Sunday, 27 March 2016

வீதி-25

வீதியின் வெள்ளிவிழா
------------------------------------
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க,

சிறப்பு விருந்தினர்களான

விகடன் பொறுப்பாசிரியர் திருமிகு பாரதி தம்பி ,

திரைப்படவிநியோகஸ்தர் திருமிகு பாலசக்தி வேலன் ,

வளரி இதழ் ஆசிரியர் திருமிகு அருணா சுந்தரராசன் மற்றும்

 திருமிகு .ஆக்ஸ்போர்டு சுரேஷ்  ஆகியோர் மேடையில் அமர விழா சிறப்புடன் துவங்கியது.

வரவேற்பு
கவிஞர் வைகறை தனக்கே உரிய நடையில் அன்பாக அனைவரையும் வரவேற்றார்....

அறிக்கை வாசித்தல்
கவிஞர் கீதா வீதி எவ்வாறு கூடியது,வீதியென பெயர் வந்த முறை,வீதியில் தலைமை பொறுப்பேற்றவர்கள்,கலந்து கொண்டு சிறப்பித்த சிறப்பு விருந்தினர்கள்,கவிதை,சிறுகதை,கட்டுரை வாசித்தவர்கள்,பாடல் பாடியவர்கள்,இலக்கியவாதிகளை அறிமுகம் செய்தவர்கள் போன்ற செய்திகளை தொகுத்து  அறிக்கையாக சமர்பித்தார்.வீதிக்கு இதுவரை வராதவர்கள் கூட வீதியைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் சிறப்புடன் இருந்தது.


கவிதைகள்
கவிஞர்கள் ரேவதி,கருப்பையா,எழிலோவியா ,மீரா.செல்வகுமார் ஆகியோருடன்

கவிஞர் சுகன்யாஞானசூரி
                   அடையாளம் என்ற தலைப்பில் அகதிகளின் வலியைக்கூறும் கவிதையும்.

கவிஞர் அமிர்தாதமிழ்

சிவப்பு ,வாழ்தல்,மலரட்டும் ஆகிய தலைப்புகளில் கவிதை வாசித்தார்.
           
                  வாழ்தல் என்ற கவிதையில்
”வாழ்க்கையே சிலுவையாகிப்போனதால்
தினம்தினம்
அறையப்படுகின்றன
ஆணிகள்” ஆகிய கவிதைகளையும்,

கவிஞர் மகேஸ்வரி
வீதியின் அனுபவங்களை கவிதையாகவும்,

கவிஞர் பவல்ராஜ்,

     பொய் சொல்லாத தினம்
உலக அளவில் அனுசரிக்க முடியவில்லை
காதலர்கள்,போன்ற கவிதைகளையும்
,கவிஞர் பாக்யா-வேட்டிக்கலாச்சாரம் குறித்த கவிதையினையும்,

,கவிஞர் க.மாலதி-தமிழ் மொழியின் பெருமை சாற்றும் கவிதையினையும், ,
மாணவக்கவிஞர் நாகநாதன்-வீதியின் வெள்ளிவிழா குறித்த கவிதையினையும்

பார்வையாளராக வந்து வீதியினால் இன்று கவிதை எழுதத்துவங்கியுள்ள திருமிகு மீனாட்சி -தொடுபேசி குறித்த கவிதையினையும்

கவிஞர் நிலாபாரதி [ஆத்தா நான் பெயிலாயிட்டேன்] என்ற கவிதையினையும்

கவிஞர் சச்சின்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா என்ற கவிதையினையும்

கவிஞர் முருகபாரதி-தமிழரின் அரசியல் குறித்த கவிதையினையும்

வாசித்து வீதியின் வெள்ளி விழாவைச் சிறப்பித்தனர்.

நூல் வெளியீடு

கவிஞர் நீலாவின் ”அலையும் குரல்கள்”என்ற கவிதை நூலை திருமிகு பாரதிதம்பி அவர்கள் வெளியிட,திருமிகு பாலசக்திவேலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
வீதியின் அனுபவங்கள்-

தமிழாசிரியர் கழகச் செயலர் திருமிகு குருநாதசுந்தரம்
     வீதி பிறக்க காரணமானவர்கள் குறித்தும்,வீதியின் நிறுவனர் முனைவர் அருள்முருகன் அய்யாவின் சிறப்பு குறித்தும் நினைவு கூர்ந்தார்கள்.

திருமிகு சுரேஷ்


     ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியின் நிறுவனர்....வீதி கூட்டங்களுக்கு தனது கல்லூரியில் உரிமையுடன் இடம் தந்து பேராதரவு நல்கி வருபவர்.வீதி ,அவருக்கு தக்க மரியாதை செய்து  கௌரவித்தது.தனது அனுபவங்களாகக்கூறுகையில் தமிழறிந்த சான்றோர்கள் மனதில் இடம் பிடித்ததையே தனது வாழ்நாள் சாதனையாகவும்,தானும் கவிதை எழுத வீதியே காரணமென்றும் கூறியதுடன் ,சிங்கப்பூரில் வாழும் தனது நண்பர் கவிஞர் நெப்போலியன் அவர்கள் தனது கவிதை நூலை வீதியில் அறிமுகம் செய்யக்கேட்டு கொண்டதாகவும் ,வீதியின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளதெனக்கூறி , வீதியைச் சிறப்பித்தார்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமிகு இரா.ஜெயா அவர்கள்

ஆத்மார்த்தமான முயற்சி என்றும் வெற்றியையே தரும்..வீதி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பான முயற்சிகளால் வீதி வெற்றியை அடைந்துள்ளது என ரசனையான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்.

