம் போராடிக் கொண்டே மறுபுறம் தலித்துகள்…… 
நிலமற்ற தொழிலாளர்கள்…… 
“நலத்”திட்டங்களின் பேரால் தங்களது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்…… 
என எண்ணற்ற விளிம்புநிலை மக்களுக்காக தன் பங்களிப்பை அளித்து வந்தார்.
.
ஆனால்…… அவையெல்லாம் வட இந்தியப் பத்திரிக்கைகளின் பதினாறாம் பக்கச் செய்தியாகக் கூட இடம் பெறவில்லை. 
.
அவர் நம்மிடமிருந்து விடை பெற்ற அன்று மும்பையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடுகளுக்கும், குண்டுவெடிப்புகளுக்கும் கூட மனதார நன்றி சொல்லியிருப்பார்கள் வடபுலத்து ஊடகவியலாளர்கள். 
.
எப்படியோ இந்தச் செய்திகளால் அந்த மனிதனது மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டதே என்று. 
.
கமண்டலங்களின் கதையை மண்டலால் முடிவுக்குக் கொண்டு வந்தவன் மீது ஆத்திரம் இல்லாமலா இருக்கும்?
.
இவை எல்லாவற்றை விடவும் ராஜகுடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும்…… 
பிரதமர் பதவியையே வகித்திருந்தாலும்…… 
இன்றைய இந்திய அரசியல் அமைப்பு முறை அவருக்குள் ஏற்படுத்திய ஏமாற்றமும்…… அதிருப்தியும்…… 
அவரை “நான் மாவோயிஸ்ட் ஆக விரும்புகிறேன்” என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குக் கொண்டு சென்றது.
.
ஆம். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்வதானால்……
.
“ உயர் தொழில் நுட்ப நகரங்களின் பேராலும்…… சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பேராலும்…… லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ஒவ்வொரு முதல்வரும் அள்ளி வீசுகிறார்கள். 

ஒவ்வொரு தொழில் அதிபரும் தனது பொருளுக்கான விலையாக அரசு இவ்வளவு தந்தாக வேண்டும் என அரசுக்கு ஆணையிடுகிறார்கள். 
.
ஆனால்…… “உனது விளைபொருள்களுக்கான விலையை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று விவசாயிகளிடம் ஆணை பிறப்பிக்கிறது அரசாங்கம். 
.
இந்த மக்களின் குரலுக்கு நீங்கள் செவிமடுக்க மறுத்தால் நாளை அவர்கள் ஆயுதம் ஏந்துவதை எவராலும் தடுக்க முடியாது. உண்மையில் நான் மாவோயிஸ்ட் ஆகவே விரும்புகிறேன். 
ஆனால் அதற்கு என் உடல் நிலை மட்டும்தான் தடையாக இருக்கிறது.”
.
உண்மைதான்.
.
‘பொருளாதாரச் சீரழிவு என்கிற எரிமலையின் மீதுதான் உட்கார்ந்து கொண்டிருக்கிறது இந்தியா.’
.
சாதீய ஏற்றதாழ்வுகளும்
மதங்களின் மடைமையும்
பொருளாதாரப் பாகுபாடுகளும்
அதன் சீற்றத்தைக் கூட்டுமேயன்றி
குறைக்கப் போவதில்லை.
.
எரிமலையற்ற வாழ்க்கைதான் அந்த எளிய மனிதனின் கனவு. 

பாதியில் அறுபட்ட அக்கனவின் மீதியை நனவாக்குவது நம் கைகளில்தான் இருக்கிறது.

----------    ----------
எழுத்தாளர் பாமரன்.
----------   ----------

Sunday, 21 June 2026

நூறு சாமி

நூறு சாமி 
மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குனர் சசியின் கைவண்ணத்தில் பெண்களின் மறுமணம் பற்றிய சமூகத்தின் பார்வையை நம் மீது வைத்து நாம் குற்றவாளிகள் என உணர வைக்கிறது .
இன்று இந்த படத்தை பார்க்க செல்வியும் நானும் சென்றிருந்தோம். ஏனோ ஒரு எதிர்பார்ப்புடன் இந்த படத்தை பார்க்கத் தொடங்கினேன் 

ஸ்வாசிக்கா நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார். அவரது மகன்களும் கூட அப்படித்தான். ஒரு பெண் அதிலும் கணவனை இழந்த பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார் என்பதை 100 சதவீதம் யாராலும் காட்டி விட முடியாது அதில் ஒரு பத்து சதவீதம் இந்த படத்தில் காட்ட முடிந்துள்ளது .

தன்னைத்தானே ஒருகைம்பெண் சகுன தடை நம்ப வைத்த நிலை. இந்த சமூகம் எத்தனை வன்முறையாக பெண்களின் மூளையில் இதை பதிய வைத்துள்ளது .

தனது அம்மா பொட்டு வைத்திருப்பதை தாங்கிக்க முடியாத மகன் கண்ணாடியை எடுத்து பார் என்று காட்டும் பொழுது, நாம் பார்த்து நமது கேவலமான மனதை ஒருமுறை அழித்துக் கொள்ள துடிப்பதை மனசாட்சி உள்ளவர்களால் மட்டுமே உணர முடியும். 

ஒரு பெண் மறுமணம் செய்வது என்பது இந்த காலத்திலும் கூட எத்துனை தடைகளை கடந்து வர வேண்டி உள்ளது. முதலில் அவள் அவளை கடக்க வேண்டும். ஒரு அம்மாவாக நான் அந்த வீட்டில் இருக்க முடியுமா? மனைவியாக ஏற்றுக் கொள்ளும் கணவன், ஒரு அம்மாவாக தன்னை ஏற்றுக்கொள்வானா என பதறித் துடிக்கும் காட்சியில் ஒட்டுமொத்த மக்களின் மனதையும் அள்ளிக் கொள்கிறார், கரைய வைக்கிறார், நெகிழ வைக்கிறார் ஸ்வாசிக்கா. 

பாலாஜி சக்திவேல் மிக இயல்பாக வன்மம் நிறைந்த மனதை முகத்தில் காட்டி ,ஒரு பெண்ணை வைத்து தான் சாதியை வளர்க்க முடியும் என்ற வசனம்.
 பெண்பெயருக்குப்பின்  ஜாதி இல்லை ஆனால் பெண்ணை வைத்து தான் ஜாதியை வளர்க்க முடியும் என்று சாட்டையடி வசனங்கள் உறுத்துகின்றன.
 நீ நல்லாவா வச்சிருக்க உன் பொண்டாட்டியை என கேட்கும் பொழுதும் எங்க என்ன கட்டினதிலிருந்து எப்படி அவ சந்தோஷமா இருக்க முடியும்? என அவன் சொல்லும் பொழுதும் அப்படி என்றால் சந்தோஷமாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒருவனை அவள் தேடி அடைந்து கொள்ள முடியும்ல என பாலாஜி சக்திவேல் என்ற கதாபாத்திரத்தின் வழியாக சமூகத்தின் சிந்தனைகளை உடைத்து தகர்த்தெறியக்கூடிய வசனங்கள் சிறப்பு.
ஒவ்வொரு காட்சியும் ,காட்சிக்குள் நம்மை வசப்படுத்த கூடிய தன்மையோடு இருப்பதை உணர முடிகிறது. அண்ணனாக இருக்கக்கூடிய கருணாஸ் இயல்பிலேயே ஆணாதிக்க சிந்தனை உடையவர் .அவர் தன் தங்கையை இப்படித்தான் நடத்துவார் என்பது காட்சிகள் மூலமாகவே உணர்த்தியுள்ளார் .

தன்னுடைய மகன்கள் தனக்காக எடுக்கக்கூடிய சிரமங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு, ஒரு பக்கம் தனது கணவனாக வரக்கூடியவனை எண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் தனது மகன்களை இழந்து விடுவோமோ என்ற தவிப்பும் ,இரண்டும் ஒரு சேர கலந்த தவிப்பை உணர்த்தி உணர வைக்கிறார் ஸ்வாசிக்கா.

விஜய் ஆண்டனி பாத்திரம் மிகச் சிறப்பு.இப்படியும் ஆண்கள் இருக்கலாம் என்று காட்சிப்படுத்திய விதம் அருமை.ஆண்களுக்கு மிக எளிதாக நடக்கும் ஒரு விடயம் பெண்களுக்கு என்று வரும் போது இந்த சமூகம் தனது கோர் முகத்தால் அவளைச் சிதைப்பதை காட்டிய விதம் சிறப்பு.

 ஒரு பெண்ணின் உணர்வுகளை கடத்தக்கூடிய படம் கிட்டத்தட்ட 75 ஆண்டு காலம் கழித்து தமிழ்த் திரையுலகம் நல்ல கருவை, சமூகம் சார்ந்த சிந்தனையை நோக்கி திரும்பி உள்ளது என்பதை இயக்குனர் சசி நிருபித்துள்ளார்.
 புதிய பாதையில் நடக்கக்கூடிய தமிழ் திரை உலகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மனத்தடையை பெண்கள் உடைத்து வெளியே எத்தனை வேகமாக வந்தாலும் கூட அதே அளவு தன்னைத்தானே சுருக்கி கொள்ளக்கூடிய சமூக பின்புலம் தான், அவளை தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விடாமல் செய்வதும். சமூகத்தின் சாதி எனும் ஆணிவேர் விஷ வேர், அவளை அவளுக்கான உரிமையை, அவளுக்காக அவள் வாழக்கூடாது என்ற எண்ணத்தை  பெண்கள் ஆண்கள் என அத்தனை பேரும் மனதிலும் பதிய வைத்திருப்பதை இந்த படம் நமக்குச் சுட்டிக்காட்டி உள்ளது.
 இதில் நடித்துள்ள அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
இப்படிப்பட்ட படங்களை அனைவரும் திரையரங்கில் பார்த்து வரவேற்க வேண்டும் ..

