Friday, 19 July 2024

ஆசிரியர் பணி

20.7.1988-20.7.2024

36 வருடங்கள் ஆசிரியர் பணி ஏற்று 37 ஆவது ஆண்டு துவங்குகிறது.
பணி ஏற்கும் போது அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து,அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சியும் 1987 இல் முடித்து  1988 இல் அரியலூர் மாவட்டம் சிறுவளூரில் ஆசிரியராகப் பணி கிடைத்தது.அதற்கும் முன் எங்கள் குடும்ப நண்பராக அதே தெருவில் வசித்த முன்னாள் எம்.எல்.ஏ திருமிகு ஆறுமுகம் அவர்களை அப்பா (அவரது மகள் கண்ணகி என் தோழி )என்று தான் அழைப்பேன்.ஐந்தே வீடுகள் இருந்த தட்டாரத்தெருவில் கடைசி இரண்டு வீடுகள் எங்களுடையது.பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தான் இருப்போம்.

ஒருநாள் கண்ணகி அப்பா கைகள் இரண்டையும் மூடிக்கொண்டு ஒரு கையில் மாப்பிள்ளை ஜாதகம் இன்னொரு கையில் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியர் பணி இரண்டில் எது வேண்டும் மா என்று கேட்டார்.உடனே வேலை தான் வேண்டும் நான் போகிறேன் என்றேன்.இவ போய் அங்கே என்னத்த சொல்லிக் கொடுக்க போறான்னு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க.
பின்னர் ஆறு மாதம் கழித்து சிறுவளூரில் ஆசிரியர் பணி ஆணை வந்தது.
வீடு இல்லைனா பள்ளி என்று இருந்த என் வாழ்க்கை பேரூந்து பயணத்திற்கு மாறிய காலமது.

அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் இருந்த புதுப்பாளையத்திற்கு ஜெயங்கொண்டம் பேருந்தில் சென்று இறங்கி பிறகு இரண்டு கிலோமீட்டர் நடந்து சிறுவளூர் செல்ல வேண்டும்.

1988இல் நான் வாங்கிய முதல் ஊதியம் 
 ரூ320. என்னை பேருந்தில் தனியே அனுப்ப மனமில்லாமல் அப்பா காட்டு வழியாக தினமும் 40 கிமீ பயணித்து காலையில் கொண்டு வந்து விட்டு மறுபடியும் மாலையில் அழைக்க வருவார்கள். டிவிஎஸ் 50 வண்டியில் 3 மாதங்கள் வந்தேன்.பிறகு பேருந்து பயணம் பழகி விட்டது.கீழப்பழுவூரில் பேருந்து கிடைக்காத போது சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் நீண்ட டிப்பர் லாரியில் தான் அப்பகுதி மக்கள் செல்வார்கள்.டிரைவர் கேபினுக்கு ஏறத் தெரியாமல் ஸ்டூல் போட்டு ஏறி பிறகு டயரில் கால் வைத்து ஏறக் கற்றுக் கொண்டேன்.

புதுப்பாளையத்தில் இறங்கியதும் மாணவர்களுடன் வேகமாக இரண்டு கிலோமீட்டர் நடந்து 9 மணி வழிபாட்டு கூட்டத்திற்கு வந்து விடுவேன்.ஒரு பெட்டிக்கடை கூட அந்தக் கிராமத்தில் கிடையாது. மாணவர்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் மருந்து பொருட்கள், அந்த கிராம மக்கள் உரிமையோடு வாங்கி வரச் சொல்லும் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கிளம்பும் என்னை இவளா இப்படி என்று அம்மா கன்னத்தில் கை வைத்து பார்ப்பார்கள்.

இப்போதும் மாணவர்களுக்கு தேவையான மாத்திரைகள் கொண்ட சிறிய பர்ஸ் எனது கைப்பையில் இருக்கிறது.
சிறுவளூருக்கு இப்படி போக வேண்டும் என்றால் அடுத்து மாறுதலான பளிங்காநத்தம் பள்ளிக்கு பேருந்தே அதிகமாகக் கிடையாது காட்டாறு ஓடும் அந்த சாலையில் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.அப்பகுதியில் 1990 முதலில் டிவிஎஸ் 50 ஓட்டிய பெண் ஆசிரியர் நான் தான். பிறகு மேலப்பழுவூர் பள்ளியில் 13 ஆண்டுகள்.இப்போதும் அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் உரிமையோடு பேசுகிறார்கள் என்பதே நான் மாணவர் மனதில் இருக்கிறேன் என்ற நிறைவைத் தருகிறது.