தமிழாசிரியர் கழகத்தலைவர் திருமிகு கும.திருப்பதி அவர்கள்

விதைத்தவர் விலகி இருந்தாலும் விதைகள் இன்று விருட்சமாக வளர்ந்துள்ளன என்று வீதி மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் தோன்ற காரணமான முனைவர் அருள்முருகன் அய்யாவின் முயற்சியை நினைவு கூர்ந்தார்.

திருமிகு கஸ்தூரிரங்கன்

வீதி இன்று உலக அளவில் விரிந்து பரந்து அறிமுகமாகி உள்ளது,வீதியின் மூலம் தனது வாசிப்பு செம்மைபடுத்தப்பட்டதெனவும்,நிறைய அறிமுகங்கள் கிடைத்துள்ளதையும்,வீதியில் மட்டுமே படைப்பிற்கான விமர்சனம் உடனடியாக அளிக்கப்படுகின்றது எனவும் வீதியின் சிறப்பை கூறி மகிழ்ந்தார்.


இலக்கிய விமர்சகர் திருமிகு சுரேஷ்மான்யா

கவிதையின் தன்மை குறித்தும்,வாசிப்பின் தரம் குறித்தும் தனக்கே உரிய பாணியில் மிகச்சிறப்பாககூறினார்.அவர் கூறிய உயரமான மலையிலிருந்து கீழே விழுபவன் கீழிருந்து பறக்கும் பறவையினை எதிர்க்கும் காற்றை உணர்ந்து பரவசப்படுவனாய்...என அவர் காட்சிபடுத்திய விதம் அடடா..சூப்பர்.இன்னும் வாசிப்பும்,கவிதையையின் பாதையும் முன்னேறுதல் வேண்டும் என்றார்.

கவிஞர் சூர்யாசுரேஷ்
வீதிக்கு தனது வாழ்த்துகளைக்கூறினார்.

திருமிகு அப்துல்ஜலீல்வீதி தூய தமிழில் இருக்க வேண்டும் எனவும்..ஆங்கில கலப்பு இல்லாத படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.

திருமிகு மணிகண்டன்வீதியின் சிறப்புகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.இவர் வீதிக்கு புதியவர் என்றாலும் வீதியில் கலந்து கொள்வதை மனப்பூர்வமாக பெருமையாக கலந்து கொள்வதாக கூறி மகிழ்ந்தார்.

குறும்பட டீஸர் வெளியீடுகந்தர்வன் திரைக்களம் தயாரிப்பில்,கவிஞர் ராசிபன்னீர்செல்வம் அவர்கள் திரைக்கதை இயக்கம் செய்ய, ஒளிப்பதிவாளர் புதுகை செல்வா அவர்கள் முனைவர் நா.அருள்முருகன் அய்யாவின் பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வுப்படத்தை சிறப்புடன் வெளியிட்டனர்.தமிழனின் தொன்மையைக்கூறும் அக்காவியம் விரைவில் வெளி வந்தால் 2000 வருடத்துக்கு முந்தைய தமிழனின் நாகரீகம் என்பது கி.மு 5000 வருடத்திற்கு முற்பட்டதென உலகறியச்செய்யும்.
வீதியின் நிறுவனர் கலந்து கொள்ள வில்லை என்ற எங்களின் மனக்குறையை குறும்படம் மூலமாக வந்து தீர்த்தார் என்பது மிகையில்லை

திருமிகு ராசி பன்னீர்செல்வம் அவர்கள் தனது உரையில் தமிழனின் வரலாறு கி.மு 5000 முற்பட்டதாக உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதெனவும்,அய்யாவின் ஆய்வு குறித்த ஆர்வத்தினையும் ,ஆய்வின் தன்மை குறித்தும் பேசினார்.

திருமிகு புதுகை செல்வா

ஆய்வு படத்தின் ஒளிப்பதிவாளர் ,ஒளிப்பதிவில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கௌரவித்தல்


சிறப்பு விருந்தினர்களுக்கு கேடயமும் .புத்தமும் பரிசளித்து கௌரவித்து மகிழ்ந்தது வீதி.
தலைமை உரை

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தனது உரையில் வீதியின் சிறப்புகள்,வீதி உறுப்பினர்களின் ஆர்வம் நிறைந்த பங்களிப்பு,வீதியில் பெண்களின் பங்கு,வீதியின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.இவரே வீதியின் முன்னத்தி ஏர்....வீதியின் நிகழ்வுகள் சிறக்க சிறந்த வழிகாட்டி.இவரால் வீதி இலக்கியக்களம் குடும்ப உறவாகியுள்ளது..மனம் நிறைந்த அன்பையே வீதி அவருக்கு உரித்தாக்குகின்றது.