Tuesday, 2 June 2026

manichiral மணிச்சிறல்

கோ.லீலாவின் *#மணிச்சிரல்* ஹைக்கூ நூல் மீது, இலங்கையை சேர்ந்த ஹைக்கூ கவிஞர் முகம்மது இர்ஷாத்  அவர்களின் கருத்துரை...
🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦🐦

தங்களின் நூல் படித்தேன். சிறந்த ஆழமிக்க ஹைக்கூகள் 
🐦
நீர் வரவர
குளத்தில் மறைகிறது 
வண்டியோடிய தடம் 
🐦
ஓடாத கடிகாரம்
சுற்றி வருகிறது
மீன் கூடையை பூனை 
🐦
எச்சமிடுங்கள் பறவைகளே //
காடழிகிறது //
வேண்டும் காடுபேறு //
🐦
போன்ற எண்ணிறைந்த கவிதைகள் மனம் தொட்டன.

வாழ்த்துகள்

தாங்கள் சூழலியல் சிந்தனை மிக்க கவிஞர் என்பதை உணர முடிகிறது. 
*#இஸ்லாமும்_சூழலியலும்* எனும் நூல் தங்களின் சிறந்த படைப்பு.

ஈழத்துத் தமிழ் ஹைக்கூ கவிதைகளில் சூழலியல் எனும் தலைப்பில் முதுமாணி பட்ட ஆய்வை முன்னெடுக்க உள்ளேன். இந்த ஆய்வில் அவ்வப்போது எழும் ஐயங்கள் தீர்த்து நெறிப்படுத்தத் தங்களிடம் விண்ணப்பம் செய்கிறேன். 

மிக்க நன்றி 🙏

#புதுக்கோட்டைத்_தமிழ்ச்_சங்கம்* *#நந்தவனம்_மாத_இதழ்* இணைந்து நடத்திய *#5வது_தமிழ்_ஹைக்கூ_உலக_மாநாடு* வழியே எனது ஹைக்கூ மற்றும் ஹைக்கூ ஆய்வுரை நூல்கள், அயல்நாட்டு தமிழ் ஹைக்கூ கவிஞர்களை சென்றடைந்துள்ளன.

குறிப்பாக, துபாய், மலேசியா, இலங்கை பகுதி கவிஞர்கள் தொடர்பு கொண்டு உரையாடுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.

எப்போதும் போல், புகைப்படம் எடுத்துக்கொள்ளவில்லை... எப்போ மாறுவேனோ.

நன்றியும்,பேரன்பும்💐💐💐 :
முகம்மது இர்ஷாத்
 Thangam Moorthy அண்ணே முருகேஷ் மு அண்ணே, Nandavanam Chandrasekaran  அண்ணன்மற்றும் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், நந்தவனம் மாத இதழ், 5 வதுதமிழ் ஹைக்கூ உலக மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள்.

Sunday, 24 May 2026

புதுகையிலிருந்து ஒரு ஹைக்கூ

கவிஞர் புதுகை ஆதிரா மகிழ்வோடு பகிர்கிறார்

#பேராசிரியர்_சா_விஸ்வநாதன்
#அவர்களின்_முதல்_வாழ்த்து❤️
#பேரன்பும் நன்றியும் சார்🙏🏻
வணக்கம்

ஹைக்கூ கவிதையை
'ஓவியத்திற்கு ஒப்பான கவிதை' என்றும் கூறுவர். வாசிக்கிற வாசகனின் மனத்திரையில் புதிய காட்சிகளை ஓவியங்களென வரைந்து செல்லும் சிறப்புக்குரியது ஹைக்கூ. வாசகனின் மூடிய கண்களுக்குள்ளும் காட்சிகளை நகர்த்திச் செல்லும் வல்லமை ஹைக்கூவிற்கு உண்டு.

ஹைக்கூவைப் புரிந்துகொள்ள கூரான பார்வையும், தேர்ந்த மொழியறிவும் இருக்கவேண்டும். மேம்போக்கான வாசிப்பில் வாசகனுக்குள் எந்த மாற்றங்களையும் கைக்கூ நிகழ்த்தாது.

புரிதல் அரிதானவர்களுக்கு ஒரு புதிரைப் போல இருக்கும் ஹைக்கூ. ஆனால் புரிந்து கொண்டவர்களுக்கோ அது ஒரு புதையலாகிவிடும். ஹைக்கூவிலிருந்து விலகி நின்றால் அது வெறும் வார்த்தைகளின் மாயம்தான். நெருங்கி வருபவர்களுக்கோ அது ஒரு இயற்கை நேசம்; மானுட நேயம். ...

எதையும் ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யும் கவிஞர் ஆதீராவின் இந்தப்
' பாதங்களுக்குள் நழுவும் மணல்' நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன ஹைக்கூ வெனும் குறுமணல்கள். கொஞ்சமாய் அள்ளிக் கொள்ளுங்கள்; உங்கள் காதுகளில் பூமியின் இதயம் துடிப்பதும் கேட்கும்; கடலின் ஓங்கார முழக்கமும் நிச்சயம் கேட்கும்.

