Friday 19 July 2024

ஆசிரியர் பணி

20.7.1988-20.7.2024

36 வருடங்கள் ஆசிரியர் பணி ஏற்று 37 ஆவது ஆண்டு துவங்குகிறது.
பணி ஏற்கும் போது அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து,அதே பள்ளியில் ஆசிரியர் பயிற்சியும் 1987 இல் முடித்து  1988 இல் அரியலூர் மாவட்டம் சிறுவளூரில் ஆசிரியராகப் பணி கிடைத்தது.அதற்கும் முன் எங்கள் குடும்ப நண்பராக அதே தெருவில் வசித்த முன்னாள் எம்.எல்.ஏ திருமிகு ஆறுமுகம் அவர்களை அப்பா (அவரது மகள் கண்ணகி என் தோழி )என்று தான் அழைப்பேன்.ஐந்தே வீடுகள் இருந்த தட்டாரத்தெருவில் கடைசி இரண்டு வீடுகள் எங்களுடையது.பெரும்பாலும் அவர்கள் வீட்டில் தான் இருப்போம்.

ஒருநாள் கண்ணகி அப்பா கைகள் இரண்டையும் மூடிக்கொண்டு ஒரு கையில் மாப்பிள்ளை ஜாதகம் இன்னொரு கையில் காது கேளாதோர் பள்ளியில் ஆசிரியர் பணி இரண்டில் எது வேண்டும் மா என்று கேட்டார்.உடனே வேலை தான் வேண்டும் நான் போகிறேன் என்றேன்.இவ போய் அங்கே என்னத்த சொல்லிக் கொடுக்க போறான்னு அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று அம்மா சொல்லிட்டாங்க.
பின்னர் ஆறு மாதம் கழித்து சிறுவளூரில் ஆசிரியர் பணி ஆணை வந்தது.
வீடு இல்லைனா பள்ளி என்று இருந்த என் வாழ்க்கை பேரூந்து பயணத்திற்கு மாறிய காலமது.

அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் வந்து அங்கிருந்து ஜெயங்கொண்டம் சாலையில் இருந்த புதுப்பாளையத்திற்கு ஜெயங்கொண்டம் பேருந்தில் சென்று இறங்கி பிறகு இரண்டு கிலோமீட்டர் நடந்து சிறுவளூர் செல்ல வேண்டும்.

1988இல் நான் வாங்கிய முதல் ஊதியம் 
 ரூ320. என்னை பேருந்தில் தனியே அனுப்ப மனமில்லாமல் அப்பா காட்டு வழியாக தினமும் 40 கிமீ பயணித்து காலையில் கொண்டு வந்து விட்டு மறுபடியும் மாலையில் அழைக்க வருவார்கள். டிவிஎஸ் 50 வண்டியில் 3 மாதங்கள் வந்தேன்.பிறகு பேருந்து பயணம் பழகி விட்டது.கீழப்பழுவூரில் பேருந்து கிடைக்காத போது சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் நீண்ட டிப்பர் லாரியில் தான் அப்பகுதி மக்கள் செல்வார்கள்.டிரைவர் கேபினுக்கு ஏறத் தெரியாமல் ஸ்டூல் போட்டு ஏறி பிறகு டயரில் கால் வைத்து ஏறக் கற்றுக் கொண்டேன்.

புதுப்பாளையத்தில் இறங்கியதும் மாணவர்களுடன் வேகமாக இரண்டு கிலோமீட்டர் நடந்து 9 மணி வழிபாட்டு கூட்டத்திற்கு வந்து விடுவேன்.ஒரு பெட்டிக்கடை கூட அந்தக் கிராமத்தில் கிடையாது. மாணவர்களுக்குத் தேவையான நோட்டு புத்தகங்கள் மருந்து பொருட்கள், அந்த கிராம மக்கள் உரிமையோடு வாங்கி வரச் சொல்லும் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு கிளம்பும் என்னை இவளா இப்படி என்று அம்மா கன்னத்தில் கை வைத்து பார்ப்பார்கள்.

இப்போதும் மாணவர்களுக்கு தேவையான மாத்திரைகள் கொண்ட சிறிய பர்ஸ் எனது கைப்பையில் இருக்கிறது.
சிறுவளூருக்கு இப்படி போக வேண்டும் என்றால் அடுத்து மாறுதலான பளிங்காநத்தம் பள்ளிக்கு பேருந்தே அதிகமாகக் கிடையாது காட்டாறு ஓடும் அந்த சாலையில் மூன்று கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.அப்பகுதியில் 1990 முதலில் டிவிஎஸ் 50 ஓட்டிய பெண் ஆசிரியர் நான் தான். பிறகு மேலப்பழுவூர் பள்ளியில் 13 ஆண்டுகள்.இப்போதும் அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் உரிமையோடு பேசுகிறார்கள் என்பதே நான் மாணவர் மனதில் இருக்கிறேன் என்ற நிறைவைத் தருகிறது.

காலம் சிமெண்ட் ஆலைப்புகை ஒவ்வாமை காரணமாக 2002 சனவரியில் புதுக்கோட்டை மழையூருக்கு வர வழைத்தது. 
அங்கிருந்து 2005 இல் இப்போது பணிபுரியும் சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2005 ஜூலை 6 ஆம் தேதி வந்தேன்.காலம் நிறைய அனுபவங்களை இந்தப் பணியில் தந்து பக்குவப்படுத்தி உள்ளது.
 மாணவர்களிடம் இருந்து தினம் தினம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

ஆசிரியராக இருந்த என்னை அம்மாவாக தத்தெடுத்து கொண்ட பவித்ரா எனக்கு சிறப்பு குழந்தைகளை எப்படி நேசிப்பது என்பதை கற்றுக் கொடுத்தாள்.நிறைய அனுபவங்கள் என்னை செதுக்கி உள்ளன.
2017 இல் புதிய பாடத்திட்டக்குழுவில் ஆறாம் வகுப்பு தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி,2022 இல் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் அயல்நாட்டு மாணவர்களுக்கான தமிழ்ப் பாடநூல் தயாரிப்பு பணி அனுபவங்கள் மறக்க முடியாத நினைவுகள்.

37 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன் இப்போதும் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவியாக...
மாணவர்கள் நேசிக்கும் ஆசிரியராக வாழ்வதே நிறைவாக கருதுகிறேன்.