காலம் சிமெண்ட் ஆலைப்புகை ஒவ்வாமை காரணமாக 2002 சனவரியில் புதுக்கோட்டை மழையூருக்கு வர வழைத்தது. 
அங்கிருந்து 2005 இல் இப்போது பணிபுரியும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2005 ஜூலை 6 ஆம் தேதி வந்தேன்.காலம் நிறைய அனுபவங்களை இந்தப் பணியில் தந்து பக்குவப்படுத்தி உள்ளது.
 மாணவர்களிடம் இருந்து தினம் தினம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

ஆசிரியராக இருந்த என்னை அம்மாவாக தத்தெடுத்து கொண்ட பவித்ரா எனக்கு சிறப்பு குழந்தைகளை எப்படி நேசிப்பது என்பதை கற்றுக் கொடுத்தாள்.நிறைய அனுபவங்கள் என்னை செதுக்கி உள்ளன.
2017 இல் புதிய பாடத்திட்டக்குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி,2022 இல் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் அயல்நாட்டு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி அனுபவங்கள் மறக்க முடியாத நினைவுகள்.

37 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன் இப்போதும் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவியாக...
மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியராக வாழ்வதே நிறைவாக கருதுகிறேன்.

Friday, 3 May 2024

ஹீரா மண்டி

ஹீராமண்டி தி டைமண்ட் பஜார்


 தொலைக்காட்சித் தொடர் 
இந்தி மொழியில்2024  மே 1 அன்று வெளியானது.


இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி
200 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நவாபுகள் தங்களின் சந்தோஷத்திற்காக பெண்களை விலைக்கு வாங்கி பயன் படுத்தி கொள்ளும் இடம் தான் ஹீரா மண்டி .
இக்கதை சுதந்திர போராட்டக் காலத்தில் லாகூரில் நடந்த உண்மையைத் தழுவியது.
 ஹீராமண்டி  அரண்மனையின் ராணிமல்லிகாஜானாக மனீஷா கொய்ராலா  அட்டகாசமாக நடித்துள்ளார்.கம்பீரமான ராணியாக  அவள் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிந்தவளாக இறுதியில் தனது மகளுக்காக அவள் அடையும் மரணவேதனை என கலக்கி உள்ளார்.
அவளது ஆண் குழந்தையை அவளது அக்கா விற்றுவிட்டு நீ வயிற்றில் சுமந்த தை நான் கழுத்தில் சுமக்கிறேன் என்று கூறும் காட்சி விலைமாதுக்களின் வலியை உணரவைக்கிறது.அங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்பதை கூறும் காட்சி கொடுமை.
தனது அம்மாவை சித்தி மல்லிகா கொன்றதற்கு பழி வாங்கத் துடிக்கும் ரெஹானாவாக- சோனாக்ஷி சின்ஹா அற்புதமாக நடித்துள்ளார்.தங்களைப் பயன் படுத்தி கொள்ளும் ஆங்கிலேயர்களின் உதவியோடு சித்தியின் அரண்மனை ஆட்சியைத் தகர்த்து பழிவாங்க முற்படுகிறார்.
மல்லிகா ஜானின் மகள் பிபோஜானாக அதிதி ராவ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புரட்சியாளர்களுக்கு உதவி செய்து இறுதியில் மரணதண்டனை ஏற்கும் காட்சியில் தத்ரூபமாக நடித்து உள்ளார்.
மல்லிகாஜானின் இரண்டாவது மகள் ஆலம்ஜானா ஷர்மின்ஷேகல் நடித்துள்ளார்.வேசிகளின் உலகத்தில் ஒரு கவிஞராக வாழ ஆசைப்படும் கனவு நிறைவேறாத ஒன்றாகவே உள்ளதை தனது நடிப்பால் நம்மிடம் கடத்திவிடுகிறார்.