-கவிஞர் மு.முருகேஷ் நூலின் அணிந்துரையில்

                              .....
புதுக்கோட்டைக் கவிஞர், புதுகை ஆதீரா (நாகலட்சுமி ராஜகோபாலன் ) அவர்களின் "பாதங்களுக்குள் நழுவும் மணல்", புதுக்கோட்டையில் நடைபெற்ற 5 ஆவது தமிழ் ஹைக்கூ உலக மாநாட்டில் வெளியிடப்பட்டது . இது அவரின் இரண்டாவது ஹைக்கூ நூல். முதல் நூல் 2023 ல் வெளிவந்த"காலம் தப்பிய மழை ". இந்த கவிதை நூலுக்கு கவிஞர் மு.முருகேஷ், கவிஞர்.பழநிபாரதி இருவரும் சிறந்த அணிந்துரை வழங்கியுள்ளனர். இந்த அணிந்துரைகள் ஹைக்கூவின் வடிவத்தையும் , ஆதீராவின் கவிதைகளின் சிறப்பையும் பேசுகின்றன. இந்த கவிதைத் தொகுப்பில் 146 ஹைக்கூ கவிதைகள் உள்ளன. அதில் 10 கவிதைகள் உங்கள் பார்வைக்கு ...

கூட்டிலிருந்து விடுபட்ட பறவை
வானில் பறந்தபடியே தேடும்
கூடு கட்ட மரங்களை
பக். 13.

மரக்காலில் நெல்மணிகள்
அளக்க அளக்க வளர்கிறது உழவனின் புன்னகை
பக். 14

தென்னையோலை
வேறொரு மரத்தில்
குருவிக்கூடு
பக். 21

தொடர்வண்டிப் பயணம்
கூடவே வருகின்றன
தண்டவாளங்கள்
பக்.25

சுதந்திர தினம்
மூவர்ணக்கொடி மேலேறியதும்
உதிர்ந்தன பூக்கள்.
பக். 35

வெட்டிய மரங்கள்
வாழ்க்கைக்கு ஒளியேற்றின
புத்தகங்கள்.
பக். 36

போதையின் பாதையில்
தடுமாறி விழுகிறார்கள்
பிஞ்சுக் குழந்தைகள் 
பக். 46

சுதந்திர இந்தியா
ஆங்கிலேயர் தூண்டிச்சென்றனர்
அரியணை ஆசையை
பக். 52

பங்காளிச் சண்டை
வேலி தாண்டித்  தலைநீட்டும்
செம்பருத்திப் பூ
பக். 68

மகன்களின் பிரிவினை
வேலி தாண்டிப் பூத்திருக்கும்
அம்மா வைத்த செம்பருத்தி.
பக். 72.

#அகநி வெளியீடு
📞94443 60421
2026
ரூ.120.

Monday, 18 May 2026

ரெமீலா தாப்பர்

அசோகர் அளவுக்கு இலங்கையில் அதிக தாக்கம் செலுத்திய வேறு எந்த இந்திய மன்னரும் கிடையாது. பவுத்தம் என்ற மதம் இலங்கையில் பரவ மூலக்காரணமே அசோகர் தான் என்று எங்கள் வரலாறு நூற்களே சொல்லும் போது வேறு ஏதாவது விவாதத்திற்குற் போக முடியுமா? 

ஆகவே அசோகரின் வரலாறை விரிவாக தெரிந்துக்கொள்ள தமிழ்நாட்டு எழுத்தாளர் Marudhan Gangadharan எழுதிய அசோகர் நூலை 2024 ஆம் ஆண்டு வாங்கினேன். ஒரு வகையில் அந்த நூல் பண்டைய இந்தியாவின் வரலாறையும் உள்ளடக்கியதாக இருந்தது. அந்த நூலில் அடிக்கடி ஒரு பெயர் வந்துக்கொண்டே இருந்தது அந்த பெயர் "ரோமிலா தாப்பர்" ஆணா பெண்ணா என்று கூட தெரியாது. ஆனால் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அப்போது தேட தொடங்கினேன் யார் இந்த ரொமிலா தாப்பர்? ஆச்சரியம் என்னவென்றால் அவர் எழுதிய "சோமநாதர்" நூல் என்னிடம் இருந்தது! 

வரலாறு என்பது அரசர்களின் பெயர்களையும், போர் நடந்த ஆண்டுகளையும், அவர்கள் கட்டிய அரண்மனைகளையும் மனப்பாடம் செய்வது மட்டுமல்ல அது சாதாரண மக்களின் வாழ்க்கை, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களை உள்ளடக்கியது என்று இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்.

பழங்கால இந்திய வரலாற்றை (Ancient Indian History) காலனித்துவ பார்வையிலிருந்தும், அதீத தேசியவாதப் பார்வையிலிருந்தும் விடுவித்து, அறிவியல் மற்றும் தர்க்கரீதியாக அணுகிய இவரது பயணம் மிக மிகச் சுவாரஸ்யமானது.

1930-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி லக்னோவில் பிறந்த ரொமிலா தாப்பரின் குடும்பம் ஒரு ராணுவப் பின்னணியைக் கொண்டது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த அவர், லண்டனில் உள்ள புகழ்பெற்ற SOAS (School of Oriental and African Studies) பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அங்கே அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புகழ்பெற்ற 'The Wonder That Was India' என்ற நூலை எழுதிய மாபெரும் வரலாற்றறிஞர் ஏ.எல். பாஷம். லண்டனில் படித்துவிட்டு இந்தியா திரும்பிய ரொமிலா, குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, பின்னர் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறைப் பேராசிரியராக இணைந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கினார்.

