Sunday 15 March 2015

வீதி மார்ச் மாதக் கூட்டம்

வீதி கலை இலக்கியக் களத்தின் மார்ச் மாதக் கூட்டம் 15/03/2015 அன்று ஆக்ஸ்போர்ட் உணவகக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தலைமைப் பொறுப்பை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். நா. அருள் முருகன் ஏற்று நடத்தினார்.

கவிஞர் நா. முத்துநிலவன் அவர்களின் முன்னிலையில் கூட்டம் துவங்கியது. கவிஞர். மாலதி அவர்கள் வரவேற்பு வழங்க முதல் நிகழ்வாக கவிஞர் பவல்ராஜ் அவர்கள் குறுங்கவிதைகளை வாசித்தார். கவிதையை மட்டும் வாசிக்காமல்  அவை பிறந்த சூழலையும் சுவைபடக் கூறினார். சில சூழல்கள் அவையோரின் விழிகளை நிறைத்தன. நிகழ்வின் சிறப்பான பங்களிப்புகளில் ஒன்றாக இருந்தது இது.

கவிஞர் ரேவதி அவர்கள் சிறுகதைகளை படித்து அவற்றை விவரித்து சிறந்த கதைகளை அறிமுகம் செய்தார். பூனை சுரண்டும் சுவர் அனைவரின் மனதையும் சுரண்டியது.

அடுத்ததாக கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிப்பை தொடர்ந்து மாணவர் அறிமுகத்தில் மாணவர் நடராசன் இணையவள் என்கிற கவிதையை வாசிக்க அவையோர் சிறந்த முறையில் கருத்தினை பதிவு செய்தார்கள். தொடர்ந்தது நடராசன் ஏற்புரை.

தொடர்ந்து கஸ்தூரி ரெங்கன் ஜே.ஆர். ஆர். டால்கீன் குறித்த தகவல்களை அவையினருடன் பகிர்ந்துகொண்டார்.

சிறுகதை எழுத்தாளர் திரு.சுரேஷ் மான்யா அவர்கள் அவஸ்தை என்கிற யூ.ஆர். அனந்தமூர்த்தியின் நாவலை விரிவாக அறிமுகம் செய்தார்.

கவிஞர் வைகறை விழாவின் நன்றியுரையைத்தர விழா இனிதே நிறைவடைந்தது.

விழாவிற்கு முதன் முதலாக புதுகை கவி மன்றத்தின் நிறுவனர் திரு. நிலவை பழனியப்பன் வருகை தந்திருந்தார். பல்வேறு பணிகளுக்கிடையே இந்நிகழ்வினில் பங்கேற்று சிறப்பித்தனர் ஆன்றோர்கள்.

விழாவின் ஏற்பாடுகளை திரு.சுரேஷ் மான்யாவும் திரு.கஸ்தூரி ரெங்கனும் செய்திருந்தனர். மிகவும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்ட இக்கூட்டத்தில் சான்றோர் பலரும் வியப்புறும் வண்ணம் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பை இதழ் சரவணக்குமார், மூ.தூயன் போன்றோர் முதன் முதலில் கூட்டத்தில் கலந்து கொண்டாலும் தங்களது இருப்பை அழுத்தமாக பதிவு செய்தனர்.

கவிஞர் ரமா ராமநாதன், தீக்கதிர். மதியழகன், முனைவர். துரைக்குமரன், தனது முக்கியப் பணிகளை துறந்து விட்டு வந்த குருநாத சுந்தரம், மரியாதை நிரம்பிய புலவர். கஸ்தூரி நாதன், மாவட்டத்தின் ஆங்கில ஆசிரியர் அந்தோணி, பாண்டியன் புத்தக அகம் திரு.முத்துப்பாண்டியன் உட்பட பலரும் கலந்துகொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.

வழக்கம்போலவே கவிஞர் கீதா, கவிஞர் மாலதி மற்றும் கவிஞர் நீலாஅவர்களும் விழாவின் நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தனர்.  

2 comments:

  1. ஓ! அடுத்த மாதம் படிக்கவேண்டிய அறிக்கை இப்போதே தயாராகி விட்டதுபோல... “வீதி“நண்பர்கள் எல்லாம், தத்தம் வலைப்பக்கத்தில் இந்த வலையை இணையுங்கப்பா... நான் ஏற்கெனவே இணைச்சாச்சு.. எல்லாரும் வீதிக்கு வரணும்ல? “வீட்ட விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம் - அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்“ - க.தா.

    ReplyDelete
  2. இணைத்த வலைப்பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்க்கலாமே? அவரவரின் வலைப்பக்கத்திலும் இந்த வீதிப் பக்கத்தை இணைக்கலாமே? அப்புறம் இந்த கமெண்ட்ஸ் மாடரேஷனை எடுத்துவிடலாம் என்பது என் யோசனை.

    ReplyDelete