,சஞ்சீதா ஷேய்க் முதற்கொண்டு பலர் நடித்திருக்கும் இந்தத் தொடரில் அற்புதமான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஹீரா மண்டி பெண்களின் உலகம் நவாப்களின் வருகையால் வளமிக்கதாக உள்ளது.
வேசிகள் என்று சமூகத்தால் அழைக்கப்படும் அவர்களின் உலகத்தைக் கண்முன் காட்டுகிறது.
அவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ ஆசைப்பட்டாலும் இந்த சமூகம் அவர்களை வேசியாகவே எண்ணும் நிலையில் அவர்களின் தூய்மையான காதலும் புறந்தள்ளப்படுகிறது.


பிரிட்டிஷ் அரசு ஆட்சி காலத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவர்களின் பங்கு மிக முக்கியமானது வரலாற்றில் புறந்தள்ளப்பட்ட பெண்களின் பங்களிப்பிற்கு இந்தத் தொடர் நியாயம் செய்து உள்ளது.

விலைமாதுகளின் வலி நிறைந்த உலகம், நவாபுகள் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டு செய்யும் கொடுமை,சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு இவற்றை மையமாகக் கொண்டு படமாக்கிய விதம் சிறப்பு.

பாடல்கள் அருமை தொடர் முழுவதும் இழையும் சோக இசை பெண்களின் துயர மூச்சாக ஒலிக்கிறது.எடிட்டிங் மிக அருமை எந்த இடத்திலும் தொய்வில்லாத  தன்மை.
தொடர் தானே என்று இல்லாமல் மிகுந்த பொருட்செலவில் அக்காலத்தை கண் முன்னே கொண்டு வந்துள்ளனர்.

மெழுகுவர்த்தின் ஒலியில் சில காட்சிகள் கண்களைவிட்டு அகல மறுக்கின்றன.

அனைவரும் காண வேண்டிய ஒரு தொடர் HEErRAMANDI

Monday, 4 March 2024

சிற்றலை மீதமர் தும்பி கவிதை நூல்

ரேவதி ராம் எழுதிய " சிற்றலை மீதமர் தும்பி" கவிதை நூல் விமர்சனம்.
தும்பி அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எந்த வயதிலும் தும்பியைப் பார்த்தால் ஆசையாகத் தொட ஓட வைக்கும் இக்கவிதைகளைப் போல.
மனம் வறண்ட பாலைநிலத்தில் மழைத்துளியென ஒரு சொல் போதும் வனமாகிவிடுவேன் என்ற கவிதை சொல்லாலே வாழ்கிறது இவ்வுலகு என்பதை உணர்த்தும் கவிதை.
" காய்ந்து கருவேறிய
மரமாய் நிற்கும்
என்மனம்.
ஒவ்வொரு பட்டையாய் உதிர
உன் மொழி கேட்டு.
பச்சை வாடை கிளம்பி
முத்திரை ஒன்று உள்ளுக்குள்
துளிர்க்கத் தொடங்கியுள்ளது."
இருந்ததையும் இன்மையையும் ஒன்றாய் பார்க்கும் ஜென் தத்துவக் கவிதைகள் பல உண்டு.வீழும் சருகின் நினைவலைகள் தரை இறங்காமலே நினைவுகளுடன் ஏ வாழ வைக்கும் கவிதையாக.
கருத்துச் சுதந்திரம் அற்ற இந்த நாட்டில் கடவுளைப் பற்றி எழுதினால் கைது நிச்சயம் என்பதைக் கூறும் அரசியல் கவிதையாக
" ஆமாம்
எழுத வேண்டும்
கவிதைதான்
கடவுளைக் குறித்துத் தான்
பேனாவைப் பிடிக்கையில்
சிறு சந்தேகம்
கைதாகப் போவது
நானா?
சொல்லா?"
சொல்லைத் தாங்காது கைது என்ன? சொல்லிற்காக உயிரைக் கொடுத்த கௌரி சங்கர் போல பலரைக் கண்முன்னே வரவழைத்த கவிதை .
காதலைக் கூறும் பல கவிதைகள் மிக அருமை.
பல கவிதைகளைக் குறியீட்டுக் கவிதைகளாக உணர முடிகிறது.
" நீரில் தத்தளித்த
சிற்றெறும்பிற்காக
ஒற்றை இலையை
உதிர்க்கிறது
பெருமரம்".
இது பேரன்பால் கரம் கொடுத்து துயரங்களைத் துடைக்க முயலும் கவிதையாகிறது.
எது சாமி? எனக் கேள்வி கேட்கும் கவிதைக்கு பதிலைத் தான் உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது.
வாசிக்கப்படாத கவிதையாக வாழும் கவிஞரின் வாழ்க்கை இசையாக உலகை வெல்லட்டும்.
இசையாக,தும்பியாக,இலையாக,சருகாக,
மரமாக,நதியாக ,என இயற்கையில் கரையும் கவிஞருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இலக்கிய மகள் பெறும் புகழை நான் பெற்றதாகவே கருதி எனது மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, 3 March 2024

