Sunday 3 March 2024

"கனவின் இசைக்குறிப்பு "நூல் விமர்சனம்

கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன்  எழுதிய"கனவின் இசைக்குறிப்பு " கவிதை நூல்.
நூலின் பதிப்புரையும் ,அணிந்துரையும் பேரன்பின் பிரதிபலிப்பு.
இணையரின் கனவை நனவாக்க கஸ்தூரி ரங்கன் Kasthuri Rengan எடுத்துக் கொண்ட முயற்சிகளையே ஒரு நூலாக எழுதலாம். கரம்பிடித்து இணையரை கவிதை வானில் சிறகடிக்க விட்டு பார்த்து மகிழும் அன்புத் தம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
"சிறகுகள் துளிர்க்கும் கனவு" என்ற கவிதையில் துவங்கி
" முடிவும் தொடக்கமும்" என்ற கவிதையில் முடியும் இந்த நூல் முழுவதும் வாசிக்கும் போது ,பின்னணியில் இளையராஜாவின் இசையை உணர்ந்தால் கவிஞரின் வானத்தில் நீங்களும் பறவையாக ஆகமுடியும்.
குழந்தையின் அன்பில் கரைந்த தாய் வளர்ந்த மகளிலும் குழந்தமையை எண்ணித் ததும்பும் தாய்மைக்கவிதை,
இலை , நிலா,பூநாகம் தடாகம்,
அரசியல், காதல், காணும் காட்சிகள்,
தோழியின் நிலை, வண்ணத்துப்பூச்சி, தேநீர்,உறைந்து மீளும் அங்காடி, மனம் வருடும் ஹரிஹரனின் இசை,நட்பு,பதின்மம்,வேங்கை வயல், குளம், செவிலியர், செருப்பு என பற்பல பாடுபொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டு குறியீட்டு கவிதைகள்,படிமக்கவிதைகளை எழுதி உள்ளார்.
சில கவிதைகள் முத்தம் தரும், சில கவிதைகள் வாதை தரும், சில கவிதைகள் வன்மை காட்டும்...எல்லாக் கவிதைகளிலும் மனித நேயம் வாழும்.பெரிதும் நேசிக்கும் படும் தந்தை பெரியாரின் கவிதை.

எனக்கு பிடித்த சில கவிதைகள்
"நரம்புகளில் ஊர்கிறது எறும்பு
சிலிர்த்துக் கொள்கிறது
இலை'
இக்கவிதையைப் படிக்கும் போது நமது நரம்புகள் சிலிர்ப்பதை உணர முடியும்.

"சவாரி குதிரைகளை  வரைவது தண்டனை எனக்கூறும் தோழிக்காக இரங்கும் கவிதையொன்று.
தேநீர் இவரது கவிதைகளில் பல இடங்களில் இடம் பிடிக்கிறது நமது மனங்களிலும்.
அவரது
" அகல் அளவு இதயத்தில்
தேக்கரண்டி சொல் நிறைத்து
நின்றெரியும் சிறு சுடர் _ நீ"
சுடர் பிரகாசமாக எரிந்து பல கவிதைகளுக்கு ஒளி கூட்ட மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சாத்தானின் பிள்ளைகளைப் போல கவலையற்று வாழவே நேர்மையான உள்ளங்கள் விரும்பும்..
பரிதவிப்பின் படபடப்பைக் கூறும் கவிதையாக
" செவிமடுக்கத் துணிந்த நொடிக்கு
சிலந்தி வலையில் படபடக்கும்
தும்பியின் சாயல் "சிறப்பானதொரு கவிதை.
நிறைய கவிதைகளால் நமது மனதை நெய்து வலைசெய்து பிடித்து வைத்துக் கொள்கிறார்.
புதுக்கோட்டை இலக்கிய உலகின் இவரது கவிதைத் தொகுப்பு வரவேண்டும் என்று நீண்ட நாள் கனவாக..... இந்நூல் " கனவின் இசைக்குறிப்பாக" இசைக்கிறது. 
பேரன்புக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டுச் சிறப்பித்த நூலில் இருந்து,
தீக்கமழும் செங்குருதி,நெகிழி உதடுகள் என பல புதிய பதங்களை முத்தெடுக்கலாம்.
சமூகத்தின் மீதான தீரா அன்பை கவிதைகளாக வடித்து,
கவிஞர் மைதிலி கஸ்தூரி ரங்கன் இன்னும் பல நூல்கள் படைத்து தமிழ் இலக்கிய வானில் தடம் பதிக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

No comments:

Post a Comment