இதயங்கள் சங்கமிக்கும்
புதுக்கோட்டை 'வீதி':
கவிதூவிய கண்ணீரும்,
கரைபுரண்ட அன்பும்..!
*************************
புதுக்கோட்டையின் மண் வாசனைக்கும், அதன் இலக்கியச் செழுமைக்கும் ஒரு தனித்துவமான அடையாளம் எப்போதும்
உண்டு. அந்த அடையாளத்தின் முகவரியாகத் திகழ்வது 'வீதி' இலக்கிய அமைப்பு.
எளிமையைப் போர்த்திக்கொண்டு, இனிமையான இலக்கியப் பகிர்வுகளால் எழுத்தாளுமைகளை ஒன்றிணைக்கும் இந்த மகத்தான அமைப்பின் 140-வது மாதாந்திரச் சந்திப்பு, இன்று (19-01-2026) திங்கட்கிழமை, புதுக்கோட்டையின் மாலைப் பொழுதை இலக்கியச் சாரலில் நனைத்தது.
விஜய் பேலஸ் பின்புறம் உள்ள ஆலிப் கல்யாண பிரியாணி உணவகக் கடை மாடியில், குளிரூட்டப்பட்ட அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் இதயங்கள் மட்டும் தமிழால் தகித்துக்கொண்டிருந்தன.
நிகழ்வின் வாசலைத் திறந்து வைத்து கவிஞர் மலையப்பன் வரவேற்புரை ஆற்ற, கவிஞர் மு.கீதா தேவதா தமிழ் கீதா தலைமையேற்று நிகழ்வை நெறிப்படுத்தினார்.
கவிஞர் தங்கம் மூர்த்தி Thangam Moorthy தனது தொடக்க உரையின் மூலம் தனக்கே உரிய பாணியில் இலக்கிய தீபத்தை தனது அனுபவ வெளிச்சங்களால் அழகாய் ஏற்றி வைத்தார்.
மேடையில் கவிஞர்கள் கா.மாலதி, Malathikalimuthu முனைவர் மகா சுந்தர், Mahaa Sundar கீதாஞ்சலி ஆகியோர் தங்களின் சொற்களால் கவிதை மழை பொழிய, கவிஞர் மைதிலி Mythily S மாண்ட்டோ கதைகளின் வாசிப்பு அனுபவத்தை ஒரு காட்சிக் காவியமாகவே கண்முன் நிறுத்தினார்.
கவிஞர் கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan , ‘பராசக்தி’ திரைப்படத்தின் மொழிப் போராட்ட உணர்வை இன்றைய படைப்புச் சூழலோடு பொருத்தி விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்தினார்.
ஆனால், இன்றைய மாலைப் பொழுது வீதியின் வழக்கமான கூட்டங்களைக் கடந்து, உணர்ச்சிகளின் சங்கமமாக மாறியதற்கு ஒரு முக்கியக் காரணம் உண்டு. அவர் – அமெரிக்காவின் அட்லாண்டாவிலிருந்து ஓடி வந்திருக்கும் அன்பின் நதி, கவிஞர் கிரேஸ் பிரதிபா.
கொடைக்கானலில் பிறந்து, பெங்களூரில் இல்லறம் கண்டு, இன்று அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்தாலும், கிரேஸின் இதயம் எப்போதும் தமிழ் இலக்கியத்தில்தான் துடித்துக்கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற நிதி உதவி செய்ததோடு, தற்போது சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அரிய பணியையும் செய்து வருகிறார்.
பல்லாண்டுகளுக்கு முன்பாக மதுரையில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் துளிர்த்த அந்தச் சிறு நட்பு, இன்று 'வீதி' அமைப்பின் ஒரு அங்கமாக, ஒரு உடன்பிறந்த சகோதரியாக, உற்ற தோழியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
"புதுக்கோட்டைதான் எனக்குப் புத்துயிர் தருகிறது" என்று அவர் மேடையில் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த காற்று கூட கனத்துப் போனது.
"இந்த வீதி நண்பர்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்? எங்கு இருந்தாலும் உங்கள் அன்பை நான் மறக்கமாட்டேன்..." என்று அவர் தழுதழுத்த குரலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, கண்கள் கசிந்து விம்மிய அந்தத் தருணம், அங்கிருந்த ஒவ்வொருவரையும் கலங்க வைத்தது. நெஞ்சம் நெகிழ வைத்தது.
ஒரு வார்த்தைகூட ஆங்கிலக் கலப்பில்லாமல் அன்பின் அழகிய தமிழ் மொழியை பகிர்ந்து கொண்டு, சிரம் தாழ்த்தி அவர் நன்றி செலுத்திய மேடைப் பண்பாடு பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது.
எழுத்தால் இணைந்த உறவுகள், இரத்த உறவுகளையும் தாண்டி எவ்வளவு ஆழமானவை என்பதற்கு கிரேஸின் அந்தப் புனிதமான கண்ணீர்த்துளிகளே சாட்சி.
நிகழ்வின் நிறைவாகப் பேசிய கவிஞர் நா முத்துநிலவன் கிரேஸ் பிரதிபாவின் சங்கத் தமிழ் போன்ற தூய்மையான அன்பைப் பாராட்டிப் பேசினார். சங்க இலக்கியப் பாடல்களைச் சான்றுகாட்டி, அடர்த்தியான அன்பின், தூய தோழமையின் அந்த உன்னதப் பிணைப்பை அவர் விவரித்தபோது, இலக்கியம் எப்படி மனிதர்களை ஈரமான இதயங்களால் பிணைக்கிறது என்பது மீண்டும் நிரூபணமானது.
நிகழ்வில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சொக்கலிங்கம், புலவர் கும.திருப்பதி திருப்பதி குமரப்பன் , அசோகன் (எல்.ஐ.சி),எழுத்தாளர் அண்டனூர் சுரா Andanoor Sura ,கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,
கவிஞர் ஒட்டடை பாலச்சந்திரன்
கவிஞர் சோலச்சி Solachy Pudukkottai , கவிஞர் ரேவதி ராம்
கவிஞர் பாஸ்கர் கோபால்
வழக்குரைஞர் சங்கீதா Sangeetha R விதைக்கலாம் அமைப்பின் நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமான ஆளுமைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியாக 'விதைக்கலாம்' பாலாஜி நன்றியுரை கூற, ஒரு இனிய அன்பின் ஈரம் கலந்த இலக்கிய நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
'வீதி'-யில் விழுந்து, நம் இதயங்களில் நுழைந்து, உறவில் கலந்த உயிராய் மாறிவிட்ட கவிஞர் கிரேஸ் பிரதிபா அவர்களே...உங்கள் அன்பு என்றும் எங்களைச் சூழும்..! இந்தப் புதுகையின் தோழமை உங்களோடு என்றும் துணை நிற்கும்..!
வீதி'யில் பூத்த இந்த நட்பு, கடல் கடந்தும் புதுக்கோட்டை மண்ணின் ஈரத்தை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
வாழ்க வீதி..!
வளர்க தமிழ் நட்பு..!
-பழ.அசோக்குமார்
No comments:
Post a Comment