"கனவின் இசைக்குறிப்பு "நூல் விமர்சனம்

கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்  எழுதிய"கனவின் இசைக்குறிப்பு " கவிதை நூல்.
நூலின் பதிப்புரையும் ,அணிந்துரையும் பேரன்பின் பிரதிபலிப்பு.
இணையரின் கனவை நனவாக்க கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan எடுத்துக் கொண்ட முயற்சிகளையே ஒரு நூலாக எழுதலாம். கரம்பிடித்து இணையரை கவிதை வானில் சிறகடிக்க விட்டு பார்த்து மகிழும் அன்புத் தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
"சிறகுகள் துளிர்க்கும் கனவு" என்ற கவிதையில் துவங்கி
" முடிவும் தொடக்கமும்" என்ற கவிதையில் முடியும் இந்த நூல் முழுவதும் வாசிக்கும் போது ,பின்னணியில் இளையராஜாவின் இசையை உணர்ந்தால் கவிஞரின் வானத்தில் நீங்களும் பறவையாக ஆகமுடியும்.
குழந்தையின் அன்பில் கரைந்த தாய் வளர்ந்த மகளிலும் குழந்தமையை எண்ணித் ததும்பும் தாய்மைக்கவிதை,
இலை , நிலா,பூநாகம் தடாகம்,
அரசியல், காதல், காணும் காட்சிகள்,
தோழியின் நிலை, வண்ணத்துப்பூச்சி, தேநீர்,உறைந்து மீளும் அங்காடி, மனம் வருடும் ஹரிஹரனின் இசை,நட்பு,பதின்மம்,வேங்கை வயல், குளம், செவிலியர், செருப்பு என பற்பல பாடுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு குறியீட்டு கவிதைகள்,படிமக்கவிதைகளை எழுதி உள்ளார்.
சில கவிதைகள் முத்தம் தரும், சில கவிதைகள் வாதை தரும், சில கவிதைகள் வன்மை காட்டும்...எல்லாக் கவிதைகளிலும் மனித நேயம் வாழும்.பெரிதும் நேசிக்கும் படும் தந்தை பெரியாரின் கவிதை.

எனக்கு பிடித்த சில கவிதைகள்
"நரம்புகளில் ஊர்கிறது எறும்பு
சிலிர்த்துக் கொள்கிறது
இலை'
இக்கவிதையைப் படிக்கும் போது நமது நரம்புகள் சிலிர்ப்பதை உணர முடியும்.

"சவாரி குதிரைகளை  வரைவது தண்டனை எனக்கூறும் தோழிக்காக இரங்கும் கவிதையொன்று.
தேநீர் இவரது கவிதைகளில் பல இடங்களில் இடம் பிடிக்கிறது நமது மனங்களிலும்.
அவரது
" அகல் அளவு இதயத்தில்
தேக்கரண்டி சொல் நிறைத்து
நின்றெரியும் சிறு சுடர் _ நீ"
சுடர் பிரகாசமாக எரிந்து பல கவிதைகளுக்கு ஒளி கூட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சாத்தானின் பிள்ளைகளைப் போல கவலையற்று வாழவே நேர்மையான உள்ளங்கள் விரும்பும்..
பரிதவிப்பின் படபடப்பைக் கூறும் கவிதையாக
" செவிமடுக்கத் துணிந்த நொடிக்கு
சிலந்தி வலையில் படபடக்கும்
தும்பியின் சாயல் "சிறப்பானதொரு கவிதை.
நிறைய கவிதைகளால் நமது மனதை நெய்து வலைசெய்து பிடித்து வைத்துக் கொள்கிறார்.
புதுக்கோட்டை இலக்கிய உலகின் இவரது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக..... இந்நூல் " கனவின் இசைக்குறிப்பாக" இசைக்கிறது. 
பேரன்புக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டுச் சிறப்பித்த நூலில் இருந்து,
தீக்கமழும் செங்குருதி,நெகிழி உதடுகள் என பல புதிய பதங்களை முத்தெடுக்கலாம்.
சமூகத்தின் மீதான தீரா அன்பை கவிதைகளாக வடித்து,
கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வானில் தடம் பதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