நூல் விமர்சனம்

வளரி இதழாசிரியர் திருமிகு  அருணா சுந்தரராசன் அவர்கள்.

வீதி உறுப்பினரான
கவிஞர் கீதாவிற்கு,

வளரி இதழின் கவிப்பேராசான் மீரா2015 விருது கிடைத்துள்ளது,

இப்பரிசை அமெரிக்காவில் வாழும் சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸும் பெற்றுள்ளார் என்று கூறி வாழ்த்தினார்.கவிஞர் நீலாவின் நூல் குறித்து பேசுகையில் பெரும்பாலான கவிதைகள் மதுவின் தீமைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதை விளக்குவதாக,மதுவின் தீமை குறித்து உள்ளதென கூறி நூலின் சிறப்புகளைப்பற்றி விமர்சனம் செய்தார்.


திருமிகு பாலசக்திவேலன்

தனது உரையில் கவிஞர் நீலாவின் சமூகச்சீற்றம் குறித்தும், அவருடனான தனது அனுபவங்களையும் விவரித்துக்கூறிய முறை சிறப்பு...மதுவின் தீமைகள் குறித்தும்  அதனால் சமூக சீர்கேடுகளைப்பற்றியும் கூறினார்.

சிறப்புரை

திருமிகு பாரதிதம்பி

சிறப்புரையில் கவிஞர் நீலாவுடான தொடர்பு,விகடனில் தற்போது எழுதி வரும் மது குறித்த கட்டுரையே நீலாவின் நூலில் கவிதையாக பிறந்துள்ளது என்றார்.

மது பழக்கம் குறித்த தனது கள ஆய்வில் மதுவினால் பெண்கள் படும் கொடுமைகளை கண்டு வருந்தியதாகக் கூறினார்.மது குறித்த அவரது ஆய்வு வியப்புக்குரியதாக இருந்தது.நகரத்து பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய போது அதிர்ச்சியாக இருந்தது.மது குடித்து விட்டு மகளை கொடுமை படுத்திய மருமகனை பொறுக்க முடியாத தாய் மருமகனையே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதை பகிர்ந்தார்.அவரின் சமூக அக்கறை நிறைந்த பேச்சு..அவருக்கு தனி மரியாதையைத்தந்தது.

ஏற்புரை

கவிஞர் நீலா தனது ஏற்புரையில் அறிவொளி கழகத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களே கவிதையாக மலர்ந்துள்ளதெனக்கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக திருமிகு ஷீலாராணி சுங்கத் இருந்த போது ,பாலியல் தொழில் புரிவர்களை திருத்த இடமளிப்பதாக கூறியது இன்னும் உத்தரவிலேயே உள்ளது .விகடன் போன்ற சமூக அக்கறையுள்ள பத்திரிக்கைகள் இதை முன்னெடுத்து செய்தால் பலன் கிடைக்கும் என்றார்.தனது முன்னேற்றத்திற்கு கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் ஊக்கமே காரணம் என்றும் கூறினார்.

கவிஞர் கீதா
வளரி இதழ் கவிப்பேராசன் மீரா 2015 விருதளித்த  வளரி ஆசிரியருக்கு தனது மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்தார்.
வீதி இலக்கிய களம் மட்டுமல்ல ஒரே குடும்பமாக திகழ்கின்றது...என்றும் கூறி மகிழ்ந்தார்.

நன்றியுரை

கவிஞர் மீரா செல்வக்குமார் கவிதை நடையில் வீதி வெள்ளி விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றியுரை கூறினார்.

வீதி ஒருங்கிணைப்பாளர்கள்

கவிஞர் மகா.சுந்தர் மற்ரும் கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் வீதிக்கூட்டத்தை சிறப்புடன் தொகுத்து வழங்கினர்.

சிற்றுண்டி
கவிஞர் நீலா ஆலங்குடியில் நடத்தி வரும் இயற்கை உணவகத்திலிருந்து வீதி சிற்றுண்டியை வரவழைத்து அனைவருக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டியை வழங்கியது.

வீதியின் உறுப்பினர்களே விழாச் செலவுகளைப்பகிந்ர்து கொண்டு மனநிறைவுடன் விழாவை நிகழ்த்தினர்.வீதி இலக்கிய விழா வீதி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பான உணர்வால் குடும்ப விழாவாக மிகச்சிறப்புடன் நிகழ்ந்தது .
2 comments:

 1. அருமையான நிகழ்ச்சித் தொகுப்பை மகா.சுந்தரும், ஸ்டாலின் சரவணனும் அங்கு வழங்கக் கண்டேன்.
  அருமையான வலைப்பதிவுத் தொகுப்பை நீங்கள் இங்கு வழங்கக் கண்டேன். ஏப்ரல் 3ஆம் தேதி பற்றியும் சேரத்தாருங்கள்..அழைப்பிதழ் வந்ததும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.

   Delete