ரொமிலா தாப்பருக்கு முன்பு வரை, இந்திய வரலாறு என்பது பெரும்பாலும் 'மன்னர்களின் வீரதீரச் செயல்களாகவே' எழுதப்பட்டு வந்தது. ஆனால் ரொமிலா தாப்பர், தொல்பொருள் ஆய்வுகள் (Archaeology), நாணயவியல் (Numismatics), மொழியியல் மற்றும் சமூகவியல் தரவுகளைப் பயன்படுத்தி வரலாற்றை எழுதத் தொடங்கினார்.

உதாரணமாக, மௌரியப் பேரரசு வீழ்ச்சியடைந்ததற்கு வெறும் அரசர்களின் பலவீனமோ அல்லது மதம் மட்டுமே காரணமல்ல. அது ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிர்வாகக் கோளாறுகளால் ஏற்பட்டது என்பதைத் தரவுகளுடன் நிறுவினார். அவரது புகழ்பெற்ற நூலான "Asoka and the Decline of the Mauryas" அசோகரை வெறும் ஒரு மதப் பிரச்சாரகராக மட்டும் பார்க்காமல், 'தம்மா' என்ற கொள்கையின் மூலம் ஒரு மாபெரும் பேரரசை ஒன்றிணைக்க நினைத்த ஒரு சிறந்த அரசியல் ராஜதந்திரியாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அவரது ஆய்வுகளில் மிக முக்கியமானது குஜராத்தில் உள்ள புகழ் பெற்ற சோமநாதர் ஆலயம் குறித்த அவரது புத்தகம் (Somanatha: The Many Voices of a History). முகமது கஜினியின் படையெடுப்பால் சோமநாதர் ஆலயம் இடிக்கப்பட்டதை வைத்து, ஒட்டுமொத்த இந்து-முஸ்லிம் வரலாற்றையும் ஒரு 'பகைமை வரலாறாகவே' எழுதும் போக்கினை அவர் விமர்சித்தார்.

அந்தப் படையெடுப்பு நடந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட சமஸ்கிருத கல்வெட்டுகள், சமணர்களின் குறிப்புகள், அரபுப் பயணிகளின் பதிவுகள் எனப் பல கோணங்களில் அந்த நிகழ்வை ஆராய்ந்தார். அரசர்கள் செல்வத்தைக் கொள்ளையடிக்கவே படையெடுத்தார்கள் என்பதையும், அதைத் தாண்டி அங்கு இரு சமூக மக்களுக்கிடையே பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கமும், வியாபாரத் தொடர்புகளும் இருந்ததை அந்த நூலில் அவர் தைரியமாகப் பதிவு செய்தார்.

ரொமிலா தாப்பரின் நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் ஒரு மிகச்சிறந்த உதாரணம் உண்டு. இந்திய அரசு அவருக்கு 1992-ஆம் ஆண்டும், பின்னர் 2005-ஆம் ஆண்டும் (மன்மோகன் சிங் ஆட்சியில்) இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை அறிவித்தது.

ஆனால் அந்த இரண்டு முறையும் அவர் அந்த விருதை ஏற்க மறுத்துவிட்டார். "நான் ஒரு கல்வியாளர். எனக்கு விருதுகள் வழங்குவதாக இருந்தால், அது கல்வி நிறுவனங்களோ அல்லது அறிவுசார் அமைப்புகளோ வழங்கினால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன். அரசாங்கம் வழங்கும் அரசு விருதுகளை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்" என்று கூறி இந்திய அரசையே திகைக்க வைத்தார். எனினும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலுக்கான நோபல் பரிசு என்று கருதப்படும் 'க்ளூக் பரிசு' (Kluge Prize - 2008) உட்பட சர்வதேச அளவில் பல மாபெரும் விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

ரொமிலா தாப்பரின் முற்போக்கான, மதச்சார்பற்ற வரலாற்றுப் பார்வைக்காக அவர் வலதுசாரி அமைப்புகளாலும், இந்துத்துவா ஆதரவாளர்களாலும் இன்றுவரை மிகக் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அவரை ஒரு "மார்க்சிய வரலாற்றாசிரியர்" என்று முத்திரை குத்தி, சமூக வலைத்தளங்களில் பல அவதூறுகள் பரப்பப்பட்டன. 2019-ஆம் ஆண்டு JNU நிர்வாகம் அவரது தகுதியை மீண்டும் நிரூபிக்கச் சொல்லி அவரது CV-யை கேட்டது இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இன்று 90 வயதைக் கடந்த நிலையிலும், ரொமிலா தாப்பர் சோர்வடையாமல் தொடர்ந்து வரலாற்றை எழுதிக் கொண்டும், சமகால அரசியல் குறித்து தைரியமாகக் குரல் கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்.

