நூறு சாமி
மீரா விஜய் ஆண்டனி தயாரிப்பில் இயக்குனர் சசியின் கைவண்ணத்தில் பெண்களின் மறுமணம் பற்றிய சமூகத்தின் பார்வையை நம் மீது வைத்து நாம் குற்றவாளிகள் என உணர வைக்கிறது .
இன்று இந்த படத்தை பார்க்க செல்வியும் நானும் சென்றிருந்தோம். ஏனோ ஒரு எதிர்பார்ப்புடன் இந்த படத்தை பார்க்கத் தொடங்கினேன்
ஸ்வாசிக்கா நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார். அவரது மகன்களும் கூட அப்படித்தான். ஒரு பெண் அதிலும் கணவனை இழந்த பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார் என்பதை 100 சதவீதம் யாராலும் காட்டி விட முடியாது அதில் ஒரு பத்து சதவீதம் இந்த படத்தில் காட்ட முடிந்துள்ளது .
தன்னைத்தானே ஒருகைம்பெண் சகுன தடை நம்ப வைத்த நிலை. இந்த சமூகம் எத்தனை வன்முறையாக பெண்களின் மூளையில் இதை பதிய வைத்துள்ளது .
தனது அம்மா பொட்டு வைத்திருப்பதை தாங்கிக்க முடியாத மகன் கண்ணாடியை எடுத்து பார் என்று காட்டும் பொழுது, நாம் பார்த்து நமது கேவலமான மனதை ஒருமுறை அழித்துக் கொள்ள துடிப்பதை மனசாட்சி உள்ளவர்களால் மட்டுமே உணர முடியும்.
ஒரு பெண் மறுமணம் செய்வது என்பது இந்த காலத்திலும் கூட எத்துனை தடைகளை கடந்து வர வேண்டி உள்ளது. முதலில் அவள் அவளை கடக்க வேண்டும். ஒரு அம்மாவாக நான் அந்த வீட்டில் இருக்க முடியுமா? மனைவியாக ஏற்றுக் கொள்ளும் கணவன், ஒரு அம்மாவாக தன்னை ஏற்றுக்கொள்வானா என பதறித் துடிக்கும் காட்சியில் ஒட்டுமொத்த மக்களின் மனதையும் அள்ளிக் கொள்கிறார், கரைய வைக்கிறார், நெகிழ வைக்கிறார் ஸ்வாசிக்கா.
பாலாஜி சக்திவேல் மிக இயல்பாக வன்மம் நிறைந்த மனதை முகத்தில் காட்டி ,ஒரு பெண்ணை வைத்து தான் சாதியை வளர்க்க முடியும் என்ற வசனம்.
பெண்பெயருக்குப்பின் ஜாதி இல்லை ஆனால் பெண்ணை வைத்து தான் ஜாதியை வளர்க்க முடியும் என்று சாட்டையடி வசனங்கள் உறுத்துகின்றன.
நீ நல்லாவா வச்சிருக்க உன் பொண்டாட்டியை என கேட்கும் பொழுதும் எங்க என்ன கட்டினதிலிருந்து எப்படி அவ சந்தோஷமா இருக்க முடியும்? என அவன் சொல்லும் பொழுதும் அப்படி என்றால் சந்தோஷமாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒருவனை அவள் தேடி அடைந்து கொள்ள முடியும்ல என பாலாஜி சக்திவேல் என்ற கதாபாத்திரத்தின் வழியாக சமூகத்தின் சிந்தனைகளை உடைத்து தகர்த்தெறியக்கூடிய வசனங்கள் சிறப்பு.
ஒவ்வொரு காட்சியும் ,காட்சிக்குள் நம்மை வசப்படுத்த கூடிய தன்மையோடு இருப்பதை உணர முடிகிறது. அண்ணனாக இருக்கக்கூடிய கருணாஸ் இயல்பிலேயே ஆணாதிக்க சிந்தனை உடையவர் .அவர் தன் தங்கையை இப்படித்தான் நடத்துவார் என்பது காட்சிகள் மூலமாகவே உணர்த்தியுள்ளார் .
தன்னுடைய மகன்கள் தனக்காக எடுக்கக்கூடிய சிரமங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு, ஒரு பக்கம் தனது கணவனாக வரக்கூடியவனை எண்ணிக் கொண்டு, இன்னொரு பக்கம் தனது மகன்களை இழந்து விடுவோமோ என்ற தவிப்பும் ,இரண்டும் ஒரு சேர கலந்த தவிப்பை உணர்த்தி உணர வைக்கிறார் ஸ்வாசிக்கா.
விஜய் ஆண்டனி பாத்திரம் மிகச் சிறப்பு.இப்படியும் ஆண்கள் இருக்கலாம் என்று காட்சிப்படுத்திய விதம் அருமை.ஆண்களுக்கு மிக எளிதாக நடக்கும் ஒரு விடயம் பெண்களுக்கு என்று வரும் போது இந்த சமூகம் தனது கோர் முகத்தால் அவளைச் சிதைப்பதை காட்டிய விதம் சிறப்பு.
ஒரு பெண்ணின் உணர்வுகளை கடத்தக்கூடிய படம் கிட்டத்தட்ட 75 ஆண்டு காலம் கழித்து தமிழ்த் திரையுலகம் நல்ல கருவை, சமூகம் சார்ந்த சிந்தனையை நோக்கி திரும்பி உள்ளது என்பதை இயக்குனர் சசி நிருபித்துள்ளார்.
புதிய பாதையில் நடக்கக்கூடிய தமிழ் திரை உலகத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மனத்தடையை பெண்கள் உடைத்து வெளியே எத்தனை வேகமாக வந்தாலும் கூட அதே அளவு தன்னைத்தானே சுருக்கி கொள்ளக்கூடிய சமூக பின்புலம் தான், அவளை தனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க விடாமல் செய்வதும். சமூகத்தின் சாதி எனும் ஆணிவேர் விஷ வேர், அவளை அவளுக்கான உரிமையை, அவளுக்காக அவள் வாழக்கூடாது என்ற எண்ணத்தை பெண்கள் ஆண்கள் என அத்தனை பேரும் மனதிலும் பதிய வைத்திருப்பதை இந்த படம் நமக்குச் சுட்டிக்காட்டி உள்ளது.
இதில் நடித்துள்ள அத்தனை பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment