Tuesday, 26 January 2016

ஜொலிக்கும் வீதி- திரைக்கவிஞர் நிலா பாரதியின் பார்வையில்

ஜொலித்த வீதி!
சிலநாட்களை சிந்தைகளில் மறக்கமுடியாது அப்படித்தான் நேற்றைக்கு முந்தையநாள்பொழுதும்,
வீடுகளுக்கு பெயருண்டு. வீதிகளுக்கும் பெயருண்டு.
வீதியே பெயராய் ஆனது வியப்புதான்!
புதுகையின் பூரிப்பும், பெருமையும் வீதியைப்பொறுத்தே என்றால் அதுமிகையில்லை.
இப்போதும் அப்படிதான்
வீதியை உருவாக்கி விரிவாக்கம் செய்யும் வித்தகக்கலையை விதவிதமாய் செய்யும் கவிஞர்கள் அமைப்பாளர்கள் திரு. கீதா வைகறை இவர்களோடு துணைநிற்கும் இமயங்களை நான் என்னவென்று சொல்வேன்?
முதல்முறை நான் வீதிகளத்திற்கு வந்தது கடந்தமாதம் தான் .
புத்தாண்டின் பரிசாய் புதுக்கவிதை வாசித்து மகிழும் வாய்ப்பை தந்தது வீதிக்களம் .
வலைப்பதிவர் மாநாட்டில் கண்டைந்தேன் பல நல்ல மனிதர்களில் நட்புகளை...
அப்பப்பா அசந்துபோனேன் பல புதிய மனிதர்களை புதுகை புதையலாகக்கொடுத்தது என்னவோ நான் செய்த தவம்தான்!
மதுரைக்குச்சென்றிருந்தேன் சொந்தப்பணியாக இம்மாதக்கூட்டத்தில் நானும் கூடடைவேனா என்ற அச்சம்வேறு...
என்றாலும் ஒரு நம்பிக்கையில் மூன்றுமணிநேரம் பயணித்து வந்துசேர்ந்தேன் சங்கத்தமிழ்வளர்த்த மதுரையிலிருந்து பொங்குதமிழ் வளர்க்கும் புதுகைக்கு!
பூ மலர்வது போல அவ்வளவு மகிழ்வு தேவதா எனும் தேவதையின் முகத்தில்
சிறப்புத்தரிசனமாய் சிறப்பு அழைப்பாளர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகம் பெருமகிழ்ச்சி கொண்டது மனம்!
மேகத்துளிகள் ஒன்று சேர்ந்து மழையாவதுபோல
கடலானது களம்!
கவிஞர்கள் வருகையால் ....
தொடங்கியது ...
படித்ததில் பிடித்ததை
பகிர்ந்தது பிடித்தது பகிர்ந்தவர்களையும் சேர்த்தும் பிடித்தது .
வரவேற்புரையை திரு. கீதா அவர்கள் துவங்க அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அடைமழை!
ஓவியாவின்
"உதிரத்தை உலுக்கச்செய்த வெண்மணிக்கொடுமைப்பற்றியப்பாடல்
சோலச்சியின் "மானமுள்ள தமிழினமே " என இழந்த ஒன்றின் இருப்பை தெரிவிக்கும் பாடல்!
கூடவே முன்னத்திஏராய் விளங்கும் முத்து நிலவன் அய்யாவின் கருத்துக்களும் சுவைசேர்த்தது .
கவிதைக்களம் புகுந்தேன் நானும்! கொஞ்சம் பதற்றத்துடனும் நிறைய நம்பிக்கையுடனும்!
சமூகத்தின் அவலங்களை தோலுரிக்க சாட்டையை சுழற்றுவதென முடிவுசெய்து தான்
"வீணாபோன வேட்டி, சடுகுடு " எனும் தலைப்புகளில் கனல்கக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசித்த நான் கொஞ்சம் அல்ல
நிறைய வேகமாகவே வீசிவிட்டேன் சாட்டைகளை!
சட்டென்று மின்னி சடுதியில் மறைந்த மின்னலாய் பலரின் மனம் தொட்டுப்போனதை பிறகுதிர்த்த கருத்துக்களில் கண்டுகொண்டேன் .
இன்னும் பொங்கலுக்கு சர்க்கரையாய்,
பாலுக்கு தித்திப்புகூட்டும் தேனாய், தேடும் திரவியமாய்
நண்பர் செல்வா மற்றும் மாணவக்கவிஞரின் கவிதைகளும் களம் கண்டது.
அத்தனைப்பேரின் பாராட்டே எனக்கு அரசவையில் பொற்கிழிபெற்றதொரு பூரிப்பு!
அப்படியே சிலாகிக்க சிறுகதை,
துரைகுமரனின்
உப்புவேலியின் ஓர்அறிமுகம்
"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வள்ளுவனின் வாக்கை நாக்கால் மட்டுமல்ல மனதால் எண்ணிக்கொண்டால் வெற்றிஎன்பது விண்ணளவு தூரமில்லை என்பதை தனதனுபவத்தால் பதியவைத்த பண்பாளரின் பதிவுகள் .
ஆசிரியராய் இருந்தாலும் கற்பிப்பது மட்டுமல்லாது வாசிப்பை பிறருக்கு ஒப்பித்தலும் ஒரு பயனே என ஹார்டியை பற்றிய பலதகவல் பகிர்ந்து வியக்கவைத்தார் நண்பரும் சகோதரருமான திரு.கஸ்தூரி அவர்கள் .
ஒருநாள் பார்வைக்கு பிறகு இவ்வளவு நேசம் சாத்தியமா? எனத்திகைத்திருந்த வேளையில் என்னை நட்பில் திளைக்கசெய்த மைதிலியை எண்ணி மீமகிழ்ச்சியடைந்தேன் கூடவே அவரது பாராட்டுகளும்!
இடையில் இதமாக அளிக்கப்படட நவதானிய சுண்டல் சூப் என்று இன்னும் நிகழ்ச்சியை சொர்க்கமாக்கிப்போனது .
சிறப்புவிருந்தினர் சிரிப்பால், சிந்தனையால் வசீகரித்த வலைப்பதிவர் திரு.வெங்கட் அவர்கள் செலவில்லாமல் எல்லோரையும் சுற்றிப்பார்க்கவைத்துவிட்டார் தன் பயணஅனுபவங்களால்
எங்கள எல்லோரையும் வார்த்தைகளால் விரல்பிடித்தபடி!
அவர் கூறிய அத்தனையிலும் என்னைக்கவர்ந்தவை இவை
தீப்பற்றி எரிகையிலும் இயற்கையை சபிக்காமல் ரசித்துபழகிய மக்கள்!
"யாரோருவர் வரக்கூடும் தன்னைத்தேடி தேநீர் பருகுதல் மூலமாக வெம்மையைஏற்றிக்கொள்ள தன் நம்பிக்கைக்காவேனும் அதிகாலை தீமூட்டும் தேநீர்கடைக்காரர் எனக்கு காட்சியற்ற கடவுளாகவே தெரிந்தார் "
"பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார்
படித்தவர்தான் அதை பதிந்தும்விட்டார் என்பதைப்போல காணும் காட்சிகளால் கவிதையோ கட்டுரையோ ஏதோ ஒன்றை எழுதவும் சொல்லிக்கொடுத்தார் .
நிறைவு செய்வதற்கு முன் நெஞ்சங்களை மட்டுமல்ல வயிற்றையும் நிறைக்கச்செய்தவர் திருமிகு .நீலா அம்மா!
தலைமைக்கும் தகைமைக்கும் பூக்களோடு புன்னகையை பூச்செண்டோடு பரிசளித்தார்கள் செல்வா அவர்களும் புதுகையின் புத்தாண்டு வாழ்த்தாக!
வரகரிசி பாயாசம், வாழைப்பூ வடையென வழங்கி மனம் நிறைத்தார்கள் திருமிகு. நீலா அம்மாவோடு திரு.வைகறையும்
பூக்களெல்லாம் ஒன்று கூடி புகைப்படகருவியின் கண்ணாடிபார்த்து சிரித்துக்கொண்டோம் புதுகைசெல்வாவின் பேரன்பு பெருமுயற்சியால்!
வீதி களம் விரிவாக்குவோம் வியக்கட்டும்!
அந்த விண்ணுலகும் இந்த விஞ்ஞான உலகத்தோடு சேர்ந்தே!
"எல்லாம் பெருமையும் ஒருவனுக்கே" ! 

Sunday, 24 January 2016

வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் -23

வீதி கலை இலக்கியக்களம் -கூட்டம் -23

நாள்:24.01.2016

இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை.

படித்ததில் பிடித்தது
கூட்டம் துவங்கும் முன், அனைவரும் ஒன்று சேரும் வரை படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் கலந்து கொண்டவர்கள்.

கவிஞர் மீனாட்சி சுந்தரம் -முகில் எழுதியுள்ள ”யூதர்கள்”நூலில் அவரின் சந்தேகங்களை எழுப்பினார்...
திருமிகு தமிழ் ஓவியா
 திருமிகு மீனாட்சிசுந்தரம்
திருமிகு  தமிழ் இளங்கோ

கவிஞர் குருநாதசுந்தரம்-”மகிழ்நன் கவிதைகள்”சிலவற்றை பகிர்ந்து கொண்டார்
                        “சொற்களற்ற பாதையில் கடக்கையில்
                          வழித்துணையாய் வருகின்றன
                         அவளின் விழிகள்”
கவிஞர் வைகறை:”மகிழ்நன் கவிதைகளில் தனக்கு பிடித்த கவிதையைக்கூறினார்.


மாணவக்கவிஞர் நட்ராஜ்”வைரமுத்து எழுதிய ”கள்ளிக்காட்டு இதிகாசம்/கருவாச்சிக்காவியம் ஆகியவைக்குறித்து அவரின் கவிதையாய்
                      “கல்லும் படித்தால்
                        கண்கலங்கும் இல்லையெனில் 
                        அது கல்”

என்றும், மேலும் பூபாலன்,அம்சப்ரியா கவிதைகள் குறித்தும் பேசினார்.

கவிஞர் ரேவதி”முகில் எழுதிய ”ஹிட்லர்,சந்திரபாபு”ஆகிய நூல்கள் குறித்தும்,பாலகுமாரனின் உடையார் நாவல் குறித்தும் பேசினார்.

திருச்சியில் இருந்து வந்து கலந்து கொண்ட வலைப்பதிவர் தமிழ் இளங்கோ ”ஏழைப்படும்பாடு”என்ற சுத்தானந்த பாரதியின் நூல் குறித்து பேசினார்.

மாணவக்கவிஞர் தமிழ் ஓவியா ”இராமையாவின் குடிசை” என்ற ஆவணப்படம் குறித்து பேசினார்.

கவிஞர் கீதா ,கார்த்திகைப்பாண்டியனின் விகடன் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல் ”எருது”குறித்து பேசினார்.

கூட்ட நிகழ்வுகள்

வரவேற்புரை:அனைவரையும் இம்மாத கூட்ட அமைப்பாளரான கீதா கவிதை நடையில் வரவேற்றார்.

அஞ்சலி
அண்மையில் மறைந்த மக்கள் கலை இலக்கிய இசையமைப்பாளரான கே.ஏ.குணசேகரன் அவர்களுக்கு வீதி கூட்டம் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாடல்:கவிஞர் .சோலச்சி ,மானமுள்ள தமிழினமே/மதுவால் அழிந்தது தமிழகமே என்ற பாடலைப்பாடினார்.

தலைமை:திருமிகு குருநாதசுந்தரம் தமிழாசிரியர்

கவிதை ஒன்றினை வாசித்து தனது உரையைத்துவங்கினார்...வீதி கூட்டம் துவங்கியதை நினைவு கூர்ந்து ,வீதி சிறப்பான பாதையில் நடைபோடுகின்றது என மகிழ்ந்தார்.

கவிதை
கவிஞர் நிலாபாரதி

     வீணா போன வேட்டி என்ற தலைப்பில் சாட்டையடி வார்த்தைகளால் சுழட்டி தாக்கியது அருமை.

             ”கட்டிக்காப்போமெனும் பெயரில்
              உருவிக்கொண்டு[று] விடாதீர்கள்
           ஆதிமனிதனின் ஆடையான கோவனத்தை” 
என வேட்டிகள் தினம் கொண்டாடுவோரின் அக்கறைச்சாடினார்..

”சடுகுடு” என்ற தலைப்பில்

டாஸ்மார்க் தமிழகத்தின்
அக்மார்க்”

  என தேர்தல் நிகழ்வுகளை படம்பிடித்துக்காட்டினார்..
அனைவரும் கவிதையின் வீரியத்தைப்பாராட்டினர்.

கவிஞர் மீராசெல்வகுமார்.
புகை படிந்த போதி மரங்கள் என்ற கவிதையையும்,கவிதை என்றால் என்ன சிறந்த கவிதை என்ன செய்யும் என்ற கர்ப்பம் யாதெனில் என்ற கவிதையையும் வாசித்து அனைவர் மனதையும் கவிதையால் கட்டிப்போட்டார்.

மாணவ அறிமுகத்தில் சாம்ராஜ் தனது அஹிம்சை கவிதையை சிறப்பாக வாசித்தார்.

சிறுகதை -புதுகை செல்வா

தலைப்பிடப்படாத கதை யென சென்னை வெள்ளத்தில் கண்ட நிகழ்வுகள் மனதில் காட்சிப்படுத்தும் வரிகளால் தனது சிறுகதையை வாசித்த விதம் நன்று.கட்டுமானத்தொழிலாளர்களின் சொற்களைப்பயன்படுத்தியது கதைக்கு வலு சேர்த்தது.

நூல் அறிமுகம்:கவிஞர் துரைக்குமரன்
         
                        ராய் மார்க்சம் எழுதி தமிழில் சிரில் அலெக்ஸ் மொழி பெயர்த்த  ” உப்பு வேலி “என்ற நூலின் சிறப்பைக்கூறிய போது ,உப்பு அரசியலைப்பற்றி புரிந்து கொள்ள முடிந்தது...சுதந்திரப்போராட்டத்திற்கும்,உப்புக்காய்ச்சும் போராட்டமான தண்டியாத்திரைக்கும் உள்ள தொடர்பை அழகாக எடுத்துரைத்தவிதம் சிறப்பு.நூலை படிக்க வேண்டிய ஆவலைத்தூண்டியது.

புதியவர்கள் அறிமுகம்.


கூட்டத்திற்கு புதிதாக வந்தவர்கள் தகளை அறிமுகம் செய்து கொண்டனர்.
திரைப்படப்பாடலாசிரியர் சங்கத்துணைத்தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

அனுபவம்:
மனித வள பயிற்றுநர்:திருமிகு கிருஷ்ணவரதராஜன் 

தனது வாழ்வில்,, தான் தலைநிமிர்ந்து நிற்கும் படி, வெற்றி பெற்ற அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டார். நம்மீது நாம் கொண்ட உயர்வான எண்ணங்களே நம்மை உயர்வடைய வைக்கும்..என்று தான் அடைந்த வெற்றியை நகைச்சுவையுடன் கலகலப்பான பேச்சினால் அனைவர் மனதையும் கவர்ந்தார் .”வெற்றி தரும் நினைவாற்றல் பயிற்சி”என 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை  மாணவர்களுக்கு அளித்துள்ளார்.தற்போது இவரும் இவரது மனைவி அனு வரதராஜனும் இணைந்து ,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்துக்கொண்டுள்ளனர்.அவரது பணி சிறக்க அனைவரும் வாழ்த்துகளுடன் பாராட்டினர்.

இலக்கியவாதி அறிமுகம்.



ஆங்கில ஆசிரியர் கஸ்தூரிரங்கன் ஆங்கில இலக்கியவாதியான ”தாமஸ்ஹார்டி”யை அறிமுகம் செய்த விதம் அருமை...அவரின் துன்பியல் நாவல்களுக்கான காரணத்தை ஆய்ந்து கூறினார்.அறிவியல் சார்ந்து எழுதும் படைப்பாளிகளான சந்தோஷ் நாராயணன்,லெக்‌ஷ்மிசரவணக்குமார் ஆகியோரின் எழுத்துகளைப்பரிந்துரை செய்தார்.

சிறப்பு விருந்தினர் அறிமுகம்:கவிஞர் நா.முத்துநிலவன்


சிறப்பு விருந்தினரான திருமிகு வெங்கட்நாகராஜ் அவர்களைப்பற்றியும் அவர்களின் வலைத்தளம் குறித்தும் அறிமுகம் செய்ததுடன்,
“ மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்றமறைந்தகே.ஏ. குணசேகரன் அவர்கள் இசையமைத்த பாடலைப்பாடினார்.

சிறப்பு விருந்தினர்:திருமிகு வெங்கட்நாகராஜ் தமிழ்வலைப்பதிவர் .தில்லி



venkatnagaraj..blogspotcom  என்ற வலைத்தளத்தை 2009 ஆம் ஆண்டு முதல் எழுதிவருகின்றார்.இவரது வலைத்தளம் கண்கவரும் வண்ணப்படங்களுடன் வட நாட்டு மக்களின் வாழ்வியலை நமக்கு அறிமுகம் செய்கின்றது...

20 வயதில் மத்திய பணியின் காரணமாக தலைநகர் தில்லி சென்றதாகவும்,இதுவரை 16  மாநிலங்களுக்கு சென்றுள்ளதாகவும்,மேலடாக்,அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் நகரைப்பற்றியும்,பயணங்கள் புத்துணர்வு அளிப்பதையும்,பயணங்களில் தாம் பெற்ற அனுபவங்களையும் அழகாக எடுத்துரைத்தார்.மலை வாழ் மக்களுடனான  அவரது அனுபவங்கள் வியப்பையும் ,ஆச்சர்யத்தையும் அளித்தன.இமாசலப்பிரதேச நகரில் அதிகாலை 5 மணிக்கு அவ்வூரின் இருப்பை அறிய முயன்ற நிலையில், யாருமற்ற மலையில் அதிகாலையில் டீக்குடிக்க வருவோருக்காக காத்திருந்த டீக்கடைக்காரரைப் பற்றி கூறிய போது நாங்களும் அவருடன் பயணம் செய்த உணர்வை உண்டாக்கியது..வலைப்பதிவில் என்ன எழுதலாம் என்பதையும் எளிமையாக எடுத்துரைத்தார்..இவரது வருகையால் வீதிக்கூட்டம் பெருமை கொண்டது..


இயற்கை உணவு:கவிஞர் நீலா ஆலங்குடியில் துவங்கி உள்ள இயற்கை உணவகத்திலிருந்து காய்கறி சூப்,நவதானிய சுண்டல்,வாழைப்பூ வடை,வரகரசி பாயாசம் ஆகிய  இயற்கை உணவுகளை முத்து நிலவன் அண்ணா வரவழைத்து ....அனைவரின் வயிற்றையும் நிறைத்து விட்டார்...

ஆற்றோட்டமென கூட்ட நிகழ்வுகள்  அனைவர் மனதையும் நிறைத்தன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
நன்றியுரை :கவிஞர் வைகறை
விழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் ,தனது வார்த்தை மழையால் நன்றி கூறி நனைத்து மகிழ்ந்தார்....

வீதியின் 23 ஆவது கூட்டம் நிறைவுற்றது...

கூட்ட அமைப்பு :கவிஞர் மு.கீதா,கவிஞர் வைகறை.


Monday, 18 January 2016

வீதி கலை இலக்கியக் களம்-22

வீதி கலை இலக்கியக் களம்-22

நாள்:27.12.15

இடம்:ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரி,புதுகை

தலைமை :கவிஞர் நா.முத்துநிலவன்

சிறப்பு அழைப்பாளர்:கவிஞர் .இரா .தனிக்கொடி
[கொம்பன்,தாரைத்தப்பட்டை திரைப்பட பாடலாசிரியர்]

சிறுகதை:கவிஞர் மூட்டாம்பட்டி இராஜூ

கவிதை:கவிஞர்கள் மீரா.செல்வகுமார்,பவல்ராஜ்,ரேவதி.

ஓவியக்கட்டுரை:திருமிகு நா. சுப்ரமணியன்.

அமைப்பாளர்கள்:திருமிகு பொ.கருப்பையா மற்றும் நாகநாதன்.


நிகழ்வுகள்

*வரவேற்பு- கவிஞர் பொன் .கருப்பையா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.
*அஞ்சலி-வெள்ளத்தில் உயிரிழந்தோருக்காக ஒருநிமிடம் அஞ்சலி வீதி அமைப்பின் சார்பில் செலுத்தப்பட்டது.






*தலைமை உரை-கவிஞர் நா,முத்துநிலவன் அவர்கள் தனது உரையில் இவ்வாண்டின் டிசம்பர் மாதம் பல உணர்வுகளை உள்ளடக்கியதாக ,மகிழ்வு ,சோகம் ,வேதனை அத்தனையும் கலந்த மாதமாக உள்ளது.

கவிஞர் இரா,தனிக்கொடியின் தாரைத்தப்பட்டை திரைப்படப்பாடல் வெளியீடு நடந்துள்ளது.

புதுகையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் திறக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனநிலையைக்கூறும் பசங்க-2 படம் வெளிவந்துள்ளது.

வெண்மணியின் துயரங்களை டிசம்பர் 25 நினைவூட்டியது..

கரைபுரண்ட வெள்ளம்....மனிதநேயத்தை வெளிக்கொணர்ந்தது..என தனது நெகிழ்வான நினைவலைகளாக தலைமைஉரையை நிகழ்த்தினார்.

கவிதை-

கவிஞர் மீரா செல்வகுமார் ”நல்லா  வருவீங்க”என்ற சென்னை வெள்ளத்திற்கு பிறகான மக்களின் திருந்தாத நிலையை எடுத்துக்காட்டியது..,இரண்டாவது கவிதை  சென்னை -புதுகை பேருந்து பயணத்தின் காட்சிகளை கண்முன் நிறுத்தியது.
கவிஞர் பவல்ராஜ் அவர்கள் தனது வழக்கமான நகைச்சுவையான பாணியில் கவிதைகளைத்தந்தார்.
’மழைக்கு ஒதுங்க/பயமாய் இருக்கிறது/பள்ளிக்கூடம் ”என்ற கவிதை கட்டிடம் கட்டியவர்களின் ஊழலை உணர்த்தியது.

கவிஞர் ரேவதி ”பெண்சாதி படும் படும் சேதி “என்ற தலைப்பில் குடிகாரக்கணவனின் மனைவியின் வேதனைகளைக்கூறினார்.
”தொலைந்தது போதும்”என்ற கவிதை   நாம் தொலைத்த இளமை அனுபவகளை நினைவூட்டியது...அருமை.

சிறுகதை-

”பூனைத்தலை”-மூட்டாம்பட்டி ராஜு
 

கழிவகற்றும் பணி செய்பவர்களின் அவலத்தையும்,மக்களின் அக்கறையின்மையையும் தனக்கே உரிய பாணியில் படைத்திருந்தார்..பாலிதீன் பை அவருக்கு நசுங்கிய பூனைத்தலையாக காட்சியளித்தது நல்ல கற்பனை..

ஓவியக்கட்டுரை



 ஓவியர் சுப்ரமணியன் அவர்கள் குழந்தைகள் கிறுக்குவதை தடை செய்யாதீர்கள்.அது அவர்களின் ஓவியம்...உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம்..எனத்துவங்கி. சித்தன்ன வாசலின் பெருமைகளை எடுத்துக்கூறி வியக்க வைத்தார்.ஓவியங்களின் தன்மைகளை விரிவாக விளக்கியதுடன் அவரது அழகான அன்பைக்காட்டும் ஓவியமொன்றை காட்சிப்படுத்திய போது வீதி கலை இலக்கியக்களம் என்பது இன்றுதான் நிரூபித்துள்ளது...என்றார் கவிஞர் நா.முத்து நிலவன்.

வெள்ளநிவாரணப்பணி அனுபவம்



விதைக்Kalam-குழுவினர் யு.கே.கார்த்திஸ்ரீமலையப்பன்,கஸ்தூரிரங்கன்,செல்வக்குமார் ஆகியோர் கடலூருக்கு வெள்ள நிவாரணப்பணிகளுக்காக ரூ 4,00,000 மதிப்புள்ள பொருட்களை எடுத்துச்சென்று நேரில் கொடுத்து வந்த போது ஏற்பட்ட சிரமங்களையும்,மக்களின் உணர்வுகளையும் எடுத்துக்கூறினர்.

சிறப்பு அழைப்பாளர் உரை



கவிஞர் தனிக்கொடி அவர்கள் தனது உரையில் வீதிகள் இணையும் இடம் சதுக்கம் என்பர் அதுபோல் இலக்கியவாதிகள் இணையும் இடமாக வீதி செயல்படுவது சிறப்பு...கவிதைகள்,சிறுகதை,கட்டுரைகளுக்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் கூறப்படுவது அவர்களை மேலும் எழுதத்தூண்டும் வகையில் உள்ளது.

பெண்கள் எழுதவேண்டும்..பெண்ணின் இருப்பு இங்கே ஆணைச்சார்ந்தே உள்ளது...பெண்களின் கைகளில் யுகாந்திரமாக சோற்றுமணமே வீசிக்கொண்டுள்ளது என்ற அம்பையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.ஆண்கள் வெளியே சென்றவுடன் அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள்..

ஆதவன் தீட்சண்யாவின் வீட்டுக்குள்ளே ஒரு சேரி சமையலறை என்ற வார்த்தைகளைக்கூறி இன்றும்அது ஆண்கள் தீண்டப்படாத இடமாக கருதப்படுவதை  எடுத்துரைத்தார்.
தாய்மை என்பதே அடிமைத்தனத்தின் உச்சம்..இதனால் ஆண்கள் தங்களது பொறுப்புகளை பெண்கள் மீது சுமத்திவிடுகிறார்கள்...என்றார்.....
நன்றியுரை
வைகறை நன்றி கூற வீதியின் 22 ஆவது கூட்டம் மிகச்சிறப்புடன் முடிந்தது..





Monday, 19 October 2015

வீதி கலைஇலக்கியக்களம்-கூட்டம் 20[18.10.15]

வீதி கலை இலக்கியக்களம் .கூட்டம் 20
-------------------------------------------------------------
18.10.15 அன்று வீதியின் 20 ஆவது கூட்டம் மிகச்சிறப்பாக புதுகை ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையேற்றார்.










மதுரையில் இருந்து வந்து சிறப்பு விருந்தினராக கவிஞர் மா.காளிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்...அவர் தனது உரையில் வீதி கூட்டம் என்பது நாலு பேர் கலந்து கொண்டு சாதாரணமாக நடக்கும் கூட்டமாக நினைத்தேன் ஆனால் இங்கு முறையாக கவிஞர்களை, கட்டுரையாளர்களை,சிறுகதையாசிரியர்களை அவர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்களைக்கூறி தட்டிக்கொடுத்து ஊக்குவிக்கும் களமாக அமைந்துள்ளதை பார்த்து வியக்கிறேன் என்றார்.கவிதை குறித்து பேசுகையில் தனக்கு பிடித்த கவிதைகளைப்பற்றிய ஒப்பீடு செய்து கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது..

திருச்சி பாரத மிகுமிந்தொழிலக முத்தமிழ்மன்ற நிர்வாகிகள் மற்றும் அதன் பொதுச்செயலாளர் திருமிகு மணிவண்ணன் ஆகியோர் முத்தமிழ்மன்றத்தின் சார்பாக  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



கவிதை வாசித்த கவிஞர் சுகன்யா ஞானசூரி இலங்கை மக்களின் வேதனையைக்குறித்தும்,தமிழ்மொழியின் மேல் கொண்ட அக்கறை கொண்ட கவிதைகளைத்தந்து கூட்டத்தினை  சிறப்பான இடத்திற்கு நகர்த்தினார்..அவரின் கவிதைகள் குறித்து விவாதிக்கப்பட்டது..


சிறுகதை-

 “மீண்டும் அகிலன்”என்ற அடர்த்தியான செறிவான கதையை கவிஞர் மாலதி அவர்கள் வாசிக்க அக்கதையின் உண்மை அனைவர் மனதிலும் தைத்தது..அவரின் முதல்கதை அனைவராலும் நேர்மறையாக விமர்சிக்கப்பட்டது...

கட்டுரை

”இரவின் பாடல் “என்ற இரவு குறித்த கட்டுரையைக் கவிதை நடையில் நடைச்சித்திரமாய் ..காட்சிப்படுத்தி அனைவர் மனதையும்  கவர்ந்த சுரேஷ் மான்யாவை அனைவரும் பாராட்டினர்...இன்னும் அவரது திறமைகள் குடத்திலிட்ட விளக்காக இருப்பதைக்கூறி..குன்றிலிட்ட விளக்காக அவரின் திறமைகள் ஒளிவீச வாழ்த்தினர்...

நூல் விமர்சனம்-

கி.ரா.வின் “பெண் கதைகள்”குறித்து கவிஞர் ஸ்டாலின் சரவணன் விமர்சனம் செய்தார்.அந்நூலில்  மூன்று கதைகள் குறித்து கூறுகையில்  ”பேதை “என்ற பேச்சி என்ற பென்ணின் கதை அனைவர் மனதிலும் ஊடுறுவி மனதை கீறிச்சென்றதை உணரமுடிந்தது...மீளாது தவிக்க வைத்தாள் பேச்சி..இரண்டாவது கதையில் கொண்டையா மல்லம்மாவின் கூடலுக்கான தவிப்புகளை அதற்கே உரிய மனநிலையில் கதை ஆசிரியரை விட ஸ்டாலின் கூறி அசத்தினார்...இவருக்குன்னு கிடைச்சிடுது ....காதலைக்கூறாமல் கூறத்தவிக்கும் கதைகள்...

சென்ற வீதிக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட கவிஞர் .முத்துச்சாமி அவர்களுக்கு தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் அளித்து மாதாமாதம் ரூ5000 உதவித்தொகை அளித்திருப்பதைக்கூறி வீதிக்கூட்டம் சிறப்பான பாதையில் செல்வதை அடையாளங்காட்டினார்..சென்ற மாதக்கூட்ட அமைப்பாளர் கவிஞர் செல்வா...

வலைப்பதிவர் விழாவில் கலந்து கொண்ட யுகே கார்த்திக் ,முகுந்த்.புனிதா.நீலா,அமிர்தாதமிழ்,அப்துல் ஜலீல் மற்றும் நாகநாதன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது...

விழாவில் அறிவிப்புகளாக எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்களின் நூல் வெளியீடு 24.10.15 அன்று புதுகை நில அளவையர் சங்கத்தில் நடக்க உள்ளதையும்,வாசிப்பு இயக்கம் குறித்த பயிற்சி 24,25 ஆகிய நாட்களில் நடக்க உள்ளதையும் அறிவித்தார்கள் சுராவும் கவிஞர் நீலாவும்.

இம்மாத விழா ஒருங்கிணைப்பாளர்களான அப்துல் ஜலீல்,அமிர்தா இருவரும் மிகுந்த சிரத்தையுடன் விழாவை நடத்தியது அருமை...எல்லோருமே மறந்து விட்ட அஞ்சலட்டையில் விழாவிற்கு அழைப்பு அனுப்பி நினைவுகளை கடிதக்காலங்களுக்கு அனுப்பியமைக்கு இருவருக்கும் நன்றி...

Sunday, 27 September 2015

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19
நாள்:27.9.15
இடம் :புதுகை

இன்று வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 19 வழக்கம் போல் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.

கூட்டம் துவங்கும் முன் தங்களது அனுபவங்களைக்கூறும் நிகழ்வில்

ஸ்ரீமலையப்பன் தங்களது விதைக்கலாம் அமைப்பைப்பற்றியும்,வலைப்பதிவர் கையேடு தயாரிப்புக்குறித்தும் ,,

சுகன்யா ஞானசூரி வீதிக்கூட்டம் பற்றியும்,

கீதா வலைப்பதிவர் விழாப்பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கொடி பாரமா?
பாடலை எழுதிய 97 வயது மூத்த பாடலாசிரியர் நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டிக்கிராமத்திலிருந்து வர விழா துவங்கியது..

தலைமை:பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்

வரவேற்புரை
செல்வா அவர்கள் வரவேற்புரையே தற்கால நிகழ்வுகள் நிறைந்த கவிதையாகக்கூறி வரவேற்றார்...

”வீதிக்கு வந்து விட்டோம்
வேறு வழியே இல்லை
எரிந்தே கிடந்தாலும்
இழுத்துச் செல்ல வேண்டும் தேரை”

வீதியின் குரல்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன”என்றார்.

கவிதை -மாலதி

அப்துல் கலாம் பற்றியும் மாணவர்கள் குறித்தும்சிறப்பான கவிதைகளை வாசித்தார்
“சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்
நமைச் சீண்டிப்பார்க்கும் சிற்றுளிகள்”

என்ற வரிகள் அனைவராலும் பேசப்பட்டன...

கட்டுரை -

மீண்டும் விதைக்கலாம் தமிழ்-அப்து ஜலீல்

கனிம வளங்கள் வற்றுவதைப்போல தாய் மொழியான தமிழும் வற்றிக்கொண்டு வருகிறது.மீண்டும் விதைக்க நான் தானே முயலவேண்டும் ,,..என தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் தமிழர்களின் தாய் மொழி குறித்த அக்கறையின்மை,தன் பாரம்பரியத்திற்கு மீண்டும் நாம் வரவேண்டும் என்ற அக்கறையான கட்டுரையை அருமையாக வாசித்தார்.

நூல் விமர்சனம்.கீதா

கதவுகள் திறக்கும் வானம்- கவிதை நூல்

இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு -புதியமாதவி...காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் .
விலை ரூ 110

11 மொழியில் 19 கவிஞர்கள் எழுதியுள்ள 45 கவிதைகளை உள்ளடக்கியது.

மும்பையில் வாழும் கவிஞரான புதிய மாதவி தனது முன்னுரையில்

” பெண் மொழிக்கு தேசங்கள்,மொழிகள்,இனங்கள் இல்லை”எனக்கூறி இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இந்நூல் என்கிறார்.

எந்த மொழியாக இருந்தாலும் பெண்ணின் உணர்வுகள் தங்களது மனக்குமறலை,தனக்கென ஒரு வீடில்லாத ,காலமில்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன..பெண் நிலை எந்த நாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளதை உணர முடிகின்றது.சமூக அக்கறையுள்ள இருகவிதைகள் மனதை ஆக்ரமித்துக்கொண்டது...சமூகச்சிந்தனை உள்ள பெண்ணுக்கு நேரும் வன்முறைகளை ஒரு கவிதை விளக்குகின்றது.ஒரு கவிதை சிரியா நாட்டில் குழந்தைகள் கூடச்சிறைச்சாலையில் இருப்பதையும் அந்நாட்டு மக்களின் நிலையையும் எடுத்துக்காட்டுகிறது என்றார்..

சிறுகதை-அண்டனூர் சுரா.

இலங்கை வாழும் ஒரு குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவை நோக்கி கள்ளத்தோணியில் பயணம் செய்வதைக்காட்சிகளாக்கினார்.இலங்கை மொழிநடையில் எழுதி,அவரே பாத்திரமாக மாறி வாசித்த விதம் அனைவர் மனதிலும் கதையின் வலியை உண்டாக்கியது.

சிறப்பு அழைப்பாளர் அறிமுகம் -மீரா .செல்வா

பாடலாசிரியர்,நாடக ஆசிரியர்,வசனகர்த்தா என பன்முகப்பரிமாண பி.கே.முத்துச்சாமி அவர்களை அறிமுகம் செய்தார்.







நேர்காணல்.

பாடலாசிரியர் முத்துச்சாமி அவர்கள் நேர்காணலில் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள்,தமிழக முதலமைச்சர்களுடன் திரைத்துறையில் ஈடுப்பட்ட விதம்,தனது கதையை பிறர் திருடி ஏமாற்றிய கோபம்,காலத்தால் அழியாத பாடல்களை தனது நடுங்கும் குரலால் பாடிக்காட்டினார்...

9 நாடகங்கள்,30,000 வெண்பாக்கள் இயற்றிய வெண்பா வேந்தர் என பட்டம் பெற்றவர்..முன்னால் முதலமைச்சர் காமராசர் இவரைத்தேடி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.

”மண்ணுக்கு மரம் பாரமா?”

”மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியில..”

”சின்னச்சின்ன நட நடந்து
செம்பவள வாய்திறந்து”

போன்ற புகழ் பெற்ற பாடலைப்பாடியுள்ளார்.


வறுமை சூழ்ந்து வாழ்கின்ற மாபெரும் பாடலாசிரியர் பி.கே .முத்துச்சாமி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நலிந்த அக்கலைஞருக்கு வீதிக்கூட்டம் சார்பாக ரூ 5000/-வழங்கப்பட்டது..
.தமிழகம் மறந்த மாபெரும் கலைஞரை வீதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது.\

இம்முயற்சியை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீரா.செல்வா & செல்வா ஆகியோருக்கு வீதி அமைப்பு மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியது...

அவரைப்பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளைஞருக்கு கௌரவம் செய்யப்பட்டது.


வீதியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சியைச்சேர்ந்த வி.சி.வில்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நன்றியுரை :மீரா.செல்வா

எதிலும் புதுமையாகச் செய்து பாரட்டுக்கள் பெறும் செல்வா & செல்வா கூட்டணி இன்றும் வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.