"வரலாறு என்பது நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவி; அதைக் கட்டுக்கதைகளைக் கொண்டு நிரப்பக் கூடாது" என்று உரக்கச் சொல்லும் ரொமிலா தாப்பர், இந்திய அறிவுலகத்தின் ஒரு மாபெரும் சிங்கம் என்றால் அது மிகையாகாது!

- Abdullah Ibnu Naseer 

#RomilaThapar #AncientIndia #IndianHistory #Ashoka #Historiography #HistoryAndPolitics #Abdullahibnunaseerwriteups

Sunday, 3 May 2026

ai wonder செயற்கை நுண்ணறிவு அற்புதம்

முகநூல் பகிர்வு
குப்புசாமி அவர்களின் பதிவு

எனக்குப் பியானோ வாசிக்கத் தெரியாது. ஆனால் வாசிக்க ஆசை. என்ன செய்யலாம்? சில ஆண்டுகளாவது பயிலவேண்டும். இன்ஸ்டண்ட் காஃபி போல உடனே வாசிக்க வழி உள்ளதா?

மந்திரத்தில் மாங்காய் போலத் தெரிகிறதா? அறிவியல் தான். இதற்கும் ஏஐ துணைசெய்கிறது. 

'ஹ்யூமன் ஆபரேட்டர்' என்றொரு புராஜெக்ட். மனித இயக்கி என்று மொழியாக்கம் செய்யலாம். வேண்டாம். இது 'மனிதர்களை இயக்கும்' ஏஐ. சரியாக வாசித்தீர்களா? மனிதர்கள் இயக்கும் ஏஐ அல்ல. மனிதர்களை இயக்கும். 

விளக்கமாகப் பார்ப்போம். 

MIT (Massachusetts Institute of Technology) கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் தலையாய கல்வி நிறுவனங்களில் ஒன்று. இவர்கள் ஒரு ஹேக்கத்தான் நடத்தியுள்ளனர். அதன் பெயர் MIT Hard Mode 2026. 

இதில் பங்குபெற்ற ஒரு குழு வடிவமைத்தது தான் 'ஹ்யூமன் ஆபரேட்டர்'. இந்த ஏஐயால் நம்முடைய கைகளைக் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் நாம் பயின்றிராத பல்வேறு செயல்களைச் செய்ய முடியும். 

இன்னும் கொஞ்சம் எளிமையாகச் சொல்கிறேன். உங்களுக்குப் படம் வரையத் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கண் முன்னே இருக்கும் ஒன்றை நீங்கள் வரைய விரும்புகிறீர்கள். 

முதலில் இந்த ஏஐயை அணிந்துகொள்ளவேண்டும். பின்னர் நான் இதை வரைய விரும்புகிறேன் என்று கூறவேண்டும். அவ்வளவு தான். 

அதன் பின் ஏஐயின் மாயம் தொடங்கும். உங்களுடைய கை தானாகவே இயங்கத் தொடங்கும். விரல்கள் நளினமாக நகரும். நீங்கள் வரைய நினைத்ததை வரைந்து முடிக்கும். 

இது போலத் தான் நான் தொடக்கத்தில் சொன்ன பியானோ கதையும். நீங்கள் விரும்பும் மெலடியை பியானோவில் வாசிக்கலாம். அதற்கான கீகளைத் தேடி உங்கள் விரல்கள் செல்லும். உங்கள் கட்டளையில்லாமலேயே. 

இதனை டெமோ செய்து காட்டியுள்ளனர். அதற்கான வீடியோவும் உள்ளது. ஆர்வலர்கள் கண்டடையவும். 

மந்திரத்தில் மாங்காய் எப்படிக் காய்க்கிறது?

இத்தொழில்நுட்பத்தின் மையத்தில் உள்ளது கிளாட். இவர் தான் மூளை. பார்ப்பதற்குக் கேமிரா. கேட்பதற்கு மைக்ரோஃபோன்கள். 

அதெல்லாம் சரி. கைகள் எவ்வாறு நகர்கின்றன? இதற்கு 'எலெக்ட்ரிகல் மஸில் ஸ்டிமுலேஷன்' என்றொரு நுட்பம். இதன் மூலம் குறிப்பிட்ட தசைகளுக்குக் கட்டளையிட முடியும் என்கிறார்கள். 

இது தான் மொத்த அசெம்ப்ளி. என்ன தேவை என்பதை கேமிரா மூலம் அறிகிறது. அல்லது மைக்ரோஃபோன் மூலம். பின்னர் கிளாடானாரைத் தொடர்புகொள்கிறது. அவர் இதற்காக எந்தெந்தத் தசைகளுக்கு என்னென்ன கட்டளைகள் என்பதை முடிவு செய்கிறார். அதை நம் விரல்கள் செய்துமுடிக்கின்றன. 

நம்ப முடியவில்லை தானே. வீடியோ பார்க்கும்வரை நானும் நம்பவில்லை. ஆனால் இது ஏதோ வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் அல்ல. MIT போன்ற கல்விநிறுவனம் சாட்சி சொல்கிறது. ஆமாம் இவ்வாறு தான் நிகழ்கிறது என்கிறார்கள். 

இதை நிகழ்த்திக்காட்டிய குழுவில் ஆறு நபர்கள். தாங்கள் புதியதாக ஒன்றும் செய்துவிடவில்லை. இருக்கும் தொழில்நுட்பங்களை ஒரு புதிய விதத்தில் இணைத்துள்ளோம். அதன் பயன் தான் இந்த ஹ்யூமன் ஆபரேட்டர். 

இப்போதைக்கு இது ஒரு புராடெக்டாக வரவில்லை.  கூடியவிரைவில் வரலாம். இன்றைய சூழலில் இதன் மூலம் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதற்கு எல்லைகள் உள்ளன. விரைவில் இவ்வெல்லை பெரிதாகலாம். எல்லாமே முடியும் என்றொரு நாள் விரைவில் வரலாம்.  

மனிதர்கள் கம்ப்யூட்டர்களோடு உரையாடும் முறைகள் காலந்தோறும் மாறிவந்துள்ளன. காமாண்ட் ப்ராம்ப்ட் காலத்திலிருந்து இன்றைய கிளாட் காலம். இன்னும் மாறும். அதன் மூலம் இதுகாறும் நாம் சிந்தித்திராத புதிய வகைக் கருவிகள் வரும்.

நண்பர்களே, இன்று வாத்தியார் சுஜாதாவின் பிறந்த நாள். இந்த ஹ்யூமன் ஆபரேட்டரை, அவர் காலத்தில் எழுதியிருந்தால் சயின்ஸ் ஃபிக்ஷன். ஆனால் இன்று இது தொழில்நுட்பம். நிஜம். 

ஏஐ தழைத்தோங்கி நிற்கும் இக்காலத்தில் சுஜாதா இருந்திருக்கவேண்டும். எப்படியெல்லாம் அதோடு விளையாடியிருப்பார் என்று எண்ணிப்பார்ப்பதே பரவசமாக உள்ளது. 

இந்தக் கட்டுரையை அவர் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதையும் கிளாடானாரிடம் கேட்கலாம். அவருடைய வெர்ஷன் என்று ஒன்றைக்கொடுக்கும். அவரிடம் அதைக் காட்டியிருந்தால் வாசித்துவிட்டு, 'நாட் பேட். குட் ட்ரை' என்று சொல்லிக் கூலாகக் கடந்திருப்பார்.

தமிழில் அறிவியல் கட்டுரைகளை, கதைகளை சுவைபட எழுதிய சுஜாதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். வி மிஸ் யூ சார்.

soru


இன்று கிடைத்த இன்னும் ஒரு விருது...

கவிஞர், சிறுகதையாளர், இயற்கை ஆர்வலர், புகைப்பட ,கலைஞர், Sivakumar Ganesan அவர்களின் மதிப்புரை

*#சோறு_உணவு_அரசியல்
கட்டுரைகள்
கோ.லீலா
படைப்பு பதிப்பகம்
பக்கங்கள் 256
விலை ரூபாய் 350

சமீபத்தில் முகநூலில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, நாட்டுக் கோழிக் குழம்பு நான் வைத்தது. சாதம் வீட்டம்மா வைத்தது என்று எழுதியிருந்தேன். அவை நாயகன் அய்யா,சாதமா?சோறா?என்று கேட்ட பிறகுதான் புரிந்தது.சாதம்தான் சார்.பழக்கத்தில் சோறாகி விட்டது என்று சொன்னேன். 

தொடர்ந்த நாட்களில்தான் சோறு உணவு அரசியல் கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன்.

புத்தகத்தை,கோ.லீலா,குடும்பத்தின் அன்னபூரணியான தனது அம்மா சீதை கோவிந்தராஜலு அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்.பொருத்தமான சமர்ப்பணம்.

சோறு என்ற சொல்லின் தொன்மை குறித்த கட்டுரை பிரமிப்பூட்டுகிறது.சாதம் உயர்திணையாகவும், சோறு தாழ்திணையாகவும் மாறிய அவலத்தைப் பேசுகிற இந்தக் கட்டுரையில் உள்ள தண்டச் சோறு என்பதைப் போல் தண்ட சாதம் என்கிற வசவு ஏன் இல்லை?என்ற கேள்விக்கான பதிலை யோசியுங்கள்.

இந்தியாவில் 2,00,000க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளன என்ற தகவலும்,கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ள 173 பாரம்பரிய அரிசிகளும், அவற்றின் பெயர்களும்,அவற்றின் மருத்துவக் குணங்களும், நாம் தொலைத்த அரும் பொக்கிஷங்களை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட வைக்கின்றன.

அரசர்களின் அரிசியான கருப்புக் கவுனி அரிசியின் நற் பயன்கள்,நாம் அலட்சியப்படுத்தும் மட்டை அரிசியின் சிறப்பு பற்றிய கட்டுரை சிறப்பு.

குழைவான நெல்லரிசிச் சோறுதான் அடிசில். இனிப்பான அக்காரவடிசலை அறிவேன்.நெய்யுடை அடிசில்,கொழும் துவை அடிசில்,ஊன் துவை அடிசில் என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு அடிசில்களை அறிந்து கொள்ள உதவுகிறது உணவு வகைகள் கட்டுரை. உண்டிக்கும், உணவுக்குமான வேறுபாடு ஆச்சர்யமானது.