முட்டிக் குறிச்சி நாவல் விமர்சனம்

எழுத்தாளர் சோலச்சி எழுதிய"முட்டிக்குறிச்சி "நாவல்

 முட்டி குறிச்சி நாவல் மனதில் படிமமான நாவலாக, நான் வாசித்த நாவல்களில் சிறப்பான நாவலாகக் கருதுகிறேன் .

முட்டிக் குறிச்சி என்பது ஒரு பெயர் காரணம். அதிர்ச்சி அளிக்கக் கூடிய,ஒரு சமூக சீர்கேட்டின் அடையாளச் சின்னம்.

 இந்த நாவல் படிக்கும் பொழுது நம்மையும் இயற்கையின் சூழலில் அமரவைத்து ரசிக்க வைக்கின்றது.

தீத்தன் பாலாயியின் மகன் அழகப்பனும் மருமகள் பொன்னழகியும் வயல்நாட்டிலிருந்து இடையாத்தூருக்கு அடர்ந்த காட்டின் வழியாக செல்வதாக நாவல் துவங்குகிறது.
அப்படிச் செல்லும் போது இருவருக்குமிடையேயான பேரன்பு,காதல், தாம்பத்யம்,பொன்னழகியின் மருத்துவ அறிவு,நமக்கு முந்தைய மூன்றாவது தலைமுறை காலத்தில் நிகழும் கதை.

 வழியெங்கும் பறவைகளை, மரங்களை, மூலிகைகளை அவர்கள் மூலம் ஆசிரியர் நமக்கு கடத்துகிறார்.

சங்க இலக்கியம் கூறும் ஒல்லையூர் பற்றி, தொரட்டிப்பழ வாசனை பற்றி படிக்கும் போது நமக்கும் எச்சில் ஊறவைக்கும் எழுத்து.
காளைக்கோழி மலை என்ற தேன் மலையின் தேனிற்காக படை திரட்டி வந்த தனஞ்செயவேலனை வெற்றி கொண்ட கார்வேந்தன் படைகள் என வரலாற்று செய்திகளையும் ஆங்காங்கே கூறிச் செல்லும் பாங்கு சிறப்பு.

ஒடுக்கப் பட்ட மனிதர்களிடையே காணப்படும் மனித நேயம்,அவர்களை தீண்டத்தகாதவர்களாக புறந்தள்ளிய கொடுமை.அவர்களது வாழ்வியலை நமக்கு அணுக்கமாக கூறும் நாவல்.
பசுவின் பிரசவ வேதனை கண்டு தன் தாய் வலி உணரும் அழகப்பன்.

தீராத நோயையும் தீர்த்து வைக்கும் பிச்சாயி... ஆதித் தமிழர் மருத்துவத்தில் சிறந்த அறிவுடையோராக வாழ்ந்திருந்த தை உணர வைக்கிறார்.

பிழைப்பு தேடி மேகாட்டு பக்கமிருந்து வந்தவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களை அடிமைப்படுத்திய வஞ்சகம் ஆரிய திராவிட பகையைக் கூறும்.மேலக்குடியிருப்பு மக்களுக்கும் கீழக்குடியிருப்பு மக்களுக்கும் இடையே நடக்கும் வாழ்தலுக்கான போராட்டத்தை உணர்த்துகிறது.

ஊரிலுள்ள பெண்கள் மாதவிடாய் நாட்களில் ஊருக்கு வெளியே முட்டிக் குறிச்சி என்ற சுகாதாரமற்ற குடிசையில் தங்க வேண்டும். அப்போது ஆண்கள் சமைத்து அதை( சிறிய மண்சட்டியில்) முட்டியில் வைத்து சிறுமிகளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த சோற்றுக்கு முட்டிச்சோறு என்று பெயர். பெண்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதியை பற்றி பொன்னழகி அங்குள்ள பெண்களிடம் உரையாடுகிறாள்.இந்த கொடுமையை ஒழித்தால் தான் பெண்கள் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று எண்ணிய பொன்னழகி முட்டிக்கு பிரச்சினை எப்படி மாற்றினாள் என்பதை நாவலைப் படிப்பதன் மூலம் உணரலாம்.