அருந்துதல்,உண்ணல்,உறிஞ்சல் முதலான 26 வகையான உண்ணல் முறைகள்,உணவை வெறுமனே விழுங்கும் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.உணவே மருந்தாக இருந்த பழந்தமிழரின் உணவு அறிவியல் வியப்பூட்டுகிறது.

உணவும் பெண்ணும்,இலக்கியத்தில் பெண்களின் உணவு கட்டுரைகள்,உணவுக்கும் பெண்ணுக்குமான இறுகிய பிணைப்பைப் பேசுகின்றன.

சைவ உணவு உயர்ந்தது,அசைவ உணவு கீழானது என்கிற மோசமான பொதுப்புத்தியின் மீது நுட்பமான தாக்குதலை நிகழ்த்துகிறது சைவமும் அசைவமும் கட்டுரை.தலித்துகளின் உணவில் மாட்டிறைச்சியும், பன்றியிறைச்சியும் முக்கிய அங்கம் வகிப்பதற்கு,உயர் வகுப்பினர் வேண்டாமென ஒதுக்கிய மலிவான உணவு என்பதுதான் காரணம் என்கிற தீபா பல்கின்ஸ் தக்கின் கருத்து சிந்திக்க வைக்கிறது.வட மாநில தலித்துகளிடையே ரக்தி என்னும் ரத்தப் பொறியல் ஏன் முக்கிய உணவாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலும் இதையே உறுதி செய்கிறது.

1830ல் க்விட்லட் என்ற ஜோதிடர் கிரகங்களை வைத்து மனித எடையை கணிக்க முடியுமா என்று அறிய B.M.I (Body Mass Index)ஐ உருவாக்கினார்.இன்று அதை டிவத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மனிதர்களை எப்படியெல்லாம் அடிமையாக்கி வைத்திருக்கின்றனர் என்பதையும்,நம் அன்றாட உணவை கார்ப்ரேட்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பதையும் தெளிவாகப் பேசுகிறது கார்ப்பரேட் கைப்பிடியில் உணவு கட்டுரை.

பகல்,இரவு கால மாற்றத்தை உணரும் சக்தி சிர்கேடியன் கடிகாரம்,வைட்டமின் டி சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது இப்படி ஆச்சர்யமான தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

தவளையின் மரணணு செலுத்தப்பட்ட தக்காளி,மீனோட மரபணு செலுத்தப்பட்ட ஸ்ட்ராபெரி என்று மரபணு மாற்றம் என்ற பெயரில் அடிக்கப்படுகிற அபாயமான கூத்துகளைப் பேசுகிறது மரபணு மாற்றம் கட்டுரை.

பிற நாடுகளின் மீது விதைகளை வைத்து தொடக்கப்படுகிற போர்களையும்,பூச்சிக் கொல்லி மருந்துகள் எவ்வாறு மனிதர்களின் ஆரோக்யத்தைச் சீர் குலைக்கின்றன என்பதையும் விரிவாகப் பேசும், பசுமைப் புரட்சியின் தீமைகள்,விதையென்னும் பேராயுதம் ஆகிய இரண்டும் முக்கியமான கட்டுரைகள்.

Globalization பற்றி அறிவீர்கள்.Glocalization பற்றி அறிவீர்களா?உணவு அரசியலின் எதிர்காலம் என்கிற முக்கியமான கட்டுரை,அதைத் தெளிவாக்குகிறது.

இந்தப் புத்தகத்தில்,மிக முக்கியமாக நான் கருதுவது,வெறுமனே பிரச்சனைகளையும்,அதன் தீமைகளையும் பற்றி மட்டும் பேசாமல்,அதற்கான தீர்வுகளையும் விரிவாகப் பேசுவதுதான்.

கட்டுரைகளில் பொருத்தமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள், கவிஞர்கள் பிருந்தாசாரதி,பழனி பாரதி போன்றோரின் கவிதைகள்,கவிஞர் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் காட்சிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.

உணவுன்னா அதிரசம் தெரியும்,அதென்ன அரசியல்?போன்ற மெலிதான நகைச்சுவை ஊடாடும் நடையும்,உரையாடல் பாணியும் வாசிப்பவருக்கு எளிதில் நெருக்கமாகின்றன.

கோ.லீலா அவர்களின் கடும் உழைப்பும்,தீராத் தேடலும்,அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியன.

அட்டைப் படம் அழகு.நேர்த்தியான வடிவமைப்பு.

சாதமாகவும்,ரைஸாகவும் அறியப்படும் சோறு மற்றும் நாம் உண்ணும் அல்லது உண்ண வைக்கப்படும் உணவின் பின்னுள்ள அரசியலை மிகத் தெளிவாக, எளிமையாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்தவர்களுக்கு,அடுத்த வேளை உணவு உண்கையில்,புத்தகத்தின் ஏதாவதொரு வரி நிச்சயம் நினைவில் வரும்.