 பெண்களை இழிவுப்படுத்துகின்ற கொடுமைக்கு பொன்னழகி எப்படி முடிவுக்கட்டினாள் அவளால் முட்டிக்குறிச்சி எப்படி மாறுகிறது என்பதை உணர்த்தும் நாவலாக "முட்டிக்குறிச்சி " உள்ளது.

ஸீரோ டிகிரி இலக்கிய விருது 2023 ஆண்டு பெற்றுள்ளது..
எழுத்தாளர் சோலச்சியின் முதல் நாவல் முத்தான நாவலாக அமைந்துள்ளது.மனம் நிறைந்த வாழ்த்துகள்.
விலை ₹320
எழுத்து பிரசுரம் சென்னை

Tuesday, 4 July 2023

மாமன்னன்

மாமன்னன் 
உண்மையில் நடிப்பில் வடிவேலு மாமன்னன் என்று நிரூபித்த படம்.
பண்பாடு இல்லாத அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளை ,அரசியல் பண்பாடு தெரிந்தவர் வெல்ல முடியும் என்று உரைக்கும் களம்.
வாழ்வியல் உண்மை கதையாக ,கதையே இங்கு நாயகனாக உருவெடுத்துள்ளது.
சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் ,தீண்டாமை தலைவிரித்து ஆடுவதை கண்முன் காண்கிறோம். இதெல்லாம் இப்போது இல்லை என்று சமாளிக்க முடியாது .ஏனெனில் இன்னும் சாட்சியாக வேங்கை வயல் .முடிவு தெரிந்தும் தீர்ப்பு வழங்காத, அல்லது வழங்க விரும்பாத பண்பாடு இல்லாதololo அரசியல்.
தெறிக்கவிடும் வசனம் ,மனதில் பதியும் காட்சிகள், ஆதிக்க குருதி நிறைந்த செம்மண் களம்.
 தந்தைக்கு மகனுக்கும் நடக்கின்ற போராட்டம். ஒரு மகன் தந்தைக்கு என்ன செய்ய வேண்டும் என்று உணர்த்தக்கூடிய படம் .
பெண்களை அரைகுறையாக ஆடவிட்டு சம்பாதிக்க நினைக்கும் திரை உலகத்தில் இப்படியும் ஒரு படம் .இனி தமிழ்ச் சினிமா எதார்த்தத்தை காட்சிப்படுத்தாமல், நாலு பாட்டு நாலு சண்டை என ஓட்ட முடியாது. மாமன்னனுக்கு கிடைத்த வரவேற்rt.ghhjjgபு, மக்களின் எதிர்பார்ப்பை தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் உணர்த்தியுள்ளது. எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டியது தானே நியாயம்.
நாயக பாவம் இன்றி, வடிவேலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பை பெறுகிறார் உதயநிதி .தனது ஆழமான நடிப்பால் மிளர்கிறார். படத்தின் கருவாக என்ன இருக்க வேண்டும் ?
 படம் யாருக்காக எடுக்க வேண்டும்?
 படம் எதைக் கூற வேண்டும் ?என்பதில் இயக்குனர் மாறி செல்வராஜ் மிகத் தெளிவாக இருப்பது, வலுவான திரைக்கதைக்கு அஸ்திவாரம் ஆகிறது. பகத் பாசிலின் நடிப்பு அவரது திறமையின் உச்சம் எனலாம்.
 கண்டும் காணாமல் அலட்சியமாக நாம் கடந்த உண்மைகள் முகத்தில் அறைந்து நமக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்குவதை தவிர்க்க இயலவில்லை. ஏன் கடவுளாக இருந்தாலும் கூட கனக சபை ஏறிட எல்லாராலும் முடியாதல்லவா .வேரோடு இருக்கும் சாதி மத ஆதிக்க உணர்வை தகர்த்தெறியும் சிறு உளியாக மாமன்னன். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் இப்படம் வெற்றி பெறக் காரணமான அனைவருக்கும்.

Saturday, 14 April 2018

vee 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..